எம்.யுவன் கவிதைகள்

by olaichuvadi

சங்கிலி

அது ஒரு பறவையின் கதை.
இலக்கின்றிப் பறத்தலின்
கதையாக இருந்தது. அதேவேளை,
புலப்படாப் பரப்பைத்
திறந்து வைத்த காற்றின்
கதையாகவும் இருந்தது. ஆமாம்,
அப்படித்தான் இருந்தது,
சீறிவந்த அம்பு தைக்கும் வரை.
அம்பின் வேகத்தில் பின்னோக்கிப்
பாய்ந்து
வேடனின் கதையானது.
அவன் பசியின் கதையானது.
குருதி வழிய உயிர் நீங்கியபோது
முடிந்துபோன வாழ்வின் கதையானது.
அப்புறம் ஒரு முழு வாழ்வு
கதையாக மட்டும் மீந்து போனது.

பின்னர்
இதைச் சொல்லும் என் கதையானது
ஏந்தி வரும் தாளின்
கதை ஆனது.
இப்போது
வாசிக்கும் உன் கதைபோலவே
தோன்றவில்லை?!

***

புராதனக் கோயில் விமானத்தில்
பன்னெடுங்காலமாய் ஒட்டிக்
குந்தி வெளிறிய  புறா
ஏனென்றே தெரியாமல்
பறந்து செல்ல முனைந்தது.
எண்ணற்ற மின்னல்களை
இடிகளை பொழியும்  தாரைகளை
ஓயாமல் உரசும் காலத்தை
தாண்டிவந்தபோது இல்லாத
அவசரம் இன்று ஏனோ.

கணக்கற்ற
தூதுப் புறாக்கள்
பந்தயப் புறாக்கள்
காதல் புறாக்கள்
பறந்து கடந்த வானம்
மேகத் துணுக்கும் இன்றி
வெறிச்சிட்டு இருந்ததுவோ

கோபுரத்தை நீங்காது
அழுத்தி வைத்த விசையேதான்
மண்ணை நோக்கி
ஈர்த்ததுவோ,
கீழ் நோக்கி உடல்
இழுபடும் அதே வேகத்தில்
உயரத் துடித்த  ஆன்மாவின்
உந்துதலோ

காலங்காலமாய் ஒடுங்கி
விரிய மறுத்த இறக்கைகளை
மீறி
மேல்நோக்கி எழும்பி
அல்லாடி அல்லாடி
மெல்ல மெல்ல இறங்கியது

மிகச் சில கணங்கள்
தவித்ததுபோல் தயங்கியபின்
தரையில் மோதித்
திப்பிகளானது
சுதைப் புறா.

ஒற்றைச் சாட்சியாய்
நின்றிருந்தேன் –

கட்டற்றுத்  திறந்திருந்த
கோவில் திடலில்
மட்டற்று நான் நிரம்புவதை
தீனமாய் உணர்ந்தவாறு.

***

கண்ணாடிப் பழங்கள் உண்டு
பசியாறுவேன்
மரவட்டை ரயிலேறி
பரதேசம் போவேன்
சிரட்டை நிரம்பிய சமுத்திரத்தில்
திமிங்கிலம் நீந்தியதைக்
கண்டதும் உண்டு

எப்போது கிருமி
எப்போது விசுவரூபன்
எப்போது தூயன்
எப்போது கயவன்

எப்போது
எல்லாமாய் இருப்பவன்
எப்போது ஏதிலி
என்றுரைக்கும் கண்ணாடி
எப்போதும் விரோதி எனக்கு.

மற்றபடி, துக்கமோ
இன்பமோ உறக்கத்தை
சற்றே
விலக்கும்போது
தானாய் நீள்கிறது
என் நாள்.

கண்கூசும்
நனவின் மாயப்பாட்டையில்
யாசித்துத் திரிய
வாய்த்திருக்கிறது எனக்கு.

அழுகிய பழமோ
ஊசிய பண்டமோ
திருவோட்டில் வீழ்கையில்
அமுதமெனப் புசிக்கும்
வல்லமையும்தான்.

***

ஏன் என்னைக் கைவிட்டீர் என
வெட்டவெளியை நோக்கி
உரத்து அரற்றியது
பலவீனத்தின் கணமா
நம்பிக்கையின் தடயமா

எல்லாமே என் செயல் என்றது
ஆணவத்தின் அறிவிப்பா
ஆதுரத்தின் சான்றளிப்பா

நீரில் சொட்டிய  பால்
நிபந்தனையின்றிக் கலப்பது
ஐக்கியத்தின் இசைவா
கையறு நிலையின் ஒப்புதலா

ஒரு கணம் மண்ணில் தெரியும்
வானம்
மறுகணம் தன் இடம்
மீள்வது
ஒருமையின் பாவனையா
இருமையின் உறுதியா

எதிரெதிர்த் துருவங்கள்
ஒரே பூமியில் திகழ்வதென்ன
வரமா சாபமா

கேள்வியின் முனையில் பதிலும்
பதிலின் முனையில் கேள்வியும்
தொங்கித்  தொடர்வது
விசனமா இன்பமா

பிற படைப்புகள்

Leave a Comment