அமோகமாக பெருகுகிற வாழ்வு
கோபத்தில் சுவரில் கையை முட்டிக் கொண்டவர்
ஒரு சிறிய துளையை சுவரில் மறந்து வைத்துவிட்டுப் போகிறார்
எப்படியும் அதை மறுநாள் வந்து எடுக்க வருவார்
துளை பார்க்க அப்படியே என்னை மாதிரியே இருக்கிறதென
அப்பொழுது பூரிப்பார் பாருங்கள் என்றது அந்த துளை
அவரைப் பற்றி முழுமையாக அதற்கு மட்டுமே தெரியும்
ஏனெனில் அது அவர் சம்பாதித்த துளை
அந்த துளையைத் தான் அவருடைய அதிர்ஷ்டமாகக் கருதுகிறார்
அவருடைய காலி மனையில் பூமி பூஜையின் போது
ஒருநாள் அதை ஒரு புகைப்படமாக்கி புதிய வாழ்வைத் துவக்கினார்
அமோகமாக பெருகுகிறது வாழ்வு என்றார்
எப்படிப் பார்த்தாலும் அந்த துளை அவர் கட்டியது
பார்த்து பார்த்து அவருக்காக அவர் போட்டது
அதனால் தான் அவருடைய கையை அவரிடமே அது கொடுத்துவிட்டது
அந்த கையை எடுத்துக் கொண்டு போய் தான்
நகரெங்கிலும் துளைகளை இட்ட வண்ணமாக உள்ளார்
என்னவென யாராவது நிறுத்திக் கேட்டால்
முகத்தில் ஓங்கி ஒன்று விட்டால் சாகவிருக்கின்றவர்களை
பண்டுவம் பார்த்து வருகிறேன் என்பதைப் பதிலாகத் தருகிறார்
அந்தப் பதிலை வைத்து ஒருவர்
துளையை அடைத்து அடைத்துப் பார்த்தார் அது முடியவேயில்லை
இடைவெளி
வெகு நாட்களாக கடலையே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்
அவருக்கும் கடலுக்குமான இடைவெளியை ஒரு பொருளாக மாற்றி
அதில் அமர்ந்திருந்தார்
அந்த இடைவெளியில் தரை இருக்கிறது உயரமான எதுவுமில்லை
பாலம் என்றால் நன்றாக உட்கார்ந்து இன்னும் நன்றாக பார்ப்பாரல்லவா
ஆனால் சதா வண்டிகள் போகும் விளிம்பில் ஆட்கள் வந்து அமருவர்
வேண்டாமென்றதும் கட்டாத பாலத்திற்கு
அப்படியென்ன ரோசமென்று தெரியவில்லை
அவருக்கும் கடலுக்குமான அந்தரத்தில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது
அப்பொழுதும் கடலையே பார்த்துக் கொண்டிருந்தார்
இடிந்து விழுந்த அந்த பாலத்தைப் பற்றி அவருக்கு
எதுவுமே தெரியாதது போலிருந்தது
உலகம் என்ற வஸ்தையே கூட அவர் மறந்துதான் இருந்தார்
அவர் பார்க்கின்றதைப் பார்த்தால்
அவருக்கும் கடலுக்கும் இடைவெளி என்று இந்நேரத்திற்கு
எதுவுமே இருக்காதென்றே தோன்றுகிறது
இல்லாத இடைவெளியில் தான் ஒரு மாமாங்கம் வாழ்ந்து வந்திருக்கிறேன்
என்பது இந்த உலகிற்கு எவ்வளவு வியக்கத்தக்க ஒரு நிகழ்ச்சி
கண்ணீரின் உருண்டை வடிவம்
கண்ணீரின் உருண்டை வடிவம் என
யாரோ கண்ணீரின் வடிவில் மயங்கி சொல்லிவிட்டார்
மொத்த உருண்டைகளுக்கும் புகைச்சல்
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தூக்க முடியாது
உற்றுக் கவனித்தால் அந்தரத்தில் முட்டை வடிவில் இந்த பூமிக்கு வரும்
கன்னத்தில் இறங்கி வழிகிற போது அது நல்ல சப்பட்டை
இன்னும் என்னென்னல்லாமோ சொல்லி உருண்டைகள் குழப்பின
உருண்டைப் பாரம்பரியத்திலேயே அதைச் சேர்க்க முடியாதென
வரிந்து கட்டி நின்றன
சப்பட்டைகள் போடுகின்ற உப்புக்கரிக்கின்ற வெள்ளைக் கோடு
கண் கொண்டு காணச் சகிக்காது என
தலைப்பிற்கு வெளியேயும் சில உருண்டைகள் உருட்டின
பேசிக்கொண்டேயிருந்தால் காதை மூடிவிடுவார்கள்
யாராலும் கண்ணை மூட முடியாது
வாருங்கள் உருண்டையென்றால் என்னவென்று காட்டுவோம்
இரண்டு கைகள் நீட்டி உலக உருண்டை விளித்ததும்
பள்ளம் மேடு வெளிச்சம் இருட்டு பாராமல்
உருண்டைகள் எங்கும் அதிசயங்களை நிகழ்த்தத் துவங்கின
கண்ணகியின் ஸ்தனம் கழன்று அவள் கையில் வந்தது
சின்னஞ் சிறியவொன்று எவ்வளவு பென்னம் பெரியவொன்றைச்
செய்துவிட்டது
சின்னஞ் சிறியவைகள் இங்கு இன்னும் என்னென்ன செய்யக்
காத்துக் கொண்டிருக்கின்றனவோ