சப்னாஸ் ஹாசிம் கவிதைகள்

by olaichuvadi

என் பாடல்

மெல்லுதிர் காடு,
ஒரு அலகில் சொறியும் சொல்,
பின் இறக்கையால் பறக்கும் பறவை;

இரவு முடிந்து வரும் பாடல்
உச்சாடனத்தின் கானலெனப்படுவதென்ன?

சப்தங்களின் லாகிரியா?
லகுவான புணர்ச்சியின் சோம்பலா?
வெயில் பழுத்த கண்களா?
ஒரே ஒரு பெண்ணா?

மூன்றாவதாக கழுத்தில் விழும்
எச்சில் முத்தத்தில்
கானற் பாடலை முடிக்குக.

கூதிர் நிலவு நாளில்
காட்டின் பின் இறக்கைப் பறவை
என் பாடலை நீர்ப் பரப்பெங்கும்
சுமந்து செல்கிறது.
நான் அரிதாகப் பாடுகிற காதல் அது.

விடியுமுன் நீர்ப்பரப்பில் கவியும்
என் எச்சிற் காதலை பனியென்றறிக.
பிசைவிலிருக்கும் மேகத்தை விலத்தி
நிலவு கூதிரை வெல்கிறது.
என் பரிகாசமாக
ஒரு தனித்த சொல் அலகுச் சொறிகோடாக
இன்னும் வியர்த்தடங்கும்
சப்தங்களாக
என் பாடல்
நீர்த்துப் பொசிகிறது.

ஒரு கடலின் யோனிக்குறி என் பாடல்.
அங்கே அலைகளெல்லாம்
கூதிரிலும்
சுரோணிதத்தை கொப்பளிக்கும்.

கல்மூக்கு

கல்மூக்கிலிருந்து ருதுவாகும் கவிதை
நான்கு வரிகளோடு வருகிறது.
துர்நிலத்து வெப்பத்தோடு ஒரு வரி,
மூன்றாம் உலக யுத்தத்தின் மீதான
கவிஞனின் அங்கதத்தோடு ஒரு வரி,
பெண்ணைப் பெண்ணே
புணர்ந்து கொல்வதாக ஒரு வரி என
கல்மூக்கின் நீட்சியோடு
நான்காவது வரி உருக்குலைகிறது.

கவிதை கல்மூக்கிலிருந்து
நாலாபுறமும் பரவி
துர்நிலத்தோடு கொல்புணர்ச்சியோடு
அங்கத மற்றமையை
ஒன்று எரித்துப் போடுகிறது அல்லது
கசிந்து அப்புகிறது.

தொல் இரவோ
சூனியமோ மிகுதி சக்திகளோ
அக்கவிதையை நிறுத்த முடியா.

பேரழுகையோடு
கடவுளரை சபித்தபடி எரிந்து போனவர்கள்
கல்மூக்கு நாசியின் அரிப்பிலிருந்து
மொழியகல பிரார்த்தனை செய்தனர்.

பின்னர்
மொழியகல் பிரார்த்தனையோடு
எரியும் பேரழுகையோடு
சலுகையான கசிதலோடு
இன்னும் திருநங்கைகளின் பாடலோடு
கல்மூக்கு இன்றொரு கவிதையை
சுத்தவிடும்.

பிற படைப்புகள்

Leave a Comment