ரயிலுக்கு மறுபெயர் நிலவெளி
வே.நி.சூர்யா

by olaichuvadi

காரணங்கள்

வரைந்த ஓவியத்திலிருந்து
வெளியே வந்த பெண் பறவையொன்று
வான் நோக்கி தனை போலிருந்த
பறவைகளை கண்டது விடுதலை ஆபத்தானதென
உள்ளுணர்வு கூற மறுபடியும் ஓவியத்திற்குள்ளே
மறைந்து கொண்டது ஒரு பறவை யென் வீட்டையே
சுற்றிவருவதற்கு இதைவிட சிறந்த காரணங்கள்
இருக்க முடியுமா என்ன

ரயிலுக்கு மறுபெயர் நிலவெளி

ஒரு நிலவெளியிலிருந்து இன்னொரு நிலவெளி
அந்த இன்னொரு நிலவெளியிலிருந்து
இன்னொரு நிலவெளியென விரைகிறது ஒரு ரயில்.
ஒவ்வொரு நிலவெளியும் அந்த ரயிலை
ஒவ்வொரு விதமாய் வரவேற்கிறது.
நிலவெளி ஏதுமற்ற நிலத்தை  அந்த ரயில்
அடையும் போது அந்த ரயிலே
ஒரு நிலவெளியாய் மாறி விரைகிறது
இன்னொரு நிலவெளியை நோக்கி

தனி ஊசல்

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும்
அச்சத்தையும் பதற்றத்தையும் ஒரு சேர தருகின்றன
திடீரென எனக்காக யாராவது கண்ணீர் சிந்தினால்
சாவின் பயம் வந்துவிடுகிறது
திடீரென எனக்கு யார் மீதாவது நேசம் பீறிட்டால்
பிரிவின் துயர் பற்றிய பயம் வந்துவிடுகிறது
இப்போதெல்லாம் நேசிக்காமலோ
நேசிக்கப்படாமலோ இருந்துவிட்டால்
தான் என்னவென
யோசித்து யோசித்து மாய்கிறேன்
பொழுதும் போனபாடில்லை

பிற படைப்புகள்

Leave a Comment