அபயம்
விரிந்து கிடக்குமிவ்
விண்ணிற்கும் கீழே
விம்மிப் பெருத்த கனவுகளோடு
வியர்த்தமாய் அலைந்திடும்
எம் தேகத்துள்
மூச்சிழையும் மட்டும்
பூச்சிகளின் நாதரே,
மண்ணிற்குமுள்ளே
உம் பசி பொறுத்தருள்வீராக!
மரித்த
மறுகணத்திலிருந்து,
மட்கி அழியத் தொடங்கும் தசைகளோடு,
ஈசனோடாயினும்
கொண்டிருந்த
ஆசையனைத்தும்
அவிந்து போகும்.
மேலும் சில காலம்
மீந்து நிற்கும்
எலும்புகளில்
மிஞ்சியிருக்கும் உப்பு
உமக்குணவாகும்.
உற்ற துணை
ஒரே கூரையின் கீழ்
ஒருவரை மற்றது
உற்றுப் பார்த்தவாறு
உடனுறைவதன்
உதாசீனம்
பொறுக்கவியலாது
பொங்கிவழிந்த
போதொன்றில்
ஒழிந்து போகட்டும்
உபத்திரவமென்று
ஊருக்கும் புறத்தே
ஒதுக்கமாய்
ஓரிடத்தில் விட்டுவிட்டு
ஓய்வாக நடந்து வந்து
வீட்டுப் படியேறினால்
வாலை குழைத்தபடி வந்து
காலை சுற்றுமதைக்
காணவும்
தலைக் கொதித்துப் போய்
ஒங்கியொரு எற்றுவிட
சுருண்டு ஒரு பந்தென
சுவற்றில் மோதிச் சரிந்தது
மெல்லிய கேவலுடன்
மீளவும் எழுந்து நின்று
ஏனெனப் பார்க்க
எனக்குள் எதோவொன்று
உடைந்து சிதறிற்று
அடிபட்டதை
அள்ளியணைத்து
கன்னத்தோடு இழைத்து
கண்ணீர் உகுக்கையில்
புரிந்தது
என் விதியோடு
அறுத்தெறியவியலாதபடிக்கு
பிணைக்கப்பட்டிருக்கும்
நட்சத்திரத்தின்
நகல் அதுவென.
தொன்மம்
காலடித் தடங்களை
கவனமாக அழித்தாயிற்று;
உறுமல்கள் ஒவ்வொன்றையும் உற்றுக் கேட்டு
நினைவினின்றும்
நிரந்தரமாய் நீக்கியாயிற்று;
கதிரொளி நுழையத் தயங்கும்
கானகமதில்
இன்று புலிகள் ஏதுமில்லை.
இருப்பினும்
இருளின் நிழல் மறைவில்
இப்போதும் உலவுகின்றன
நிறைய நிறைய வரிகளோடு
நீளமான வாலும் கொண்ட
கதைகள்.