பேட்ரிக் கவனாஹ் கவிதைகள்
தமிழில்: பெரு. விஷ்ணுகுமார்

by olaichuvadi

அரூபமானவை

நட்சத்திரவொளியில் மெய்மறந்து – முழுவதுமின்றி,
நான் வரப்புகளிலும்,
இரவின் சதுப்புநிலத்திலும் ஊடாகச் செல்கிறேன்.

அமைதியான இக் கிராமப்புறத்தில்,
பெயரிடப்படாத, வெற்றிடத்தில்,
பேய்பிடித்த நெட்டிலிங்கமரங்கள் கிசுகிசுக்கின்றன.

கருப்போ, நீலமோ,
சாம்பல் நிறமோ, சிவப்போ, பழுப்போ இல்லாத
நான் பயணிக்கும் வானம்,
ஒரு விசித்திரமான அமைதியற்ற அதிசயம்.
இந்தியனின் பார்வை
மற்றும் இடியோசை
கிரேக்கத்தின் அற்புதங்கள்,
மேகம்-நெய்த எகிப்தின் பேரொளி.

இனி பேச வேண்டாம், பேசி,
இனி உரையாட வேண்டாம்.
ஒரு நூல்-அணிந்த கதையை.

உழவன்

நான் இப்போது பசும்புல்நிலத்தில் கீழிறங்குகிறேன்
மகிழ்ச்சியுடன்.
எனது கலப்பையைக் கொண்டு
புல்வெளியில் பழுப்பு நிறத்தை வரைகிறேன்

வெள்ளி இறக்கையுடன்
அச்சமில்லாத காகத்தைக் கனவு காண்கிறேன்.

அது அழகானதென
நான் அறிந்திருக்கலாம்.

நிசப்தம் என்னுடன் நடந்து வருகிறது
எந்த கவலையுமில்லை,
ஒரு பிரார்த்தனையைப் போன்ற
அமைதியான பரவசம்.

இந்த இருண்ட புல்வெளியில்
ஒரு அழகான நட்சத்திரத்தைக் கண்டறிந்தேன்.
கடவுளை அறியும் இதயத்தில்
காலமற்ற பேருவகை.

ஒரு கரியபறவைக்கு

ஓ நாத்திகக் கவியே,
நம் கடவுளை இழக்கும் இந்த அந்தியில்
நீயும் நானும் ஒன்றே.

அமைதியான பச்சை ஏரிகளில்
மலர்கள்போன்ற இனிமையான பாடலை
மலைக்காற்று அசைக்கும்பொழுதில்
நாம் நேசிப்பவர்களாக இருக்கிறோம்

மிக உயர்ந்த நமது உரையாடலுக்காக
நாம் வாதிடுவதால்
பூமியின் சோகமான குழந்தைகள்
மிக மெதுவாக நகர்வதாகக்
கனவு காண்கிறோம்.

புங்கை மரம்

பிப்ரவரியில் நான்
குளிர்ந்த பழுப்புநிற மண்ணில்
ஒரு வெண்கலநிற இலைகள்கொண்ட
புங்கையை நட்டேன்,
அதன் பட்டுப்போன்ற இழைகளை பரவச்செய்தேன்.

கம்பிவலையிட்டு அதை ஆடுகளிடமிருந்து
பாதுகாத்தவன்
சோகமான காற்றிலிருந்தும் அதை
உறுதியாக நிலைப்படுத்தினேன்.

இப்போது அது பாதுகாப்பானது.
நான் கூறினேன்,
ஏப்ரல் என் விலைமதிப்பற்ற குழந்தையை
பசுமையான அழகிற்குத் தூண்ட வேண்டுமென.

இப்போது ஆகஸ்ட் நிகழ்கிறது, நான் நம்பியிருந்தேன்,
ஆனால், இனி நான் நம்புவதாக இல்லை,
என் புங்கைமரம் ஒருபோதும் பசித்த பருந்துகளிடமிருந்து
குருவிகளை மறைக்காது

ஒரு பழைய மரக்-கதவிற்கான முகவரிகள்

காலம் மற்றும் வானிலையால் சேதமாகியிருந்தது, விறகுக்கும் அரிதாகவே
பொருந்தவல்லது; அதன் சுருக்கங்களை மறைக்க
துளியளவு வண்ணப்பூச்சும் இல்லை, மேலும் அது அறுபடும் சத்தம்
கரகரவென மௌனத்தை உடைக்கின்றன- துருப்பிடித்த கீல்கள்;
வாடிய கை முள்கம்பியின் பிடியைச் சுற்றிய
பழைய தாள்ப்பாளை மாற்றுகிறது கேடான கவர்ச்சியுடன்.
நீங்கள் தொங்கும் அந்த நெட்டிலிங்க மரம் அழுகிவிட்டது
மேலும் அதன் ஆரம்பகால அழகுகள் அனைத்தும் மறந்துவிட்டன.
பசுக்கள் திறந்த நிலப்பகுதியில் சுற்றித்திரிவதில்லை என்றால்,
இந்த இடைவெளியில் நீண்டகாலத்திற்கு முன்பே
மற்றொரு காவலாளியைக் கண்டுபிடிக்க வேண்டும்.
பழைய மர வாயிலே, அவர்கள் உங்களைக் கண்டு சிரிக்கக்கூடும், மேலும்
அவர்கள் உம் கைகாலுறுப்புகளைத் துண்டாக்கி சேற்றில் தள்ளக்கூடும்.
அதன்பிறகு நான் உங்கள்மேல் சாய்ந்துகொள்ள மாட்டேன்,
கரையில் கூழாங்கற்களைக் கனவு காண்பேன், அல்லது
கவர்ச்சியாக நெடுவரிசையாய் அடுக்கப்பட்ட புல்தரையின் புகை
சொர்க்கத்தைப்போல் வெண்மையாக்கப்பட்ட ஒரு குடிலின்
புகைபோக்கிகளிலிருந்து மேலெழுவதைக் காண்பேன்.
இங்கே நான் நியாயமான காதலை உண்மையாகவே
பேணி வைத்திருக்கிறேன்.
நாங்கள் அனைவரும் அன்புக்குரியவர்களாக இருந்தபோது
நீங்கள் புதியவர்கள்; மேலும் உங்கள் நம்பிக்கைக்குரிய முதுகிலே
சிரிக்கும் கண்களைக்கொண்ட பள்ளி மாணவர்களை
நான் பலமுறைப் பார்த்திருக்கிறேன். ஆனால்,
காலத்தின் நீண்ட கை நம் புருவங்களைத் தொட்டது
நான் உங்கள் பசுக்களை, பெண்களை இழிவுப்படுத்தியவன்.
பணக்கார விவசாயிகளின் வயல்களைக் காக்கும்
இரும்பு வாயில்களை நான் எவ்வாறு நேசிக்கமுடியும்.?
அவை கடினமானவை, அன்பற்றவை, கான்கிரீட் தூண்களில்
ஊசலாடுபவை. அவற்றின் விரல்நுனிகள் பழைய
ஈட்டிகளைப்போல குறிபார்க்கின்றன.
நீங்களும் நானும் பாழடைந்த வாயிலாக இருக்கிறோம். ஏனெனில்
நாம் இருவரும் ஒரே விதியில் சந்தித்திருக்கிறோம்.

ஆசிரியர் குறிப்பு

ஐரிஷ் கவிஞரான பேட்ரிக் கவனாஹ், தனது எழுத்து வாழ்க்கையை ‘ஐரிஷ் இலக்கிய மறுமலர்ச்சியின்’ கடைசி ஆண்டுகளில் தொடங்கி கவிதை, புனைகதை, சுயசரிதை மற்றும்  ஏராளமான கட்டுரைகளையும் எழுதினார்.  அயர்லாந்தில் தேசியவாதத்தின் எழுச்சிக்கு இணையான ஒரு கலாச்சார இயக்கமாக மறுமலர்ச்சி இயக்கம் பார்க்கப்பட்டது. இது  முதலாம் உலகப் போருக்குப் பின்னர், ஆங்கில இலக்கிய பாணியிலிருந்து, ஐரிஷ் இலக்கியங்களில் கவனம் செலுத்தத் தூண்டியது.  அந்த காலக்கட்டத்தில் எழுத நுழைந்த ஒரு விவசாயியான கவனாஹ்வின் கவிதைகளில் விரிவான உருவகங்கள், கடிதங்கள், சின்னங்கள் மற்றும் அர்த்தத்தின் குறியீட்டு பயன்பாடு போன்றவற்றை நிறையக் காணலாம். அவரது கண்ணோட்டத்தின்படி, தத்துவத்தை அப்பட்டமாக நெருங்கிச் செல்லாது தன்னைச் சுற்றிய உண்மைகளையும், வாழ்வு குறித்த தன் தேடலுக்கு அறிவுஜீவியாக அல்லாது உணர்ச்சிவசப்பட்ட தன்மையிலேயே விடைகாணும் உத்தியாக கவிதையை புரிந்து வைத்திருந்தார் எனக் கூறலாம். ஐரிஷ்-ன் மூத்த கவியான வில்லியம் பட்லர் ஈட்ஸ்க்குப் பின்னே, கவிதையின் போக்கினை மடைமாற்றிவிட்டவர்களில் இவரை குறிப்பிட்டுக் கூறலாம். மேற்கண்ட இந்தக் கவிதைகள் யாவும் பெங்குவின் வெளியீடான ‘collected Poems of Patrick Kavanagh’ edited by Antoinette Quinn என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

பிற படைப்புகள்

Leave a Comment