சந்தோஷ நிறம்
மரம் நிறைய இலைகள்
சந்தோஷ நிறமான பச்சையில்
மிளிர்கின்றன
ஒன்றை மட்டும்
தின்ன ஆரம்பித்திருக்கிறது
துயரின் நிறமான பழுப்பு
பச்சை என்ற சந்தோஷக் கைகள்
கைவிடும்போது
ஒரு இலையானது
பள்ளத்தாக்கில் அலறிக்கொண்டே
விழுகிறது
பள்ளத்தாக்குக்குள் பள்ளத்தாக்கென
அலறலுக்குள் அலறலென
விரிந்துகொண்டே செல்கிறது.
அதிசய மரம்
சாக்கடையோரம் கிடந்தவனை
தூக்கிச் சென்று
மரத்தடியில் கிடத்துகிறான்
தூரத்தில் நின்றுகொண்டு
போவோரிடமும் வருவோரிடமும்
சொல்கிறான்
அங்கே பாருங்கள்
அந்த அதிசய மரம்
தனக்குக் கீழே
நிறைய இலைகளையும்
ஒரு மனிதனையும் உதிர்த்திருக்கிறது.
வளர்ப்புக் கடிதங்கள்
கடிதங்களை
காற்றில் பறக்கவிட்டபடி செல்கிறார் தபால்காரர்
அவர் நம்புகிறார்
அவை
உரிய முகவரியை அடையும் என்று
இதில்
ஆச்சரியம் கொள்ள ஏதுமில்லை
அவர் வளர்த்த கடிதங்கள்
அவர் சொன்ன பேச்சை
கேட்கும் தானே
விளையாட்டு
கத்தை கத்தையாய்
அடுக்கப்பட்டு
கட்டப்பட்டிருக்கின்றன தாள்கள்
தூக்கினால் திணறும் எடை
பார்த்தால் அத்தனை இறுக்கம்
தாள் நுனியில் தீ மூட்டுகிறேன்
எல்லாம் பற்றி எரிகிறது
உடன் சேர்ந்து
பஸ்பமாகிறது ஏதோ ஏதேதோ
இப்போது
வெள்ளையிலிருந்து கறுப்புக்கும்
எடையிலிருந்து எடையின்மைக்கும்
மாறிவிட்டது
நான்
ஊதியூதி விளையாடுகிறேன்
அது
பறந்து பறந்து விளையாடுகிறது.
அனல்
அமாவாசை தோறும்
சித்ரா வருவாள்
என்னைப் பார்ப்பதுபோல்
வாட்ட சாட்டமான
அவனைக் காண்பாள்
அவன்
என்னிடம் பேசுவது மாதிரி
அவளிடம் பேசுவான்
அவள் நீங்கிய பின்
பந்தெனத் திரட்டி
நெஞ்சில்
தீபமாய் ஏந்திய காற்றை
மெல்ல இறக்கிவைப்பேன்.