வே.நி.சூர்யா கவிதைகள்

by olaichuvadi

மின்னல் கீற்றினால் பின்தொடரப்படுபவன்

இந்த அக்னிநட்சத்திர மழைக்காலத்தில்
கொஞ்ச நாட்களாகவே
என்னை ஒரு மின்னல் கீற்று சந்திக்க முயல்கிறது
சலிப்பாற்ற வெளியே புறப்படுகையில்
சற்று தொலைவில் வந்து நிற்கிறது
அண்ணாந்து பார்க்கும்தோறும்
தெய்வங்கள் ஒளிந்து கொள்ளும் அளவுக்கு இருண்ட வானில்
ஓளிமயிலென ஆடுகிறது
புதியவர்களும் சரி புதியவைகளும் சரி
எனக்கு திகைப்பை அளிப்பவை
அச்சத்துடன் வீடு திரும்பிவிடுவேன்
சமயங்களில்கதவை தட்டுவது மட்டுமின்றி
சுவர்களையும் மின்னிணைப்புகளையும் தட்டி
உள்ளே வரலாமா உள்ளே வரலாமா என
மின்னும் மொழியில் கேட்டுக்கொண்டிருக்கும்
ஒரு மின்னலுடன் கைகுலுக்கி வணக்கம் சொல்லும்
பரவசத்தை
அப்போதெல்லாம்
கதவுக்குபின் நின்று கற்பனை செய்து பார்ப்பேன்
அற்புதம்… அற்புதம்…

 

தியானம்

இந்நாட்களில் காலையில் எழுந்ததும்
முதலில் பார்ப்பது சன்னல்களினூடாக அறைக்குள்
ஊர்வலம் போகும் ஒளித்துகள்களைத்தான்
என்ன கோஷம்
என்ன காரணத்திற்காக
ஒருவேளை ஒன்றுமில்லையோ?
அறிய முடிந்ததேயில்லை என்னால்
ஆனாலும் வெறுமனே ஒவ்வொரு காலையிலும்
ஒரு தியானம் போல
மேலும் சில நிமிடங்கள் அவற்றை பார்க்கிறேன்
பின்பு ஒரு எறும்பைவிடவும் சிறிய ஆளாக
ஏழெட்டுமுறை படிக்கட்டில் ஏறியிறங்கிவிட்டு
அம்மாவின் எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறிநிற்கிறேன்
பூஜ்ஜியத்தை தவிர வேறு எண் வரவே மாட்டேன் என்கிறது

 

விதி எனும்இயங்குதளமும்
அதன் நிரல்களும்

இதோடு இரண்டாவது முறை
நான் உள்ளே இருக்கிறேன் என்பதையே
மறந்துவிட்டு
வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்கள்
இப்போதோ நானும் என் கசங்கிய நிழலும்
இன்னும் பதினைந்து நிமிடத்தில்
நான் செல்லயிருந்த கடற்கரையில்
காணயிருந்த நாயும்
திரும்பும் வழியில்
என்னை சந்திக்கயிருந்த மயிலும்
அதன்பிறகு
எதிர்கொள்ள இருந்த ஊகிக்கவேயிலாத
என் அத்தனை அத்தனைவருங்கால
சம்பவங்களும்
வெறுமனே வீட்டுக்குள்
அமர்ந்து கொண்டிருக்கிறோம்
சாவியுடன் எப்போது வருவார்கள் என எதிர்பார்த்தபடி.

 

ஊற்று

பிறந்து சிலநாட்களேயான குழந்தையை பார்க்கச்சென்றிருந்தேன்
சாவகாசமாக தொட்டிலில்உறங்கிக்கொண்டிருந்தது
உனக்கோ பெயரில்லை கரடுமுரடான நேற்றில்லை
நானும்தான் இருக்கிறேன்… பார்த்தாயா?
இன்னும் எத்தனை எத்தனையோ கண்ணீர்த்துளிகள் வழியவிருக்கும்
அந்த சிறிய பஞ்சுக்கன்னத்தை
உலகத்துக்கம் அழுந்தத்தொடாத அந்த மிருதினை
தொட்டுப்பார்த்தேன்
பறக்கப் பழகாத கழுகுக் குஞ்சே
ஒரு பெரிய கதையின் முதல் எழுத்தே
எதுவும் எழுதப்படாத புது சிலேட்டே
எனக்கு துக்கமாக இருக்கிறது.

பிற படைப்புகள்

Leave a Comment