பெரிய வண்டியில்
பறந்து கொண்டிருப்பவனின்
பின்னிருக்கைக்காரி
நடைவாசியான என்னில்
யாரையோ…
மிக ஆவலமாய் தேடி…
அவசரமாய் திரும்பியவள்–
ஏமாற்றத்தில்
துவண்டு போகிறாள்
முந்தாணையை உருவி
விசிறிக் கொள்கிறாள்.
உலர மறுத்து
மறைவிலோடி–
ஒளிந்து கொள்கின்றன…
துளிகள்.
கும்பிட்டப் பிறகு
நீயே…
குளிர வைத்துவிட்டும்
போயிருக்கலாம்.
கடைசி மிடறுக்கும்
வழியின்றி
அநாதரவாய்…
செத்துக்கிடக்கிறது
உன் தீபம்.
வலிந்து திணிக்கப்பட்ட
வதை வாழ்வில்
வாய்த்த மழலை.
மறக்கவே முடியாமல்
நிறைந்தே கிடக்கிறவனின்
ஏதேனும்
ஒரு சிரிப்பை, அசைவை
அதனில்
காண்கிறபோதெல்லாம்…
புகைபடிந்த
தனது பழைய வாழ்க்கையில்
புதைந்து போகிறாள்.
பொறித்தக் குஞ்சுகளின்
விதவிதமான நிறங்களை
காணுகிற போதெல்லாம்
வண்ண வண்ணமாய்
வந்துபோன…
சேவற் கணங்களில்
தொலைந்து போகிறது
கோழி.
சிறகுகள் அரும்பாத
கருக்கூடிய குஞ்சின்
கூரிய அலகு
தட்டித் தட்டி
வானத்தையே
திறந்து விடுகிறது.
கடைசி இலையின்
விடைபெறலை
உறுதிபடுத்தியப் பிறகே…
முதல் துளிரின்
வரவேற்பிற்கு
ஆயத்தமாகிறது
மரம்.