வே.நி.சூர்யா கவிதைகள்
வே.நி.சூர்யா

by olaichuvadi

 

முன்பு மாதவி நடந்து சென்ற அதிகாலை வீதிகள்

காகமென பறக்க தயாராகின்றன

ஆயுளின் புராதன எதிர்மறை எண்ணங்கள்

மிதத்தலின் சுதந்திரத்துடன் சைக்கிள் ஓட்டுகின்றன

பனித்துளிகளென காற்றில்

மெய்யும் பிரமையும் கடந்த காலத்திய ஞாபகங்களை பரப்புகின்றன

எருக்கஞ்செடிகளெல்லாம் சந்தோஷத்தில் அழுதழுது சொல்கின்றன

அவள் பத்தொன்பது வயதோடு மறுபடியும் பிறந்திருக்கிறாள்

அவள் பத்தொன்பது வயதோடு மறுபடியும் பிறந்திருக்கிறாள்

 

நீண்ட நாளுக்கு பின் சந்தித்துக் கொண்டோம்

பால்யக்கால ஞாபங்களையெல்லாம் பேசிக்கொண்டோம்

அவன் அழுதான்

நான் என் கண்ணை துடைத்தேன்

பின்பு ஒரு ரயிலில் ஏறினோம்

ரயிலும் புறப்பட்டு விரைந்தது

சற்று நேரத்தில் பயணச்சீட்டு பரிசோதகர் ஏறினார்

பயணச்சீட்டு எடுத்திருக்கவில்லை

மேலும் அபராதம் செலுத்த பணமும் இல்லை

எப்படியோ கெஞ்சி அழுது (ஏற்கனவேஅழுதுகொண்டிருந்தோம்)

ரயிலைவிட்டு இறங்கினோம்

பால்யக்கால ஞாபங்களை யெல்லாம் பேசிக்கொண்டோம்

அவன் அழுதான்

நான் என்கண்ணை துடைத்தேன்

பின்பு ஒரு ரயிலில் ஏறினோம்

 

சில பிரத்யேகமான நாட்கள்தான்

அனைவரையும் செயலிழக்கச் செய்கின்றன

சலிப்பு.. சலிப்பு.. சலிப்பு

சுவரேறிக் குதிப்பவனைப் போல பிரக்ஞையைத் தாண்டியது என் வீடு

நிழலை சுருட்டிக்கொண்டு வெகுதூரம் நடந்தேன்

சமயங்களில் அதுதான் காதல் துணையாக இருக்கிறது

சாலையோரங்களில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த

மஞ்சள் விளக்குக்கம்பங்கள்

எங்களைப் பார்த்ததும் எழுந்து நிற்கத் தொடங்கின

அநேகமாக அப்போது தலைகீழாக நின்று கொண்டிருந்தேன்

அறிமுகமில்லாத வீட்டின் கதவு என்னைக் கடந்தது

இரவு 01.30 மணி குளிர்ந்த இரவாக பதவியேற்றிருந்தது

இன்னும் பிறக்காத முதிய பறவையின் இறக்கைகளைபோல

இரவின் இதயம் படபடத்துக் கொண்டது

கண்ணைத் திறந்த போது மேகத்தில் தலை வைத்திருந்தேன்

கீழே யாருமேயில்லை உலகை எதிர்கொள்ள

 

பிற படைப்புகள்

Leave a Comment