சப்னாஸ் ஹாசிம் கவிதைகள்

by olaichuvadi

1

குடைசலிலிருந்து வானத்தின்
பற்கள் உதிர்கின்றன.
இதற்கு முன்னர்
மேலெழுப்பப்பட்டவர்களின்
உடற்துண்டுகளைப் போல
குடைசல் மழை
குழிச்சதையாய்
ஒரேயடியாய் பொழியும் போதும்
வானச்சீப்பிலிருந்து பற்கள் கரையும்.
ஒரு குருவித் தலைக்கனத்தில்
மேகங்கள் மூடிய எல்லா நாட்களும்
சிதைத்துக் கொன்று
மேலெழுப்பபட்டவர்களுக்கு
துன்பமாயிருந்தன.
ஒட்டுமொத்தமாக
அவர்கள் நேசத்தின்
குடைசலில் இருந்தார்கள்.
ஒரு மின்னலின் மேல் பகுதியில்
அவர்களின் நேசத்தின்
பெரும்பகுதியை
ஒளியேற்றி இருந்தார்கள்.
அதற்கு பிறகான மழையில்
உடற்பகுதியை அவர்களாக
குடைசலில் கரைத்த போதும்
ஒளி நிர்மூலமாகவே இல்லை.

2

அய்ந்து முறை
முக்கியெழுந்தேன்.
என் முகம் கரைந்த நீரிலிருந்து
எனக்கு பல முகங்கள் காட்டப்பட்டன.
மீன்கள் என் அழுமுகத்தை
தின்றபோதிலிருந்து
வெளிறி மிதந்து ஊதும் சுளித்த முகம்
ஒரு தலைப்பிரட்டையின்
கண்களில் ஏறியிருந்தது.
பின்னர் சிரித்த முகமும்
நிலை குலைந்த முகமும்
ஆற்றிலிருந்து துர்வாடையாய்
பரவியிருந்தன.
தலைப்பிரட்டை காணாமலாகும் வரை
இழந்த முகத்தின் கவலையை இருத்த
கடைசியாக
சிதிலமற்று ஒரு முகத்தை
எனக்காய் எடுத்துக் கொண்டேன்.
அது,
வெறுப்பினால்
அய்ந்தாவது முறை முக்கியபோது
ஆச்சரியத்தோடு
கழன்றதாய் இருக்கவேண்டும்.

பிற படைப்புகள்

Leave a Comment