வாடா மலர்
1
நடுவயதுத்தாயும் மகளும்
சாலையைக் கடக்கிறார்கள்
தாய்க்கு நான்கு இஞ்ச் உயரம் மகள்
தாயிடம் காணமல் போகும்
ஒன்றினையெடுத்து
கால அலங்காரம்
செய்து வைத்தது போலே
இருக்கிறாள்
மகள்
மகள் ஒருமகளுடன் மீண்டும்
இதே சாலையைக் கடப்பார்கள்
பிறிதொரு நாளில்
நான்கு இஞ்ச் உயரம் அதிகம்
கொஞ்சம் கூடுதல் முகப்பொலிவு
கட்டுமானம்
கால அலங்காரம் செய்து
வைத்தது போலே
மகளுக்கு
இன்னொரு மகள்
இப்படியாக
இஞ்ச் இஞ்சாக
வளர்ந்து கொண்டிருக்கிறது
வாடா மலர்
2
உண்மையில் ஒரு மரணம் ஒரு மலர் உதிர்வது போலும் கூட இல்லை
பழம் கனிந்து இறங்குவது போலும் கூட இல்லை
மயிலிறகின் கனமும் அதற்கு இல்லை
எந்த எடையும்
இல்லை
தங்குதடையின்றி
தானாய் காத்திருந்து
நிறைவேறுகிறது
ஒன்றுமில்லாத ஒன்று
நிறைவேறுதல் போல
அஸ்தமனம்
நிகழ்வது போல
குட்டியான மீன் சந்தை
ஒவ்வொரு மீனுடனும் வந்து சேர்ந்த மணல்
நாளடைவில்
சேகரமாகி
சிறிய கடல்முற்றம் போலாயிற்று
மீன் சந்தை
விரைந்து வந்த மீன்மணத்தை நிறுத்தி
இறங்கிப் பார்த்தேன்
அலையடித்துக் கொண்டிருந்தது
கடல்
பழைய வீடு
1
வெள்ளையடித்து பூசிக் கொண்டிருந்தார்கள்
திண்ணை
நடுமுற்றம்
நாலுகெட்டு
எல்லாம் புதிதாயிற்று
பழைய வீட்டின் வெளியே வீசிற்று புது மணம்
புது மணத்துக்கு அடியில்
அப்படியே இருந்தது பழைய வீட்டின்
தொல்மணம்
2
பழைய வீட்டிற்கு
வயதும் பருவமும் பல
பதநீர்
நொங்கு
கிழங்கு
கருப்பட்டி
கற்கண்டு பருவங்கள்
3
மாமிமார் வந்து அழுதால்
எப்போதென்றாலும் உடன்சேர்ந்து பழையவீடும் அழுகிறது
மாமிமார் வந்து சிரித்தால்
கொலுசுகட்டி
குலுங்கிச் சிரிக்கிறது
4
வெள்ளையடித்தால் தீராத
ரகசியங்கள்
நான்கடியாக உயர்ந்து விட்ட
சாலைமட்டத்திற்கு
கீழே
சென்று கொண்டிருக்கின்றன
5
பழைய வீட்டைப் புதுப்பிக்க
ஒரு வழிதான் உண்டு
சுவடே தெரியாமல்
இடித்துவிடுவது