நெகிழன் கவிதைகள்
நெகிழன்

by olaichuvadi

 

ன்னை பின்னமர்த்திக்கொண்டு
அறியா ஊரின் தெருக்களில் சுற்றி மாளவில்லை.
உனக்கு இடுகாடு ஆகாதென்றுதானே சோளத்தோட்டத்தை சுட்டினேன்.
அங்கொரு வீடிருப்பது என் குற்றமா.
பத்து மைல் தூரம் சுற்றிக் களைத்த பின்னும்
முட்புதர்பின் கிணத்தடியை காட்டினேன்.
“ச்சீ” என்றாய்.
ஆனாலொன்று,
இன்னுமொரு இடம்தான் மீதி இருக்கென் கண்ணகியே.
அங்கும் தோதுபடாதுபோனால்
இனி எப்போதுமே அது அமையாது கண்மணி.
இவ்வாழ்வு,
கிட்டத்தட்ட ஒரு வெற்றுக் கனாவைப் போல தொடர்ந்து நம்மை மந்தையாக்குகிறது.
காலத்தின் சாலையில் புழுதி கிளப்பிப்போகும் அந்த கனரக வாகனத்தை பாரேன்.
அதை, அதை கடந்துவிட்டோமானால் போதும்.
அவ்வளவுதான்.
எங்கே சொல்,
நிழல் விரித்துதவிய
மாமரக் குடையே உனக்கென் நன்றி.
நொறுங்கி ஸ்ருதி சேர்த்த இலைச் சருகுகளே உங்களுக்கென் நன்றி.

 

அமாவாசயின் கண்கள்

இரவு எந்நேரமானாலும் கட்டிலை இசைக்காமல் வருவதில்லை தூக்கம்.
பீஸ் போன நைட் பல்பை மாற்றாது ஏதேதோ சாக்கு சொல்லி
போக்குக் காட்டித் திரிகிறேன்.
அம்மா புரண்டு படுத்தால் பகீர்
மனைவி ஒன்றுக்குபோக எழுந்தால் பகீர்.
ஒரு இரவில்தான் எத்தனை பகீர்கள்.
இதற்கிடையில் தான் சொர்கத்தின் புதையுண்ட பாதையை உருவத் துவங்குகிறேன்.
உலகின் ஏதோ ஓர் மூலையில் இருக்கும் அல்லது இல்லாதுபோன ஒருத்தியை துவம்சம் செய்கிறேன்.
கும்மிருட்டில்
மயமயவென்று அலைவுறும் பார்வையை விழுங்கி,
வாழ்வு முழுமைக்கான நிம்மதியையும் பெற்றுவிட்டதாய் செருகுகின்றன கண்கள்.

ட்சயப் பாத்திரமொன்று
ஊர்மேலே பறக்க,
ஒவ்வோர் கையும் முயன்றது கைப்பற்ற.
தப்பிவிட்டதாய் பெருமூச்சுவிட்டபோது சிக்கிற்று
ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் கையில்.
அவனதற்கு செல்லமாய்
திருவோடு என்று பெயரிட்டு
பிச்சையைப் பழக்கினான்.
பிறகதை சாப்பிடவும்
சில இரவுகளில்
உறக்க சோம்பலின்போது
மூத்திரம் பெய்யவும் பயன்படுத்தினான்.
பிறிதொரு நாள்
பிச்சைக்காரனின் மொத்த சேமிப்புப் பணத்தையும் அது தூக்கிக்கொண்டு ஓடிவிட்டதாக ஊர் முழுக்க பேச்சு.
இக்கதை நிகழ்ந்து யுகமாகிற்று.
இப்போது
இந்த அற்புதக் கடற்கையில்
அதுதான் நகர்கிறதா ஆமை போல.

பிற படைப்புகள்

Leave a Comment