உதுமான் நான் உலகளந்தப்பெருமாள் பேசுகிறேன்

by olaichuvadi

1

உனது எல்லாப்
பிரயாணத்தின் போதும்
பிங்களப் பன்றி இடப்பக்கமாக
கடக்கிற சுப நிகழ்ச்சி நிகழ
பீடைப்பற்றும்
இத்தேசத்திற்குப்
வந்து சேர்கிறாய்
உனது அதிர்ஷ்டம்
குளிர்ந்த குளங்களும்
எண்ணற்ற பறவைகளும்
உள்ள சிரேட்டத்தை
காணும் பாக்கியம் வாய்க்கிறது
நீ இங்கு தீடீரென
ராஜனாகவே மாறுகிறாய்
சர்வமும்சித்திக்கிறது உனக்கு

அதனால்
சகலத்தையும்
மாற்றத்தொடங்குகிறாய்

நீ தொடங்கியிருக்கும்
அவச்சின்னங்களை
இதற்கு முன்பு
பெருந்துக்கத்திலும்
எனது மூதாதையர்
நினைவூட்டியதில்லை

தற்போது எனது நிலம்
மிகுந்த கோடையில்
காய்ந்து கிடக்கிறது
காடைகளும் கௌதாரிகளும்
குறுக்கும் நெடுக்குமாக
ஓடிக்கொண்டிருக்க

நான் வெகுண்ட மனத்தோடு
இந்த வெய்யிலில் காய்கிறேன்
கானல் முகத்திலறைகிறது

உக்கிரமாகிறது மனது
ரௌத்திரம் நிலைகொள்கிறது
அகோரம் அகோரம் என்றது
உள்ளிருக்கும் குரல்
எங்கோ வடதிசையிலிருந்து
நீ அனுப்பிய வீரன்
குறுங்கத்தியால் மெல்ல
என் தொண்டையை
ராவிக்கொண்டு போகிறான்
வழியும் குருதி
என்னோடு போகட்டும்.
அது
எனது நிலத்தை
எனது மக்களை
எனது மொழியை
நனைப்பத்தற்குள் ஓடிவிடு.

2

அதன் கண்கள் பளபளப்பாகவும்
மிரட்சியூட்டுவதாகவும்
சிலிர்ப்பூட்டுவதாகவும்,

அதன் தோற்றம் சமயத்தில்
எரிச்சலூட்டுவதாக,வெறுப்பளிப்பதாக
விவேகமற்றதாக,அர்த்தமற்றதாக
இருந்ததைக் கண்டோம்
அதன் நாக்கு சதா பீதியிலாழ்த்தியது

அதன் நடவடிக்கைகள் குறித்து
மிகுந்த பயத்திலிருந்த
மிகுந்த சினத்திலிருந்த
நாங்கள்

ஒரு வேகத்தில் ஒட்டுமொத்தமாகக்
காறி உமிழ்ந்தோம்
தேசத்தின் மேல்பகுதியில் தலையையும்
கீழ்ப்பகுதியில் வாலையும் வைத்து
தேசத்தையே உண்ட பூரிப்பில்
சுரணையற்றுக் கிடக்கிறது
இந்த ராஜநாகம்.

3

இன்று இந்த பூமி நீலவண்ணத்தைப்
போர்த்தியதுபோல உள்ளது
அருகாமையிலுள்ள
கானகத்திலிருந்து
இருள் கவியத்தொடங்கும்.

அந்த அடர்ந்தயிருளே
சதாக்ஷியின் காலடியில்
படரும் தீராத ஒளி

சாந்தம் மிக்க சதாக்ஷி
மயானத்தின் அம்பிகை
பிணங்களின்  மாலையை
பிரியமாகக் கொள்பவள்
இடுகாட்டின் முதிர்கன்னி அவள்
ஆதரவற்றவர்களுக்கு குளிர்ந்த
நிரந்தர கற்பகதரு

இது கார்த்திகையின் பௌர்ணமி தினம்
மாரிக்காலம் மெதுமெதுவாக வருகிறது
வடதிசையிலிருந்த மலைகளின் வழியாக
சாரலும்,ஊதைக்காற்றும் வலுப்பெற
பிரயாகையின் பிணம் எரிக்கும்
மணம் நகரெங்கும் பரவுகிறது.

சோகாமேளப் புலையன் தொடர்ந்து வரும்
பிணங்கள் குறித்து தீராத கவலைகொண்டான்
அவன் மயானத்தின் தலைமைப்புலையன்
தேவி சதாக்ஷி கடந்த சில நாட்களாக
பிணங்களுக்கு அருளியே சோர்வுற்றிருக்கிறாள்
அதன் தீராத வருகை கண்டு
ஹரிச்சந்திரனிடம் உதவுமாறு
விண்ணப்பித்தான்.

3(அ)

கங்கையின் படித்துறைகளில்
மேலும் பிணங்கள் சேர்ந்து விட்டன
இந்த நதி தேசத்தின் பாவங்களைச்
சுமந்துச் செல்ல விதிக்கப்பட்டிருக்கிறது
சற்று மரணத்திற்கு ஒய்வு
கொடுக்கமுடியாத துரத்தில்
மன்னன் ஏதோ சிந்தையிலிருக்கிறான்.

பாசாங்கான அவனது கண்களுக்கு
இந்தக் கரும்புகை தெரியாது
சிதையிலிருந்து மீந்த சாம்பல்
நகரெங்கும் படிவது தெரியாது
பிணச்சிதைகளிலிருந்து
சிதறும் ஒளியை
அந்தச் சாம்பல் மணத்தை
அல்லது நாடெங்கும்
குவியும் பிணங்களென
ஏதும் அறியான்.

புலைய பிணத்தினை எரிக்க
என்னால் உதவமுடியாது
என்றான் ஹரி.

4

இதோ பிணங்களை எரிக்க மறுத்த
புலையர்களுக்கெதிராக
மயானப்பிசாசுகள் தூமகேதுக்கள்
சாக்தமுனிகள் சிரேஷ்டர்களின்
ஆலோசனையில்
மயானத்தில்அமைச்சரவை கூடியுள்ளது.
நெடிய யோசனைக்குப்பின்
பிணங்களை கங்கையில் தள்ளி
அரசின் பேரைக் காப்பாற்றுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.

5(அ)

இப்போது
கங்கையில் மிகுந்த அலங்காரம்
செய்யப்பட்ட பாடைகள் பறக்கின்றன
அந்தப் பாடைகளையும்
அவற்றை அட்டி அணைத்தபடி
போகும் பிணங்களையும்
மறைந்திருந்து காணும் அரசைப்பார்த்து
சன்னக்குரலில்
ச்சீ….என்ன இழிபிறவி இவன்
என்றான் சந்திரமதியின் கணவன்.

5

இந்நோய்த்தொற்றில்
உங்கள் வீடுகளின்மீது
வல்லூறுகள் பறப்பதைக் கண்டீர்கள்
இரவு நேரங்களில்
துர்சகுனமிக்க பறவைகளின் சப்தம்
கேட்டவாறு திடுக்கிட்டு எழுகிறீர்கள்

உங்கள் குழந்தைகள் பசியோடிருக்கிறார்கள்
உறவினர்கள்,அக்கம் பக்கத்தினர்
பசியோடிருக்கிறார்கள்
பசுக்கள் ஆடுகள் மற்றும்
வளர்ப்பு நாய்கள்
பசியோடிருக்கின்றன.

பல நூறு மைல்களுக்கு அப்பாலிருந்து
உங்களது நண்பர்கள்
தீராத பசியோடு
தங்கள் வீடுகளை நோக்கி
நடந்து வருகிறார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு
அவர்களில் பலர்
பசியால் மாண்டதாகத்
தகவல் வந்து சேர்கிறது.

மேலும் அக்கம் பக்கத்தினர்
தெரிந்தவர்கள் நேரில் பார்த்தவர்கள்,
கேள்விப்பட்டவர்கள்,திரை நட்சத்திரங்கள்,
கைதிகள்,கொள்ளைக்காரர்கள்,லட்சாதிபதிகள்
உட்பட பலர் இறந்துபோகிறார்கள்.

இதற்காக நீங்கள்
துக்கம் அனுஷ்டிக்க வேண்டும்

அரசு சொல்கிறது
நீங்கள் குலவையிடுங்கள்
அதனால் உங்கள் துக்கம் போகுமென

வீதிகளில் மொட்டைமாடிகளில்
தோட்டங்களில் வறண்ட நிலங்களில்
மத்தியானத்தில்,மாலை நேரத்தில்
இரவில் உயர்ந்த மலைச்சிகரங்களில்
உச்சிக்கிளைகளில் நின்றவாறு
குலவையிடுகிறீர்கள்

நாட்கள் பல சென்றன.

அரசு சொன்னது போலவே
உங்கள் துக்கம் போனது

உங்கள் பசி இருக்கிறது.

6

அரசு சொல்கிறது
இந்நோய்த்தொற்று காலத்தில்
மக்களின் துக்கத்தை
மட்டுமாவது போக்கியதே
தங்களுக்கு மிகுந்த
மகிழ்ச்சியளித்ததாக.

உரத்த குரலில்
நீங்கள் கேட்கிறீர்கள்

பசியை எடுத்துக்கொண்டு
துக்கத்தை தந்துவிடுமாறு

ஆனால் அது அரசிற்கு
மகிழ்ச்சியளிப்பதாக இல்லை.

7

அரசு சொல்கிறது

மாஸ்க் அணியுங்கள்
மாஸ்க் அணியுங்கள்

எங்களிடம்
அரசபயங்கரவாதமிருக்கிறது
அதனால் நாங்கள்
எந்தவிதமான மாஸ்க்கும்
அணியத்தேவையில்லை.

நீங்கள் சாதாரண குடிமக்கள்
ஆகையால் கண்டிப்பாக
மாஸ்க் அணியவேண்டும்.

அதுவும் நவதுவாரங்களையும் மூடும்படி.

8

மாய நதியிது
ஓடும் இந்நதியின்
ஒருகரை தென்பெண்ணை
மற்றொரு கரை கங்கை
பெண்ணையின் பக்கம் நான்
கங்கையின் கரையில் நீ

9

உதுமான் நான்
உலகளந்தப்பெருமாள் பேசுகிறேன்

நானிப்போது
பெண்ணையாற்றில் இறங்குகிறேன்
மிகவும் குளிர்ந்த காற்று
எலும்பையும் ஊடுருவுகிறது
இந்தக்குளிர்
மிகுந்த கிளர்ச்சியைத் தருகிறது

சற்று தூரத்தில் விவசாயிகள்
தங்கள் பசுக்களுடன்
வீடு திரும்புகிறார்கள்
அவர்களின் பின்னால்
புற்கட்டுகளுடன்
நீண்ட வரிசையில்
பெண்கள் வருகின்றனர்
மைலீயின் கூந்தல் மட்டும்
இந் நதிக்கரையை நோக்கி அலைகிறது
மைலீ நான் நாணும்படி
கூந்தலால் அழைக்கிறாள்

அந்தி மெல்ல மறைய
இவ்விரவின் ஆற்றில்
சலசலப்புகளில் மின்னுகிற
வெளிச்சங்கள் கரைக்கோயில்களில்
தீபங்கள் ஏற்றியதைக் காட்டுகிறது

ஆறு முழுவதும்
மைலியின்
மூக்குத்திச் சிதறி ஒடுகிறது.

கரையொட்டியிருக்கும்
உயர்ந்த கோயில்கோபுரங்களின்
நிழலில் ஒரு படகோட்டி சம்சாரியின்
குடும்பத்தை கரையிலிறக்குகிறான்
சம்சாரியின் எழில் மிகுந்த மனைவி
இரு முதியவர்களிடம் ஆசி பெறுகிறாள்

நல்ல இருள்கவ்விய
கோவலூரின் நதிக்கரையிலிருந்து
நான் கரையேறுகிறேன்

எனது தோளில் போர்த்திய வேட்டியும்
பிடரியில் விழுந்த கேசக்குழையும்
உற்சாகமாக அலைவது
மாதப் பிறைநாளிற்குப்
பிறகான நாள் உதுமான்.

10

உதுமான் எனக்கு
ஜௌன்பூர் நினைப்பாகவே உள்ளது
நான் அங்கு வரட்டுமா?.

11

குதுபுத்தீன் அரண்மனை
குர்ஷித்தின் ஓவியங்கள்
மஹ்மூத் சாம்பல்பக்கிரி
ஃபக்ருதீனின் சூஃபிப் பாடல்கள்
குமாரி மாலதி யாவரும்
ஜௌன்பூரில்
எப்போதும் இருப்பார்கள்.

தெற்கைப் போல அல்ல இங்கு
தொற்று உக்கிரமாக உள்ளது.

நீ இங்கு வரவேண்டாம்
கடந்த நோய்த்தொற்றின்போது
கங்கையின் கரையில் புதைத்த
பிணங்களின் கபாலங்கள்
கோடையில் பல்லிளித்துவிட்டன
மிகுந்த கோரமாக உள்ளது
எனவே நீ வரவேண்டாம்.
பத்திரமாக இரு
உலகளந்தப்பெருமாள்.

பிற படைப்புகள்

Leave a Comment