நீண்ட இடைவெளிக்குப் பிறகு நசீரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. வழக்கத்திற்கு மாறாக ஒரு மிகச்சிறிய மின்னஞ்சல்.
“அன்பின் கெவின்,
உம்மா சற்று முன் தன் சுவாசத்தை நிறுத்தி விட்டாள். விமானத்திற்காக காத்திருக்கிறேன். நாளை சந்திப்போம்.
இறைவனே மிகப்பெரியவன்.”
நசீரை எப்படி எதிர்கொள்வது என்கிற குழப்பமான மன நிலையுடன் அவனது வீட்டிற்குச் சென்றேன்.
*
இன்னதுதான் காரணம் என்றில்லையென்றாலும் அவன் சவுதிக்குச் சென்று விட்ட பிறகு இந்த பதினைந்து ஆண்டுகளில் ஒரு முறை கூட நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டதில்லை. ஊருக்கு வரும்போது சந்திப்பதோடு சரி. மற்றபடி, வெறும் மின்னஞ்சல்கள்தான். இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் அனுப்பிய முகத்தில் அறையும் விசயங்களையுடைய அந்த மின்னஞ்சலுக்குப் பிறகு அவன் எனக்கு எந்த மின்னஞ்சலும் அனுப்புவதில்லை. அந்தக் கடைசி மின்னஞ்சலுக்கு முன்பான நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் அனைத்தும் எனக்கு கிட்டத்தட்ட மனப்பாடம்தான். சொல்லப்போனால், அவை அத்தனையும் சேர்ந்து ஓர் ஒற்றை உரையாடல்தான்.
எல்லாம் ஆரம்பித்தது இப்படித்தான்.
“அன்பின் கெவின்,
இறைவனின் அருள் எப்போதும் உடனிருக்கட்டும். இத்தனை நாள் மௌனம் கூட பல வகைகளில் நன்மையில்தான் சென்று முடிந்திருக்கிறது. நமது முந்தைய நேரடியான உரையாடல்களில் எனக்கான வாழ்வையும் அது சார்ந்த மிகப்பெரும் புரிதலையும் எனக்குத் தந்த உன்னை பல நேரங்களில் என் நெருங்கிய ஆசிரியனாகவே உணர்ந்திருக்கிறேன். ஆனால், நான் கண்டறிந்த ஒருசில விசயங்களை உன்னிடம் பகிர்ந்து கொள்ள இப்போது நேரம் வந்திருக்கிறது. புனிதமானவளாக மதிக்கப்படும் கன்னி மரியத்துக்குப் பிறந்த ஈஸா இப்னு மரியம்தான் ஜீசஸ் க்ரைஸ்ட் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உலகத்திலேயே எனக்கு மிகவும் அணுக்கமான உயிர் உனது என்பதால் நீயும் அதை நம்ப வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். ஆனால், நிச்சயம் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன். ஈஸா இப்னுதான் அல்லாவின் தூதனாக இஸ்ரேலுக்குச் சென்றவன். அங்கிருந்த உன் போன்ற, அறியாமையில் வேறு நம்பிக்கைகளைப் பற்றிப் பிடித்திருந்த அல்லாவின் குழந்தைகளை மனம் மாற்றி தாய் வீட்டிற்கு அழைத்து வருவதற்காக அனுப்பப்பட்டவன். யார் அனுப்பியது? என்ன ஆதாரம்? என்றெல்லாம் முட்டாள்தனமாக கேள்விகளை யோசிப்பதை நிறுத்தி நான் சொல்வதை உன் ஆழ்மனதிற்குள் செல்ல விடு. அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியவனாக, தனக்கான சீடர்களை உருவாக்கிக் கொண்டவனாக, பின் அவநம்பிக்கைக்கு ஆளாக்கப்பட்டு மீண்டெழுந்தவனாக சொர்க்கத்திற்குச் சென்றவன் அந்த ஈஸா இப்னு. இருந்தபோது அவனை நம்பியவர்களை விட சொர்க்கத்திற்கு அவன் அழைத்துக்கொள்ளப்பட்ட பிறகு அவனைப் பின் தொடர்ந்து வருந்தி மனம் மாறியவர்கள்தான் அதிகம். என் அருமை நண்பனாகிய நீயும் அவர்களைப் போல காத்திருப்பதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. உன் ஒவ்வொரு அசைவையும் அறிந்தவன் என்கிற உரிமையில் உன்னை இந்த அறியாமையிலிருந்து வெளிக்கொண்டு வருவது என் மற்றெல்லா வேலைகளையும் விட முக்கியமானது, புரிகிறதா? உனது தர்க்கக் கேள்விகளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் இணையத்தில் தேடிப் படித்துக்கொள். இறுதியில் நீ பழியின் எடை சுமந்த உன் முன்னோரின் சொற்களை ஒதுக்கிவிட்டு உன் வாழ்நாள் நண்பனாகிய என் கைகளோடு கைகோர்த்து உண்மையின் பக்கம் வந்தால் நான் மகிழ்வேன். அடுத்த மின்னஞ்சலில் இன்னும் பேசுவோம்.
குறிப்பு: அவசர கதியில் இதற்கு பதிலனுப்ப முயற்சிக்காதே. என் குரல் சில நாட்கள் உன் காதுகளுக்குள் ஒலித்திருக்கட்டும்.
இறைவனே மிகப்பெரியவன்.”
முதல் வகுப்பு முதல் தோளோடு தோள் கோர்த்து சுற்றித் திரிந்த நசீர் அல்ல அந்த மின்னஞ்சலில் பேசியிருந்த நசீர். கல்லூரி முடித்ததும் பல இடங்களுக்குப் பல வேலைகளுக்காகச் சுற்றித் திரிந்தான். சந்தித்துக் கொள்ள வாய்ப்புகளே அமையாத நிலையில் மின்னஞ்சல்கள் வழியாக பேசிக்கொள்ள ஆரம்பித்தோம். முதலில் எல்லாம் நட்பு சார்ந்த, கேளிக்கை சார்ந்த, எதிர்காலம் சார்ந்த உரையாடல்களாகத்தான் இருந்தன. சவுதி வாய்ப்பு வந்தபோது தயங்கியிருந்த அவனை வற்புறுத்தி அனுப்பி வைத்தது நான்தான். நல்ல வேலை, நல்ல ஊதியம், ஆடம்பரமான வாழ்க்கை. மின்னஞ்சல்கள் குறைந்திருந்த போது எதற்கும் வீணடிக்க அவனிடம் நேரமில்லை என்றே நினைத்தேன். சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு மேற்கண்ட இந்த மின்னஞ்சல் வந்தது.
ஒரு வாரத்தில் அவனுக்கு நான் பதில் அனுப்பினேன்.
“நண்பா நசீர்,
மகிழ்ச்சியும் அன்பும் பெருகட்டும். முதல் முறை அந்த வகுப்பறையில் என் தோள் தொட்டுச் சிரித்த உன் முகம் இன்னும் நினைவிலிருக்கிறது. என் அம்மாவின் மீன் கறியும் உன் உம்மாவின் தேங்காய் ஆனமும் கலந்த உணவுதான் உலகத்திலேயே எனக்குப் பிடித்த உணவு. அது அப்படி ஒரு சேர்க்கை. கிட்டத்தட்ட அதுபோலத்தான் பெரியவர்களாகி விட்ட, அல்லது அப்படி நம்பிக்கொண்டிருக்கும் உனது நம்பிக்கைகளும் எனது நம்பிக்கைகளும். சரியான அளவில் கலந்திருப்பதும் ஒன்றையொன்று ஆதரித்து நிற்பதும்தான் அழகு, இல்லையா? இந்த நீண்ட இடைவெளிக்குப் பிறகு உன்னிடமிருந்து வந்திருந்த மின்னஞ்சல் எனக்கு ஓர் அதிர்ச்சிதான். வழுக்கம்பாறை தேவாலயத்திற்கும் சுசீந்திரம் கோவிலுக்கும் சேர்ந்து சென்றதும் நாம்தானே? முழு ஈடுபாட்டுடன்தானே நீயும் என்னோடு வந்தாய்? நானும் உன்னோடு பள்ளிவாசலுக்கு எத்தனையோ முறை வந்திருக்கிறேனே! நீ தொழுகை செய்கிறபோது நானும் ஓரமாக கண்களை மூடி நின்று வேண்டியிருக்கிறேன். பண்டிகைகளின் போது நாம் சேர்ந்துதானே எல்லோருக்கும் உணவும் இனிப்புகளும் கொண்டு கொடுத்தோம். இதென்ன, இப்போது இப்படியொரு மின்னஞ்சல்? ஈஸா இப்னு மரியம் யாராக இருந்தால் எனக்கென்ன? நசீர் யாராக இருக்கிறான் என்பது மட்டும்தானே எனக்கு முக்கியம். சரி, அப்படியே ஈஸா இப்னுவே ஜீசஸ் என்று வைத்துக் கொள்வோம். அல்லாவே எல்லோருக்கும் இறைவன் என்றும் வைத்துக் கொள்வோம். அதனால் நமக்கிடையில் என்ன மாறிவிடப் போகிறது நண்பா? சரி, நமது நெருங்கிய மற்ற நண்பர்களுக்கு சிவனும் விஷ்ணுவும்தான் கடவுள். சுடலை கோவில் கொடையில் நள்ளிரவு படையல் உண்டதை மறந்துவிட்டாயோ? இப்போது அவர்களிடம் என்ன சொல்வாய்? நீயென்ன என்னை மதமாற்றம் செய்ய விரும்புகிறாயா?
குறிப்பு: அடுத்த மின்னஞ்சலில் முதல் வரியில் உன் உள்ளெண்ணத்தை தெரியப்படுத்து.
அன்பு உண்டாகட்டும்.”
*
நசீர் வீட்டு முகப்பில் தென்னையோலை போடப்பட்டிருந்தது. எங்கும் சாம்பிராணியும் ஊதுவத்தியும் புகைந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே சிறு கூட்டமாக ஊரார் முணுமுணுத்தவாறு பேசியிருக்க, நசீரின் நெருங்கிய சொந்தக்காரர்கள் தேவையான காரியங்களை கவனித்துக் கொண்டிருந்தனர். முக்காடிட்ட துணியின் ஒரு முனையை தன் பற்களால் கடித்துப் பிடித்தபடி முகம் மறைத்து அனைவருக்கும் தேநீர் கொடுத்துக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. வராண்டாவில் ஓர் ஓரமாக தன் சாய்வு நாற்காலியில் கண்மூடிக் கிடந்தார் வாப்பா. அவரருகே சென்று முழங்காலிட்டு நின்று அவரது கைகளைத் தொட்டேன்.
“வாப்பா, வாப்பா.”
வாப்பா மெல்ல கண் திறந்து என்னைப் பார்த்தார். சில நொடிகள் ஏதோ பேச வந்ததைப் போல பார்த்தவர், கண்களை இமைத்து என் கைகளைப் பிடித்துக் கொண்டார். அவரது மார்பு பெருமூச்சுடன் ஏறி இறங்கியது. நான் சற்று நேரம் அவர் பக்கத்தில் உட்கார்ந்து விட்டு சென்று மற்ற விசயங்களைக் கவனிக்க ஆரம்பித்தேன். நசீரை அழைத்து வர வண்டி அனுப்பியிருந்தார்கள்.
…
“அன்பின் கெவின்,
இறைவனின் அருள் எப்போதும் உடனிருக்கட்டும். உன் ஆத்மார்த்தமான மின்னஞ்சலுக்கு நன்றி. அதை உன்னை எழுதச் செய்த அல்லாவை நினைத்து பெருமகிழ்வு கொள்கிறேன். அல்லது நானும் நீயும் கொண்டாடும் ஈஸா இப்னுவின் கருணையால் நீ அதை எழுதியிருந்தாலும் எனக்கு பெரு மகிழ்ச்சியே. நான் உன்னை மதம் மாற்ற முயற்சிக்கவில்லை. மனம் மாற்றவே விரும்புகிறேன். மாற்றம் எப்போதும் நிகழ்வது, இல்லையா? நான் உணர்ந்துகொண்டதும் நம்புவதும் அதுதான். சிறுவயதில் நாம் செய்த எல்லாவற்றையும் இப்போதும் பிடித்துக்கொண்டிருக்க முடியுமா என்ன? இன்று, இந்த நிலையில் இருந்து யோசித்துப் பார்க்கையில் உன்னோடு தேவாலயத்திற்கு வந்திருந்தாலும் கோவிலிற்கு வந்திருந்தாலும் அதெல்லாமே என் ஆருயிர் நண்பனாகிய உனக்காகத்தானேயன்றி எனக்காக இல்லை என்றுதான் தோன்றுகிறது. தெரிந்தோ தெரியாமலோ, அதெல்லாமே உன்னை உன் அறியாமையிலிருந்து விலக்கி உண்மையின் பக்கம் அழைத்து வருவதற்காக செய்யப்பட்ட சிறுசிறு முயற்சிகள்தான். அப்போது அதெல்லாம் எனக்குப் புரியவில்லை. இன்று எல்லாவற்றின் பின்புள்ள காரணம் விளங்குகிறது. இது எதுவுமே என் செயலல்ல நண்பா. இறைவனின் விருப்பம். ஐந்து வேளை ஒருநாள் கூட விடாமல் நான் தொழுகை செய்ததெல்லாம் எதற்காக? ஒவ்வொரு வருடமும் நோன்பிருந்தது எதற்காக? சரி, அதையெல்லாம் விடு. இந்த வேலையில் நான் வந்து சேர்ந்தது எப்படி? இதெல்லாவற்றிற்கும் ஒரு தொடர்பு இல்லையென்றா நினைக்கிறாய்? எல்லாமே சர்வ நிச்சயமான உண்மைக்காகத்தான் நண்பா.
உனக்கு இதையெல்லாம் சொல்ல நானிருக்கிறேன். இந்த வாய்ப்பில்லாது நரகத்தில் உழல்பவர்கள் எத்தனை கோடி? அவர்களையெல்லாம் உண்மையின் பக்கம் கொண்டு வரவேண்டியது அறிவுடையோராகிய நம் கடமையல்லவா? இதைத்தானே ஈஸா இப்னுவும் செய்தான்? உங்கள் பைபிளில் அவனை சிலுவையில் அறைந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறதே, அவன் என்ன அவ்வளவு சாதாரணமானவனா? மூன்றாம் நாள் உயிர்த்தெழத் தெரிந்தவன் முதலிலேயே ஏன் அற்புதம் செய்து தன்னைக் காண்பிக்கவில்லை? இதெல்லாமே உருவாக்கப்பட்ட கதைகள்தான் நண்பா. அவன் சிலுவையில் அறையப்படவுமில்லை, உயிர்த்தெழவுமில்லை. அவன் ஒரு தீர்க்கமான காரியதரிசி. செயல்களின் மூலம், உழைப்பின் மூலம் அற்புதங்களை வென்றெடுத்தவன். அவனைச் சூழ்ந்திருந்த சூழ்ச்சிகள் எல்லாம் அவனுக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் அவன் கடந்து நின்ற ஒரு நாள் தன் சரீர உருவிலேயே சொர்க்கத்திற்குச் சென்றான். ஆம், அவன் செத்துப்போய் உயிர்த்தெழவில்லை, நேரடியாகவே சொர்க்கத்திற்குச் சென்றான். எல்லாம் வல்ல இறைவனோடு இரண்டறக் கலந்தான். அதன் பிறகு உருவாக்கப்பட்ட கதைகள் எல்லாமே திரிக்கப்பட்டவை தான் நண்பா.
கடந்த ஈராயிரம் வருடங்களாக அந்தத் திரிபுகளிலிருந்து மக்களை விலக்கிச் செல்ல பலரும் போராடி மடிந்திருக்கிறார்கள். ஆனால், அதில் வென்றவர்கள் தங்களோடு நில்லாது பல்லாயிரம் பேருக்கு சொர்க்கத்தையே காட்டிக் கொடுத்திருக்கிறார்கள். எனக்கு அல்லாவைக் காட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த நொடி கண்களை மூடி நான் சொன்ன எல்லாவற்றையும் மீண்டும் யோசித்துப்பார். இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் இந்த ஜீசஸின் முகம் உனக்கு அந்நியமாகப் படவில்லையா? அதெப்படி இறைவன் ஒரே ஒரு முகமுடையவனாக இருக்க முடியும்? உள்மனதைக் கேட்டுப்பார். எல்லையற்றவன் உருவமற்றவனாகத்தான் இருக்க முடியும், இல்லையா?
சரி, அதையெல்லாம் விடு. உன் தர்க்க அறிவுப்படியே யோசி. முகம்மது நபியின் வருகையை அறிவித்தவனே இந்த ஈஸா இப்னு மரியம்தான் என்று உனக்குத் தெரியுமா?
இறைவனே மிகப்பெரியவன்.”
“நண்பா நசீர்,
மகிழ்ச்சியும் அன்பும் பெருகட்டும். முதலில் ஒரு விசயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். இதைப் போல நீ நூறு மின்னஞ்சல்கள் செய்தாலும், ஆயிரம் உதாரணங்களையும் சாட்சிகளையும் என் முன் வைத்தாலும், ஏன் நம் அல்லாவோ ஜீஸசோ வந்து இதுதான் உண்மையென்று சொன்னாலும் கூட நான் இப்போது என்னவாக இருக்கிறேனோ அதை மாற்றிக்கொள்வதாக இல்லை. நீ பேசிய விசயங்களை விட இத்தனை வருடங்களில் நீ என்னை முழுக்க முழுக்கத் தவறாகத்தான் புரிந்து வைத்திருக்கிறாய் என்பதே என் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. உனக்கு ஏதேனும் மனப்பிறழ்வு இருக்குமோ என்று கூட வருந்துகிறேன். அப்படி என்னை நீ சொல்லும் உண்மையின் பக்கம் இழுத்துச் செல்லாவிட்டால்தான் என்ன? அப்படி அதுவே உண்மையாக இருப்பின் அதை நீ எப்படி உணர்ந்தாயோ அப்படியே நானும் நானாகவே உணர்ந்துகொள்ள வேண்டாமா? நீ சொல்வதற்காக மாத்திரம் நான் என் நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டுமா? முதலில், எனக்கு அப்படி குறிப்பிட்ட நம்பிக்கைகளே இல்லை. ஜீசஸ் யாராக இருந்தாலும் அல்லா யாராக இருந்தாலும் இப்போதைக்கு நான் யார், எனக்குள் என்ன நடக்கின்றன என்பதெல்லாம்தான் எனக்கு அதிமுக்கியமான விசயங்கள். ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் இறுதியிலும் பாரபட்சமின்றி எல்லோருக்குமாக எல்லையற்ற இறைவனை அல்லது இயற்கையை வேண்டுகிறேன். முக்கியமான விசயம், அது ஜீசஸும், சிவனும், அல்லாவும்தான் நண்பா. என் செயல்களை வஞ்சமின்றி, நேர்மையோடு செய்கிறேன். முடிந்த அளவு பொய்யற்று இருக்கிறேன். வேறென்ன வேண்டும்? நான் ஏன் எவனோ ஒருவனாக மாற வேண்டும்? உன் முயற்சியின் முடிவில் நான் அப்படி மாறவில்லையென்றால் என்ன செய்யப் போகிறாய் நீ? முதன்முதலாக என் தோள்மீது கை போட்ட அதே நண்பன் அப்போதும் இருப்பானா? இல்லையா? எதை நிரூபிக்க இத்தனை குழப்பங்களைச் சுமந்து வருகிறாய் நண்பா?
சரி, முகம்மது நபியின் வருகையை அறிவித்தவன் ஈஸா இப்னுவாகவே இருக்கட்டும். எனக்குத் தேவைப்பட்டால் அந்த முகம்மதுவையும் வாசிப்பேன், ஈஸா இப்னுவையும் அறிந்து கொள்வேன். ஆனால், ஒருபோதும் உன்னுடைய அனுபவத்தின் அடிப்படையிலோ, சொற்களின் அடிப்படையிலோ அல்ல நண்பா.
அன்பு உண்டாகட்டும்.”
*
நசீர் வந்து இறங்கினான். வெள்ளைநிற முழு அங்கி. பாதி நரைத்துவிட்ட நீண்ட தாடி. தலையில் வெண்தொப்பி. தொழுகையின் தடம் நெற்றியில் இன்னும் ஆழ்ந்து கருத்திருந்தது. இறங்கியதும் குனிந்து நிலம் தொட்டு சிறிது மண்ணெடுத்து மார்பில் வைத்து வணங்கி தன் தோளின் பின்புறமாகப் போட்டு ஏதோ முனகினான். எல்லோரையும் பார்த்து புன்னகைத்து தலையை அசைத்தான். அந்தச் சிறுமி அவனருகே சென்று தேநீர்த் தட்டை நீட்ட, வேண்டாமெனத் தலையசைத்து அவளது தலையில் கைவைத்து ஏதோ சொன்னான். காரின் பின்புறக் கதவைத் திறந்து உள்ளிருந்து ஒரு பையை எடுத்து குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதைத் திறந்தான். இனிப்புப் பெட்டிகள். எழுந்தவன் ஓர் இனிப்புப் பெட்டியைத் திறந்து அச்சிறுமியிடம் நீட்டினான். அவள் வேண்டாமெனத் தலையாட்டினாள். அவன் புன்னகைத்தபடியே மீண்டும் வற்புறுத்த அவள் ஒன்றை எடுத்துக்கொண்டாள்.
அப்படியே அருகே நின்ற ஒவ்வொருவரிடமும் பெட்டியை நீட்டியபடி, “இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். உம்மா இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டாள். இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள், இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்,” என்றான். எல்லோரும் அவனை விசித்திரமாகப் பார்க்க, “என்ன பார்க்கிறீர்கள், இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள், உம்மா மகிழ்ச்சியாக இருக்கட்டும். இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்,” என்று கத்தினான்.
வாப்பா இன்னும் கண் மூடியே கிடந்தார். நான் குழம்பியபடி நசீரை நோக்கிச் சென்றேன். என்னைப் பார்த்ததும் ஓடி வந்து, “கெவின், பார் நண்பா. முன்பே நான் சொன்னேன் அல்லவா? கடைசியில் அப்படித்தான் ஆகிவிட்டது பார்த்தாயா? எது எப்படியோ, இந்தா, நீயும் இனிப்பு எடுத்துக்கொள். அம்மாவின் இறுதிப் பயணத்தைக் கொண்டாட வேண்டாமா?” என்றான்.
*
“அன்பின் கெவின்,
இறைவனின் அருள் எப்போதும் உடனிருக்கட்டும். என் வீட்டிலேயே ஓர் உதாரணம் இருக்கிறது. என் உம்மா தான். அவளுக்கு அல்லாவைத் தொழுவதோ ஓர் இஸ்லாமியப் பெண்மணியாக வாழ்வதோ முக்கியமில்லை. அவளுக்குத் தெரிந்ததெல்லாம் அந்த அடுப்பங்கரையும் புழக்கடையும் மட்டும்தான். சமைப்பது, விளம்புவது, கிடைத்தால் சாப்பிடுவது, உறங்குவது. தினமும் அதேதான். ஐந்து வேளை முடியாவிட்டால் என்ன, இரண்டு வேளையாவது தொழ வேண்டாமா? வாப்பாவும் சொல்லிச் சொல்லி ஓய்ந்துவிட்டார். நான் ஓரிருமுறை முகத்திற்கு நேராகக் கேட்டே விட்டேன். அதற்கு பதில் சொல்வது ஒரு விசயமேயில்லை என்பதைப் போல என்னை முறைத்து விட்டுச் சென்றுவிடுவாள். போகப்போக அவளுடைய முகத்தைப் பார்த்தாலே எனக்கு எரிச்சல் வந்தது. அவளைச் சுற்றி எல்லாமே இருள்தான். அந்த அடுப்பங்கரைக் கரி அவளுக்குள் முழுவதுமாக நிறைந்து விட்டது போலும். அல்லாவை விட்டு நீங்கிச் செல்லச்செல்ல அவளது ஐஸ்வர்யம் விலகித்தானே போகும்? ஏதோ துக்கை குடிகொண்ட உடல் போல ஆகிவிட்டாள். அடிக்கடி அவள் உடல் நலமின்றிக் கிடப்பதொன்றும் தற்செயல் இல்லை. அல்லாவை நினையாத மனமும் உடலும் ஒருபோதும் நிம்மதியோடு இருக்க முடியாது. இறைவனை நம்பும் ஒருவனாக நானே எனது தாயைப் பழிக்கக் கூடாதுதான். ஆனாலும், எப்படி அவளால் தனது மூலத்தை மறந்திருக்க முடிகிறது? நீ வேண்டுமென்றால் பார், அவள் தொழுகையின் திசையில் திரும்பாது இருக்கும்வரை அவளுக்கு சுகக்கேடுகள்தான். பெற்ற தாயைப் பற்றி இப்படிப் பேசுகிறானே என்று நினைக்கிறாயா? யாரானாலும் சரி, அல்லாவைப் புறக்கணிப்பவர்களை நானும் புறக்கணிக்கத்தான் செய்வேன். அவர்களுக்குக் கேடு வந்தே தீரும். அவர்களது கடைசிப் படுக்கையிலாவது அவர்கள் மனம் திரும்பினால் போதும், இறைவன் அவர்களுக்கான இடத்தை சொர்க்கத்தில் உருவாக்கி விடுவான்.
என் ஆழ்மனதில் ஒன்று தோன்றுகிறது. உம்மாவிற்கு ஏதோ பெரிய நோய் வரப்போகிறது. அவள் அதிலிருந்து மீளவே முடியாமல் போகும். இறுதியில் அவள் அல்லாவைத் தொழுது அவனிடம் சென்று சேருவாள். இது இப்படித்தான் நடக்கும் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். என் வாப்பாவிற்கு மனதளவில் இதொன்றும் பெரிய இழப்பாக இருக்காது. இறையைத் தொழாத மனைவி அவருக்கு வெறும் ஜடம்தான்.
சரி, என்னவெல்லாமோ பேசுகிறேன் பார். நம்முடைய உரையாடல்கள் நீண்டு கொண்டே செல்வது நல்லதுதான். என்றாவது நீ மனம் திரும்பும்போது நம் உரையாடல் அடுத்த தளங்களுக்குச் செல்லும். என்றாவது அல்லாவின் அருட்கரங்கள் உன்னைத் தொடும்போது, நீ சொன்னபடி, உனக்கே உனக்கான தற்செயல் நிகழ்வாக அது நிகழும்போது நான் சொன்ன எல்லாமும் உனக்குப் புரியும்.
தவறாக எடுத்துக் கொள்ளாதே, உன் அப்பாவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தபோது எவ்வளவு மனமுருகி நான் தொழுகை செய்தேன் தெரியுமா? ‘அவரது வேதனைகளை முடித்து வை இறைவா, அவர் ஒவ்வொரு மூச்சை இழுப்பதற்கும் எவ்வளவு கஷ்டப்படுகிறார், அவரது நோய்மையை நிறுத்து, இல்லையேல் அவருக்கு நிம்மதியெனில் அவரை உன்னுடன் எடுத்துக்கொள்,’ என்று கெஞ்சிக் கேட்டேன். உன் அப்பா உறக்கத்திலேயே தன் சுவாசத்தை நிறுத்தினார். அதெல்லாம் ஒரு பாக்கியம் அல்லவா? நிச்சயமாக அல்லாவின் அருட்பார்வை உன் அப்பாவின் மீது விழுந்தது நண்பா.
சில மாதங்களாக விடாத தலைவலி வேறு பாடாய்ப் படுத்துகிறது. உறங்கவே முடியவில்லை. கூடவே மறதியும். சில வேளைகளில் தொழ முடியாமல் போய் விடுகிறது.
குறிப்பு: உன் எல்லாம் வல்ல இறைவனிடம் அல்லது இயற்கையிடம் எனக்காக நீ வேண்டத் தேவையில்லை.
இறைவனே மிகப்பெரியவன்.”
அந்த மின்னஞ்சலுக்கு ஒரு சில நாட்கள் கழித்து பதில் அனுப்பினேன்.
“நண்பா நசீர்,
மகிழ்ச்சியும் அன்பும் பெருகட்டும். இந்த மின்னஞ்சலே இறுதியாக இருக்கட்டும். இத்தனை வருடம் யாரை நான் அம்மா என அழைத்து வந்தேனோ, அவளே இறுதி மூச்சு வரை என் அம்மா. அவளிடம் நான் குடித்த பால்தான் இன்று நானாக வளர்ந்து நிற்கிறது. அதற்கான நியாயப்படி, நான் தொடர்ந்து அவளைத்தான் அம்மாவென அழைப்பேன். அவள் என்ன செய்தாலும் சரி, தவறோ, சரியோ எதுவானாலும் சரி, அவள்தான் என் அம்மா. எவனோ ஒருவன் வானிலிருந்து குதித்து வந்து, ‘இல்லையில்லை, இவள் உனது அம்மாவல்ல. உன் அம்மா வேறொருத்தி’ என்று சொல்லும்போது அதை ஒரு நகைச்சுவையாகக் கடந்து செல்லவே விரும்புகிறேன். இந்த சமூகத்திற்கு விசித்திரமான சிலரும் தேவையாக இருக்கிறார்கள்தானே? இதை என்னைப் பார்த்து நீயும் சொல்லிக் கொள்ளலாம்.
மேலும் ஒரு விசயம். உன் உம்மாவைப் பற்றி நீ புரிந்து வைத்திருப்பது அடி முட்டாள்தனம். உம்மா விளையாட்டிற்குச் சொல்வதைப் போல நிஜமாகவே உன்னை புண்ணாக்கிற்கோ, தவிட்டிற்கோதான் வாங்கியிருப்பாள். அவளது பேரன்பிற்கு முன் நீ ஒரு சிறு துளி விசமாகத்தான் எஞ்சியிருக்கிறாய் நண்பா. எனக்கு அவளும் இறையாகத்தான் தெரிகிறாள்.
சரி, எல்லாவற்றையும் விடு. நானும் நிறைய தேடி வாசித்துவிட்டேன். ஈஸா இப்னு மரியம்தான் ஜீசஸ் க்ரைஸ்ட் என்று உனக்காக நான் ஒத்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல அல்லாவின் இறைத் தூதனாகத்தான் அவன் வந்தான், அவனது தொடர்ச்சிதான் நீயும் நானும் என ஒத்துக் கொள்கிறேன். மகிழ்ந்திரு.
குறிப்பு: உன் உம்மாவின் உடல் நிலை என்ன ஆனாலும் சரி, அவளை சுகப்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதையே நான் செய்வேன். எந்தக் கடவுளிடமும் சென்று வேண்டிக்கொண்டிருக்க மாட்டேன். அது ஜீசஸாக இருந்தாலும் சரி, ஈஸா இப்னு மரியமாக இருந்தாலும் சரி. இதன் மேல் உனது மின்னஞ்சல்களை நான் திறக்கப் போவதில்லை. நேரில் சந்திப்போம்.
அன்பு உண்டாகட்டும்.”
*
நசீரின் உம்மாவிற்குப் புற்றுநோயெனத் தெரிந்ததும் வெடித்தெழுந்த அழுகையில் என்னையறியாமல் என் கைகள் வான் நோக்கி உயர்ந்து தொழுதன. நசீரைப் பிடித்து அவன் முகத்தில் மாறி மாறி அறைவதைப் போல என் கண் முன்னே வந்து கொண்டேயிருந்தது. அன்று அவனுக்கு ஒரு நீண்ட மின்னஞ்சல் தட்டச்சு செய்தேன். மிக நீண்ட ஒன்று. அதை முடித்த கணத்தில் அனுப்ப வேண்டாமென தீர்க்கமாகத் தோன்ற, அதை அப்படியே சேமித்து வைத்து விட்டேன்.
*
உம்மாவின் உடலருகே சென்ற நசீர் புன்னகையோடு ஓர் இனிப்பை எடுத்து அவள் மார்பின் மீது வைத்தான். மண்டியிட்டு நின்று கைகளைக் கோர்த்து கண்களை மூடித் தொழுதான். சில நிமிடங்களுக்குப் பிறகு சட்டென துள்ளியெழுந்து ஊளையிட்டான். சுற்றியிருந்த பெண்கள் திடுக்கிட்டு எழுந்து உள்ளறைகளுக்கு ஓடினர். ஆண்கள் என்ன செய்வதெனக் குழம்பியபடி நின்றார்கள். பின், ஏதேதோ சத்தமெழுப்பி மெல்ல ஆட ஆரம்பித்தான். வாப்பா எழுந்து வந்து வாசல் நிலையில் சாய்ந்து நின்று அவனை பார்த்துக் கொண்டிருந்தார். நசீர் துள்ளிக் குதித்து சிரித்து கத்திக்கொண்டே ஆடினான். சிலரது கைகளைப் பிடித்து அவர்களையும் ஆடுமாறு சைகை செய்தான். நான் சென்று அவனை இழுத்து வர முயன்றேன். அவன் என் கைகளையும் பிடித்து ஆடியபடி என்னையும் ஆடுமாறு இழுத்தான். அறையிலிருந்த எல்லோரும் ஒவ்வொருவராக வெளியேறி வீட்டின் முற்றத்திற்குச் சென்று நின்றனர். ஏதேதோ பேச்சுகள். உம்மாவும் நானும் நசீரும் மட்டும் தனித்து விடப்பட, சில நிமிடங்கள் கழித்து ஆடுவதை நிறுத்திய நசீர் உம்மாவின் உடலருகே உட்கார்ந்து தொழுகை செய்தான். தொழுகை முடிந்ததும் உம்மாவின் அருகே மண்டியிட்டு இருந்தவன் மெல்ல விசும்ப ஆரம்பித்தான். சற்று நேரத்தில் அந்த வீடே அதிரும்படி கதறியழுதான். தன் மார்பிலும் முகத்திலும் ஓங்கி அறைந்து விழுந்து அழுதான். உம்மாவின் கால்களை இறுகப் பற்றிக் கிடந்து முனகினான். இறுதிச் சடங்கிற்கு உம்மாவின் உடலை அவனிடமிருந்து பிரித்துக் கொண்டு செல்வதற்குள் பெரும்பாடாகிவிட்டது.
*
அடுத்த நாள் உம்மாவின் சட்டமிடப்பட்ட புகைப்படத்தை வாங்கிக்கொண்டு நசீரின் வீட்டிற்குச் சென்றேன். வாப்பா தன் சாய்வு நாற்காலியில் கிடந்து ஏதோ வாசித்துக் கொண்டிருந்தார். நசீர் முற்றத்தில் இருந்த செடிகளுக்குக் கீழே மண்ணைக் குவித்து வரப்பு கட்டிக் கொண்டிருந்தான்.
“உம்மாவுடைய படம் வந்திருக்கிறது நசீர். எங்கே வைக்கட்டும்?”
அவன் எழுந்து அதை வாங்கிக்கொண்டு, “இரு, வருகிறேன்.” என்றபடி உள்ளே சென்றான். தோட்டத்துச் செடிகள் பல வாடி நின்றன. மண்ணும் ஈரப்பதமின்றி காய்ந்து கிடந்தது.
சற்று நேரத்தில் கையில் ஒரு புத்தகத்தோடு திரும்பி வந்தான் நசீர். தங்க நிற தகதகக்கும் அட்டை கொண்ட தடித்த புத்தகம். அதை என்னிடம் நீட்டி, “கெவின், பழைய விசயங்களை மீண்டும் தொடர நான் விரும்பவில்லை. இது திருக் குர்ஆனின் தமிழ் விளக்கம். நான் முதல் முதலாக வாசிக்கத் தொடங்கியது இது. நீ இதை வாசிக்கா விட்டாலும் பரவாயில்லை. இது உன்னோடு இருக்கட்டும்.” என்றான். அவனது முகத்தில் புன்னகையோ வேறெந்த உணர்ச்சியோ தெரியவில்லை.
விடை பெற்றுக் கிளம்பிய என்னுடன் சாலை வரை வந்தவன், “கெவின், இன்னொரு விசயம்.” என்று என் கையைப் பிடித்தான்.
“சொல், என்ன விசயம்?”
சற்று நேரம் யோசித்தவன், “இல்லை, மற்றொரு சமயம் சொல்கிறேன். பார்க்கலாம்,” என்று விட்டு திரும்பிச் சென்றான்.
அன்று மாலை தொழுகைக்கு உட்கார்ந்த என்னருகில் நசீரின் குர் ஆனும் இருந்தது. வழக்கமான தொழுகைகளைப் போலன்றி அன்றைய தொழுகையில் என்னால் முழுதும் ஈடுபட முடியவில்லை. ஈஸா இப்னுவும், நபியும், ஜீசஸும் நீண்ட அங்கிகளில் எனைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் மூவரும் எனைப் பார்த்து ஏதோ முனகிக் கொண்டிருந்தார்கள். குழம்பியவனாக ஒவ்வொருவர் முகமாக மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். பின், மௌனம் கவிழ்ந்த ஒரு நொடியில் மூவரும் ஒரே நேரத்தில் தங்கள் ஆள்காட்டி விரல்களை ஒரு திசையில் நீட்டினார்கள். அத்திசையை நோக்கியபோது தூரத்தில் இரு சிறு உருவங்கள் கைகோர்த்து என்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தன. ஆடையற்ற மேனி. நீண்ட நெடும் கற்றை முடி. ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து விளையாடிச் சிரித்தபடி என்னை நெருங்கி வந்தனர். அவர்கள் இருவரது முகங்களும் நிச்சயமாக ஒரே சாயலில் இல்லை. பரிட்சயமான முகங்கள் எனத் தோன்ற கூர்ந்து கவனித்தேன். ஒரு நொடி அசைவற்று நின்ற இருவரும் என்னைப் பார்த்து புன்னகைத்தனர். நீண்ட அந்தப் புன்னகையின் முடிவில் சட்டென அவர்களின் முகத்திலிருந்து ஒவ்வொரு உறுப்புகளாக மறைய ஆரம்பித்தன. கண்களற்று, மூக்கற்று, வாயற்று வெறும் சதைக் கோளமாக மாறி நின்ற முகங்கள் பின் சட்டென மறைந்து விட்டன. ஏனென்று தெரியாமல் என் கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது.
தொழுகை முடித்ததும் நசீரின் குர் ஆனைத் திறந்தேன். முதல் பக்கத்தில் யாருடைய கையெழுத்திலோ இப்படி எழுதப்பட்டிருந்தது, ஒவ்வொரு சொல்லும் குறுக்காக வெட்டப்பட்டிருந்தது.
“நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன். மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். உங்களுக்கு உங்களுடைய மார்க்கம். எனக்கு என்னுடைய மார்க்கம்.
அல் குர் ஆன் 109: 1-6 ”