விளிம்பு
வைரவன் லெ.ரா

by olaichuvadi

“வானத்தின் விளிம்பு நீ பாத்திருக்கியா. அந்த வட்டம் கண்டையா, அழகுடே. நிறைஞ்ச மஞ்சளை அள்ளி பூசின சிற்ப பொண்ணுக்குள்ள முகம்டே அது. விளிம்பு என்ன தூரம். கண்ணு காணா தூரம்தானே. வரைஞ்சு வச்ச கோடு கணக்கா சுத்துனாப்புல மலை, எத்தனை வாட்டி பாத்தாலும் பிள்ள கிறுக்கானப்புள்ள அதே கோடு” அண்ணன் எதிரே ஓவியம் போல எழும்பியிருந்த தாடகை, வேளி மலைகளை பற்றிப் பேசிக்கொண்டே இருக்க, நான் விளிம்பையே நோக்கி கொண்டிருந்தேன். அரைவட்டமாக என் முன்னே விரிந்த நிலத்தின் பின்படமாய் வரைந்த நிழலாய் மலை எழும்பி இருந்தது. பனிதொப்பியாய் வெண்மேகம் அதன் உச்சிமுனையை தொட, சிறுவயதில் மேகத்தின் நூறுஅலையாய் எழும்பிய சித்திரத்தை நான் மலை வளர்கிறது என்றே அறிந்திருந்தேன்.

“இன்னும் கொஞ்சம்தான், நட, மூச்சு வாங்கிக்கோ. மஞ்சளை கரைச்சு, சேறு கலங்குன தண்ணில கொட்டின மாதிரி கடல பாக்காண்டமா, அப்போ நட” வேகமான நடையில் கூறியபடியே முன்நகர்ந்தான் அண்ணன். “சொர்க்கம் காண போறோம், எது சொர்க்கம், காணுற கண்ணு தானே” சொல்லியபடியே, பத்து யானை உருண்டபடி கிடந்த பாறையில் ஏறியபடி என்னைப்பார்த்து கண்ணை சிமிட்டினான் அண்ணன். பின் அருகே வந்த என்னை மேலே ஏற்றியபடி “கடலும் மலையும் கடவுளுக்க மக்கமாறு” என்றான் உரக்க சிரித்தபடி. குளிரை வாரி உருட்டிய காற்று மேலே தணுப்பை தெளித்தபடி வீசியது. “குளிருகா, கக்கத்துல உள்ளங்கையை சொருகிக்கோ. வெறைப்பு குறையும். இன்னா உச்சிக்கு வந்தாச்சு” என்றான் கையை காற்றில் வீசியபடி.

முக்கோணலாய் விரிந்த நிலத்தில் முனையெங்கும் அலை வீச, மனம் சிதறாமல் ஒரே புள்ளியில் குவிந்திருந்தது. நீர் பரப்பின் ஒரே நேராய் வெண்வொளி நீண்டிருந்தது. காற்றின் குரல் காதில் ஓலமாய் ஒலிக்க, செவி அடைத்து நின்றிந்தேன். நட்டு வைத்த புல்லைப் போல, தெங்கும் பனையும் கையால் பிடுங்கும் அளவில் தூரமாய் தெரிந்தது. விரித்து வைத்த பசும்போர்வையை போல வயலும் தெரிய, நெளியும் புழுவைப் போல ஆறு ஓடியது. “பாரு, பாத்தியா. கன்னியாரி, கும்பிட்டுக்கோ மக்கா. தேவி பகவதி. ஐஸ்வரியம் கூடட்டும்.”, செம்பிழம்பு பந்து பாதியாய் கடலில் தெரிந்தது.

இமயத்தில், அதிலும் உச்சியில் ஏறும்போது மூச்சு எல்லோருக்கும் கடுமையாக தேவைப்பட, மெலிதாய் குனிந்து கூட்டம் பனியில் பாதியாய் எழுப்பிய கம்பளி கூடாரத்தில் நின்றுகொண்டிருந்தது. ஜின் மேலே ஏறி நின்று “மிஸ்டர்.தாணு நீங்கள் பரவாயில்லை, எனக்கு சரிசமமாக நடந்தீர்கள், உங்களின் மூச்சுப்பயிற்சி கைகொடுக்கிறது”, “ஆமாம், சரிதான்” என்றேன். “வித்தியாசம் புலப்படுகிறதா, இது எங்களுக்கு வாழ்க்கை. இவர்களுக்கோ பொழுதுபோக்கு. ஆகவே சிரமப்படுகிறார்கள். நாங்கள் மலையேறிகள் அல்ல, நாங்கள் மலையில் வாழ்கிறவர்கள் இல்லையா”. மெலிதான புன்னகையை உதிர்த்தபடி “உச்சியை அடைய இன்னும் எவ்வளவு நேரம் ஆகும், நாம் சூரியனை பார்க்க வாய்ப்பு இருக்கிறதா?” கேட்டேன். ஆமாம் என்பது போல தலையை அசைத்தார். இவர்களோடு உரையாடவே ஜின்னின் இன மொழியை தெரிந்துக் கொண்டேன். இப்போதெல்லாம் இயல்பாக உரையாடுகிறேன்.

“நீங்கள் சிரஞ்சீவியை பற்றி அறிவீர்களா?” கேள்வி என்னிடமிருந்து. “எங்கள் மக்கள் எல்லாருமே அறிவோம். அவரே எங்கள் மூத்தோன். இந்த மலைதான் அவரின் வீடு, எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஏன் நம்மை எங்கிருந்தோ கண்காணிக்கலாம்.” சிறிய புன்னகையை வீசியபடி ஜின் முன்னே சென்றார். கால்களில் பலம் இன்னும் இருக்கிறது. ஜின்னிற்கு சரிசமமாய் நடப்பதே இன்னும் தெம்பை கொடுத்தது. மலையில் ஏறும் போதெல்லாம் அண்ணனின் வார்த்தைகள் காதிலே சுற்றிவரும். என்னுள்ளே படிந்த நினைவுகள், இமயத்தின் எதிரே இந்திய பெருங்கடலை நோக்கி எழும்பி நிற்கும் மருத்துவாழ்மலையை நோக்கியது. பனிக்காற்றில் சுவாசம் அதிகத் தேவையாய் இருக்கிறது. இமைகளில் மெல்லிய படலம் பனிமூடி திறக்க கொஞ்சம் சிரமப்பட்டது.

சுவாமிதோப்பு செல்ல ஈத்தங்காடில் இருந்து பிரியும் சாலையில் இருந்து நோக்கினால் மருத்துவாழ்மலை அனுமனின் தலையைப் போல இருக்கும், கன்னியாகுமரி போகும் வழியிலே பேருந்தில் இருந்தபடி ஆச்சி கதை சொல்லுவாள்,

“ராமாயணத்துல ராவணனுக்க மகன் இந்திரஜித் உட்ட அம்பு பாஞ்சு லெட்சுமணன் மயங்கி கிடப்பாரு மக்கா, அந்தாள ராமன் அழ, யாரோ ஒருத்தர் அதுக்க மருந்து இமயமலைல இருக்குனு சொன்னாங்களாம். சட்டுனு அனுமார் பெருசா மாறி, சிலோன்ல இருந்து பறந்து அங்கன போய்ட்டாரு. ஆளுக்கு மூலிகை எதுன்னு பிடிப்படல. மொத்த மலையை தூக்கிட்டு வந்துட்டாரு. அதுல விழுந்த துண்டு தான் இது, கும்புட்டுக்கோ மக்கா. பூரா மருந்திலை தான்” என விரிந்து நிற்கும் மலையை காட்டுவாள்.

கால்கள் கொஞ்சம் வலுக்குறைவு. நின்றவிடத்திலே சிலநேரம் விழுந்துவிடுவேன். கோபால ஆசான் காயத்திருமேனி எண்ணெய் தேய்த்து அப்பாவிற்கு கை உளைச்சல் எடுக்கும். அண்ணன் எங்குமே கூட்டிட்டு திரிவான். அவன் சொல்லியே இங்கே மலைக்கு வந்தேன் “மக்கா பூரா மருந்து செடி, அந்த காத்து காலுல பட்டாலே குணம் ஆய்டும். நா உன்னைய கூட்டிட்டு போறேன். விடிய காலைல போனா அங்கேர்ந்து சூரியன் கடலுக்க நடுவுல இருந்து வரும். பாக்க நல்லாயிருக்கும்.” சொல்லியபடியே சுசீந்திரம் கோயிலுக்கு போறோமென சொல்லி கூட்டிச்சென்றான்.

பொத்தையடி இறங்கி சிறிது தூரம் நடந்து மலையடிவாரத்தை அடைந்தோம். மேலே ஒரு அனுமார் கோயில் உண்டு, ஆட்கள் அவ்வப்பொழுது போவதுண்டு. மலையேற ஆரம்பிக்கும் போது விடியவில்லை. ஏற ஏற மூச்சு மாத்திரம் இழுத்து பிடிக்கவேண்டியதாச்சு. நெஞ்சு அதனாலே கனமாய் இருந்தது. அண்ணன் வேகமாய் மலையில் ஓடினான். ஆங்காங்கே சிறிய கள்ளி, நெருஞ்சி செடிகள் கால்களை பதம் பார்க்காமல் கவனமாய் நடந்தோம். தட்டையான விதவிதமான இலைகள் முளைத்த செடிகள். இதுதான் மருந்துச் செடிகளோ என்றபடியே நடந்தேன். நடையிலும் அவன் பேச்சு தொடர்ந்தது. மலையுச்சியை அடையவே எங்குமே காற்றின் ஓலம், பெரும் ஒலி ஒரே ஓசையாக ‘ஓ’வென கேட்டது. நிலம் சுற்றிலும் கடலால் சூழ்ந்து, முக்கோணமாய் இருந்தது. கரும்நீல நிறத்தில் கடல் அமைதியாக உறங்குவது போலவிருந்தது. தூரத்தில் குமரியின் பாதம் பதிந்த பாறையில் வங்காளருக்கு மண்டபம் எழும்பியிருந்தது. கிழக்கே கடல் வெள்ளி ஒளியில் மின்னியது. சுற்றிலும் காற்றில் குளிர் நிறைத்து, உடல் நடுங்கியது. “என்னா தணுப்பு பாத்தியால, இப்போ பாரு செவப்பு பந்து வெளியே அந்தால வரும். கடலு அப்படியே சிவந்தாப்புல மாறி, விளிம்பில மாத்திரம் நீலமா இருக்கும்”.

“நீங்கள் சிரஞ்சீவியை பற்றி கேட்பாதலே கேட்கிறேன். நீங்கள் மலை மாத்திரம் ஏறுபவரில்லை சரியா? மூத்தோனை தேடுபவர்”, சரி என்பது போல தலையசைத்தேன். வந்தவர்கள் மேலே வர சிரமப்பட்டு அங்கேயே கூடாரமும் அமைத்தனர். எனக்கும் கனமான குளிர் காற்று உடலை இறுக்கியது. ஜின் என்னிடம் “உங்களால் வர முடிந்தால் நான் உங்களை ஓரிடத்திற்கு அழைத்து செல்லலாமா”, “நிச்சயமாக நான் இன்னும் உற்சாகமாக இருக்கிறேன்”. வெகுதூரம் நடந்திருப்போம், பனியே மெல்லிய படலமாக சுற்றியது போல காற்று வீசியது, முதல் முறை அதற்கு உருவம் இருப்பது போல ஓர் உணர்வு. எங்களுடன் வந்தவர்கள் வெகு தூரத்தில் இருந்தார்கள். மூன்றடி கடந்து பார்வையின் ஒளி நுழைய வழியே இல்லை, சிலநேரம் ஜின்னின் தொடுதல்களால் சரியான வழியில் நடந்தேன்.

அண்ணன் முனையில் நின்றவாறு கடலையே வெறித்து நின்றான், அவன் உடலில் அசைவில்லை. நான் சுற்றிலும் பார்த்தேன், யாரோ எங்களை தொலைவில் இருந்து கவனிப்பதை போல இருந்தது. அண்ணன் எங்கோ போய்விட்டான் போல, கூப்பிட கூப்பிட பதிலில்லை. ஒரு குரங்கின் உருவம், அதன் பின்னே நடந்தேன், ஆச்சர்யமாக உயரம் அதிகம், பெரிதாக இருந்தது. படபடவென பாறையில் ஏறியது, வேகமாக நகர்ந்தது. கால்களில் எங்கிருந்து பலம் வந்ததோ எனக்கும் வேகம் கூடியது. பாறைகள், சில ஒரு ஆழ் பள்ளங்கள், மரங்கள் என இருவரும் ஓடினோம். உள்ளுக்குள் உற்சாகம் பீறிட்டது. வலியில்லை முக்கியமாக இதுவரை எங்குமே நான் விழவில்லை. இப்படியெல்லாம் யோசிக்கவும் என்ன ஆனதோ, இருபாறைகளின் இடுக்கில் விழுந்தேன். தலை கிறுவென சுற்றியது. கண்கள் மெதுவாக மூட, என் முன்னே குரங்கு சிரித்தபடி நின்றது. அதன் முகம் மனிதனின் முகம் போலவே தெரிந்தது.

“நாங்கள் தெற்கே வாழ்ந்தவர்கள், அங்கே இதை விட உயரமான மலையிருந்தது. பல்லாயிரம் ஆண்டுகள் முன்பு பூமி தன்னை மாற்றியமைக்க இடம்பெயர்ந்த நாங்கள் இங்கே வந்துவிட்டோம் என எங்கள் பழம்பாடல்கள் சொல்கின்றன. உங்கள் மொழியில் சொன்னால் இன்னும் நியோன்டர்தால் இனத்தின் மீதி என இங்கே எங்களை பரிசோதித்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறினார். அவரும் எங்களை போலவே ஆப்பிரிக்காவைச் சார்ந்தவர். மூத்தோன் இன்னும் அப்படியே இருக்கிறாராம். அவ்வப்போது தெற்கே வருவார், அங்கே இப்போது கடல் இருக்கிறதாம். வழிவழியாக அவரைப் பற்றிய சேதிகள் பாடல்களாக எங்களுக்குள் கடத்தப்படுகிறது. யாரும் அவரை கண்டதில்லை. ஆனால் அவரின் குறிப்புகள் இன்னும் இருக்கின்றன. அங்கேதான் உங்களை அழைத்துச் செல்கிறேன்”. அவரின் சொற்கள் உடலில் எங்கிருந்தோ வெம்மையை கொண்டுவந்தது.

அம்மையின் அழுகுரல், அப்பா அண்ணனை அடிப்பது, யார்யாரோ பேசிக் கொள்வது ஒலியாக காதில் நுழைந்தது. வீட்டில் இருப்பது தெரிந்தாலும், மலைக்கு சென்றது, ஒரு குரங்கின் பின்னால் ஓடியது, குழியில் விழுந்தது எல்லாமுமே கனவைப் போல தெரிந்தது. கண்ணை கொஞ்சம் நேரம் திறக்காமல் இருப்பது நல்லது எனப்படவே அதை தொடர்ந்தேன். ஆயினும் பசி விடவில்லை. கண் விழித்தேன், எதுவும் நடக்காதது போலவே எல்லோரும் இருந்தார்கள். சில நாட்கள் அண்ணன் என்னிடம் எதுவுமே பேசவில்லை.

“சோர்வாக இருக்கிறது, கொஞ்சம் ஓய்வெடுப்போம்” என்றார் ஜின். சரியென்பது போல தலையசைத்து, ஒரு சிறிய பாறையின் பின்பு பனி மூடாதவாறு அமர்ந்தோம். பையில் இருந்த ரொட்டியைப் பகிர்ந்தோம். “உங்களுடன் வந்தவர்களில் உங்களை கவனிக்கிறேன். இயல்பாகவே உங்கள் கால்கள் வேகமாக, பலமாக இருக்கிறது. பனியில் புதைந்த கால்களை இலகுவாக எடுக்கிறீர்கள், அது மிகவும் கடினம்” கூர்மையான பார்வையால் நோக்கியபடியே கூறினார் ஜின். புன்னகையை பதிலளித்தேன்.

நாட்கள் ஓடியது. அண்ணன் கூறியது போலவே, நான் எங்குமே கால் வலுவிழந்து விழவில்லை. ஒருநாள் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தேன் “லேய், மக்கா. அப்பா நல்ல சவுட்டி எடுத்துட்டாரு. உன்கிட்ட பேசுனா அடிப்பேன்னு சொன்னாரு. சரி யாருக்கும் இது தெரியாது. நீ கீழ விழுந்துட்ட, நா ஆட்டோ புடுச்சு தூக்கிட்டு வந்தேன்னு எல்லோருக்கும் சொன்னேன். நீ எங்க போன, எப்புடி அந்த பாறைக்கு மேலே கிடந்த, மயங்கி விழுந்தியா, இல்ல எதையாச்சும் பாத்து பயந்துட்டியா… சொல்லு”. “குரங்கு ஒன்னு நின்னுச்சு. ரொம்ப பெருசு, அதுக்கு பொறத்தால போய் குண்டுல விழுந்துட்டேன். அந்த குரங்கு அங்கதான் நின்னுச்சி”. நினைவில் இருந்தது இவையே. “காலுல யாரு பச்சிலைய அரைச்சு பத்து போட்டு விட்டது உனக்கு?”, “தெரிலியே, ஆனா நீ சொன்ன மாதிரி அதுக்கு அப்புறம் நா விழவேயில்ல!”, “அப்போ, அது அனுமாரு. பாத்தியா மக்கா. அதான் காலு பலமாயிட்டு”. பிறகு அண்ணனும் இதை மறந்து விட்டான், ஆனால் நானோ அடிக்கடி மருத்துவாழ்மலை வரவானேன். அந்த குழி அங்கேயே இருந்தது. தனியாய் பலமணி நேரம் இருப்பேன், இருட்டவே கிளம்புவேன். கல்லூரி கோவையில் படிக்க மலையேற்றம் வழக்கமானது, பிறகு அதுவே வேலையானது. கூடவே சிறுபிராயத்தில் நிகழ்ந்த நினைவுகளும் தொடர சிரஞ்சீவியை பற்றிய தேடல் தொடங்கியது.

இருவரும் கண்ணயர்ந்து விட்டோம், பனிப் புகையில்லாத தெளிவான காட்சி முன்னே. ஜின் எழுந்து “விடிய இன்னும் நேரம் இருக்கிறது. குகையை நெருங்கி விட்டோம். ” என்றார். உள்ளுக்குள் மெல்லிய நடுக்கம், மனம் அலைக்கழிந்து தட்டு தடுமாறியது. கால்கள் நடக்க, குகையை அடைந்தோம். உள்ளே பல அடிகள் நடக்கவும், பனியில்லாது வெதுவெதுப்பாக இருந்தது. மேலே குளிருக்காக போர்த்தியிருந்த அனைத்தையும் அவிழ்த்து கொஞ்சம் ஆசுவாசமானேன். ஜின்னும் அப்படியே செய்தார், அவரின் முகத்தை அப்போதுதான் பார்த்தேன். செம்பழுப்பு நிறத்தில் சிறிய முகம், அதனினும் பொடிக்கண்கள், உதடுகள் ஆரம்பிக்காத வாய், சப்பையான மூக்கு, நெற்றியில் சுருக்கம், இயல்பை விட ரோமங்கள் முகத்தில் அதிகம் தெரிந்தது. இவரா எங்களுடன் நடந்தார் என்பது போல வயதில் மூத்தவராக தெரிந்தார். குகையில் ஆங்காங்கே எதையோ கிறுக்கியிருந்தது. அலை அலையாய் வரைந்திருப்பது கடல் என புரிந்துக் கொண்டேன், எதிரே சிறிய மலைக்குன்று மனதிற்குள் மருத்துவாழ்மலையோ என ஐயம் எழும்பியது. வரிசையாய் பல கிறுக்கல்கள் கோட்டின் மேலே பரபரவென்று சிறிய கிறுக்கல்கள் தெங்கை நியாபகப்படுத்தியது. ஜின் ஓரமாய் அமர்ந்தபடி என்னைக் கவனித்து கொண்டிருந்தார். ஒரு கிறுக்கல் என்னை கொஞ்சம் பதட்டமாக்கியது உருவில் சிறியவனைப் படுக்க வைத்து அருகில் ஏதொவொன்று நிற்பது போலவிருந்தது. பின் சிறியவனின் காலில் எதையோ தேய்ப்பது போலவிருந்தது. குளிரிலும் வேர்க்க, ஜின்னை நோக்கினேன். ஜின் கண்களை மூடியபடி எதையோ சிந்தித்தபடியிருந்தார்.

மருத்துவாழ்மலையில் நடந்த நினைவுகள் காட்சிகளாக கண்முன்னே விரிந்தது. ரோமங்கள் அதிகம் படர்ந்த குரங்கு, வாலில்லை. என் முன்னே அது மனிதனைப் போல நின்றது எல்லாமுமே இப்போது நடப்பது போலவிருந்தது. “தாணு” ஜின்தான் என்னை அழைக்கிறார். “நான் உங்களிடம் ஒரு பழங்குடி சடங்கை கூற விரும்புகிறேன். நீங்கள் விரும்பினால்” என்றார். நிகழில் நுழைந்து சரியென்பது போல தலையசைத்தேன் “நான் ஏற்கனவே கூறியபடி நாங்கள் தெற்கே இருந்து இங்கே குடியேறியவர்கள், எங்களின் வீடு தெற்கே கடலில் மூழ்கி கிடக்கிறது. எங்களின் இனத்தில் இருந்தவர்களே வானரர்கள், அதில் ஒருவரே சிரஞ்சீவி அனுமான். அவரின் கதை உங்கள் இலக்கியத்தில் உள்ளதல்லவா! அவர் இன்னும் எங்களோடு இருப்பதை நாங்கள் நம்புகிறோம். எங்கள் இனத்தில் வயதில் மூத்தோர் ஒரு சடங்காக தெற்கே வர வேண்டும், அங்கே எங்களின் மலைக்குன்று ஒன்றுண்டு. அங்கே தங்குவோம், கடலுக்கு செல்வோம். நீராடுவோம். முன்னோர்களின் சடங்குகள் செய்வோம். ஆனால் எதுவுமே மனித உருவில் இல்லை. எங்களின் ஆதித் தந்தையை போலவே உடைகளற்று, அவர்களின் உடல்மொழியில். புரியவில்லையா! ” சொல்லிக்கொண்டே மேலாடையை கழட்டினார், ரோமம் படர்ந்திருந்தது, ஆம் ஒரு குரங்கின் உடையதைப் போல, “நாங்கள் இதை மறைக்கிறோம். மலைப் பிரதேசத்தில் இயல்பாகவே வாழ இவை உதவுகின்றன. வேறு தொழில்கள் செய்கிறோம். குறிப்பாக மலையேற்றத்தில் மூட்டைகளை தூக்க, வழிகாட்ட உதவுகிறோம். எங்களின் மூத்தோன் சிரஞ்சீவி எங்களோடு இருக்கிறார். எங்களுள் இருக்கிறார். அவரையும் மிஞ்சிய எங்கள் ஆதித்தந்தை தெற்கே இருக்கிறார், பெரும் நித்திரையில் கடலில். மலையும், கடலும் எங்களின் வீடு.” மீண்டும் உடைகளை மாற்றி “வெளியே வாருங்கள், சூரியன் உதிக்கும் நேரம்” என்றபடியே குகையின் வாயிலை அடைந்தார். விளிம்பில் சூரியன் புதிதாய் பிறந்தது, வெண்பனி தங்கம் போல தூய்மையாக ஜொலித்தது. “தாணு, உங்கள் கால்கள் இப்போது பலமாக இருக்கிறதல்லவா” என்றார். நான் அவரை நோக்கி திரும்புகையில், அவர் எதுவும் சொல்லவில்லை என்பது போல விளிம்பையே நோக்கி கொண்டிருந்தார்.

பிற படைப்புகள்

Leave a Comment