அதிரூபன் கவிதைகள்

by olaichuvadi

சத்தியத்தின் துரிதம்

முகப்புக் கம்பளத்தில் இருந்து
நீரின் சுவாசம் கேட்டது
அது கண்ணீரின் மனநிலை
துயர்கொண்ட ராத்திரியில் வீசும்
பனிநாவின் எரிநீர்
கொஞ்சம் காதுகொடுத்தால் கேட்கும் அழுகை
சில எலும்புகள் உடைபடும் ஓசை
மரணங்கள் தட்டுகளோடு வரும் பசிக்கிண்ணம்
மறதியால் என்னை நானே கொன்றேன்
நியாபகத்தை விலக்கி என்னில் உன்னைக் கொன்றேன்
இருவரும் பிரகாசச்சொல்லில் விழுந்துகிடந்து
கம்பளத்து நூலில் சிக்கிக் கொள்வோம்
வலியோடு போராடும் பிட்பாக்கெட் சிகரெட்டின் சாம்பல்
அதில் தானே கடைசியாய் எரிந்தோம்
தொடாதுயரத்தோடு விழும் சாம்பல்நகங்கள்
ஊழ் வழிந்து புகைஎரிந்து நீரும் அழும் நமக்காக
துரித ஆத்மாவின் வெண்சிகை மரணங்கள்
சொற்கள் சித்திரங்களில் பதுங்கும் மோநிகை மௌனம்
அதுதானே நித்திரையின் வாக்கு
அதுதானே சத்தியத்தின் துரிதம்
அதுதானே கம்பலத்தின் சுவாசம்

தவிட்டுப்பனி உதிர்காலம்

ஊமையான காற்றுக்கு நன்றிசொல்லி
உலர்வெளியை இறுக்கும் தவிட்டுப்பனி
மேகங்கள் நலமோடு திரும்புகின்றன
ஆனால்
உறங்கும் கூடுகளில் உறக்கம் இல்லை
பிணியைப் பனியாய் தரையிறக்கும் உதிர்காலம்
கல்லொளியால் காய்க்கும் பழங்களை
கடிக்கும் அணிலும் பனியில் கல்லாகும்
திருடனாக இருந்தால் இரவை வணங்கலாம்
குளிரைக் குருடாக்கி
உலர்பிறையை திருடலாம்
மரணத்தால் வாடும் விவ்வலியப்பூ
அதன் காம்புதானே நான்
இரவு என்னை ஒரு விரலால் தாங்குகிறது
தவிட்டுப்பனி என்னை ஆயிரம் விரலால் இறுக்குகிறது
உலராத தனிமையில் ஆடும் ராட்டினமே என் நிழல்
அதைக் கல்லாக்கப் புறப்படும் உதிர்கால குளிர்
ஒளிராப் புகையாய் இருக்கலாம்
முடிந்தால் செவிட்டு மனமாய்க் கூட இருக்கலாம்
கல்லூஞ்சல் மரமாக இருக்க வலிக்கிறது
பனிக்குளிர் உறையும் உயிர் உதிர் காலம் இது
கத்தியோடு வந்து என்னைத் துண்டித்துப் போடு
காற்றோடு வந்து என்னைப் பள்ளத்தாக்கில் வீசு

பிற படைப்புகள்

Leave a Comment