பெரு.விஷ்ணுகுமார் கவிதைகள்
பெரு.விஷ்ணுகுமார்

by olaichuvadi

 

வெகுநாளைக்குப்பின்பு

இன்று சாலையில் ஒரு நல்ல விபத்து

சிறிய லாரிதான்

லேசாக நசுக்கியதற்கே

அனைத்து பற்களும் நொறுங்கிப்போய்

அடையாளம் தெரியாதளவு அவர் முகம்

சிதைந்துபோனது

எனக்கோ பெரிதாய் ஒன்றும் தோன்றவில்லை

இதெல்லாம் பழகிவிட்டது

ஏனெனில் இது

சில வருடங்களுக்கு முன்பு

இறந்துபோன என் நண்பனை

நினைவூட்டுகிறது

அன்றைய நாள் தாளமுடியாதளவு

உட்சபட்ச வலியில்

நொறுங்கிப்போனேன்

அன்றைய நாளை ஒப்பிடும்போது

இந்த விபத்தெல்லாம் ஒன்றுமேயில்லை

என் நண்பா

பேசாமல் நீயும்

இன்று இறந்துபோயிருக்கலாம்

 

நகரத்தின் அத்தனை

திருஷ்டி பொம்மைகளுக்கு மத்தியில்

ஒருநாள் அதிசயமாய்

ஒரு சோளபொம்மை தென்பட்டது

மனைவிக்கு காண்பிக்க

அவசர அவசரமாக அழைத்தேன்

மேலும் அந்த சோளக்காட்டில் ஒரு சிறுவன்

சோளக்கருதுகளோடு தப்பி ஓடிக்கொண்டிருந்தான்

இல்லை ஓடிக்கொண்டிருந்தேன்

அடுத்த கொஞ்ச வருடத்தில்

அச்சிறுவன் அதே காட்டை விலைக்கு வாங்கினான்

இல்லை வாங்கினேன்

அப்போது அவன் இன்னொரு சிறுவனை துரத்தினான்

இல்லை துரத்திக்கொண்டிருந்தேன்

இல்லை இல்லை

அப்போதும் ஓடிக்கொண்டிருந்தேன்

சோளக்கருதுகளை விட்டுவிட்டு

சோளக்காட்டை விற்றுவிட்டு

 

பின்பு வந்த மனைவியிடம்

இந்தா என்று

இரண்டு சோளக்கருதுகளைக் கொடுத்தேன்

அவிக்கத் தெரியாதெனினும்

வாங்கி வைத்துக்கொண்டவள்

எங்கு கிடைத்தது என்றாள்

என் பால்யகால தோட்டத்தில் என்றேன்

 

ஜன்னலுக்கு வெளியே

ஒரு கலவரம் நடக்கிறது

அதில் நீயுமில்லை நானுமில்லை

கன்னிவெடிகள் கரைபுரண்டு வருகின்றன

அதனிடம்

கருணையுமில்லை கண்ணுமில்லை

தெரியாத்தனமாய்

ஒரு கால் அதை மிதித்துவிடுகிறது

நல்ல வேளையாய்ப்போயிற்று

அக்கால்

உன்னதுமில்லை என்னதுமில்லை

 

காலையிலிருந்து அத்தனைமுறை

உடலாடிக் களைத்தவள்

எழுந்து உடைமாற்றப்போகிறாள்

விடாமல் கையைப்பிடித்திழுத்தான்

“வேண்டாம் இன்று போதும்

என்னால் முடியவில்லை”

என்றவளின் கண்ணெல்லாம் சிவந்து

குரல் வாடி, முதுகு வளைந்தபடி

நொடிந்துபோய் நின்றிருந்தாள்

அவனுக்கும் சரி

எனக்கும் சரி

பாவம் என்றெல்லாம் தோணவில்லை

திமிராக அவளிடம்

நான் இந்த கானொளியை

மீண்டும் முதலிருந்து

பார்க்கப்போகிறேன் என்றேன்

என்னால் நம்பவே முடியவில்லை

அதே உணர்ச்சியோடு மீண்டும்

மெத்தைக்குப் போகிறாள்

மேலும் இந்த படத்தில்

உடைமாற்றி முடிகின்ற மாதிரியான

எவ்விதக் காட்சிகளும்

இல்லையாதலால்

கடவுளே இந்த காணொளியை

இந்த கணினியிலிருந்து

அழித்துவிடுவதைத் தவிர

இவளைக் காப்பாற்ற

வேறுவழியில்லை

 

பிற படைப்புகள்

Leave a Comment