லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்

by olaichuvadi

 

மற்றது தின்றது போக
ஆமைக் குஞ்சில்
ஆயிரத்தில்
ஒன்று தேறும்
மற்றது தின்றது போக
பறவைக் குஞ்சில்
நூற்றில் பத்து தேறும்
விலங்கில் பத்தில் ஒன்று
வாழ்வது வீடெனில் விதிவசம்

தானே தின்றது போக
மனிதனுக்கு
லட்சத்தில்
ஒன்று
தேறும்
மீதம் நீறும்

ஆடுகடித்து காயம் பட்ட
சரக்கொன்றையை
மிசுறு எறும்புகள் கூடி
காப்பாற்றுகின்றன
ஒரு காரணத்திற்குள் ஒன்று
ஒன்று மற்றொன்று என
நீள்கிறது யாத்திரை

யாருடைய காரணத்திற்காகவோ
நீங்கள்
என்னுடைய காரணத்திற்காக அவர்
அவருடைய காரணத்திற்காக
மற்றொருவர் என

ஒரே பொதிதான்
பிரிக்க பிரிக்க
பொதி பொதியாக வருவது

உடல் விடர்த்து
தளிர்க்கும் அரசமரம்
மரத்தின் எலும்புக்கூடென
நிற்கிறது

அதன் மேல் அமர்ந்திருக்கும்
காகங்கள்
கிளிகள்
கொக்குகள் அரசின் கனிகள் போல
தொங்குகின்றன

அடுத்த பருவம் இவை உதிர்த்து
பச்சயம் பூக்கும்
எல்லாமே வெட்ட வெளியில்
நடக்கின்றன
ஒளிவு மறைவு என்று
ஒன்றுகூட இல்லை

பிரதான சாலையோரம்
இது

நெடுநேரம்
காம்பௌண்ட் சுவருக்கு அந்தப்பக்கமாக
குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறது
ஒரு இளைய மாமரம்

ஒரு கிளையில்
முதலில் சிரிப்பது தெரிகிறது
பின்பு குதிக்கிறது
குழந்தைச் சேட்டை
அத்தனையும் செய்து முடிவில்
கிளையைத் தாழ்த்தி
எல்லோருக்கும் முத்தமிட்ட பிறகு
கையை மெதுவாக விலக்கி
கிளையை உதறி
தன் இயல்பு நிலைக்குத்
திரும்புகிறது

இயல்பில் காற்றசைந்து
தன்னிருப்பை
நடனத்தில் மீட்கிறது
குழந்தைகளிடம்
இளைய
மாமரம்

சிறையிலிருந்து வெளிப்படுபவனின்
ஆசை முகத்தோடு

 

எல்லாமே நிபந்தனைகளுக்கு உட்பட்டவைதான்

1

கர்மா
தனக்கு
தாமதமுண்டாக்குகிறது
தனக்கு நடக்கவேண்டியவை
பிள்ளைகளுக்கு நடக்கின்றன
அதற்கும்
தடுமாறாதிருக்கவேண்டும்

2

கலை
பேரர்களுக்கு நடக்கவிருப்பதை
காலம் தாண்டி
தனக்கு
கொண்டுவருகிறது
ஆனால்
களிம்பு ஏறக்கூடாது
எல்லாமே
நிபந்தனைகளுக்கு உட்பட்டவைதான்

3

பாரதி கேட்டான்
எல்லாம் எனக்கு
வந்து சேர்ந்திருக்கின்றன

4

அகந்தை உடைந்து பின்
மீண்டெழல் வேண்டும்
எப்போது உடைந்தது
எப்படி மீண்டது எனும் சிறுமணிச்சப்தம்
இடுப்புக்குக்கீழே
ஓயாது
ஒலிக்கவேண்டும்

5

நான் நானாக இருப்பதும் ஆச்சரியம்தான்
நீ நீயாக இருப்பதும்
ஆச்சரியம்தான்

6
கடும் இருளுக்குள் உள்ள
ஒளிக்கு
ஒளி
அதிகம்

7

முப்பத்து முக்கோடி தேவர்களில்
நீயும்
உண்டுதானே?

8

ஊழை உடைக்க விரும்பினால்
கூட்டு சேராமல்
ஒன்றுபடு

9

அடுத்தவனைக் காயப்படுத்தினால்
தன் மேல்
வடுப்படும்

10

வடுவுண்டாக்கவேண்டும்
அது பேற்றுக்காய் இருப்பின்
பரவாயில்லை

11

உடைந்தவுடன் கூட்டி எடுத்தால்
உடைந்த பொருள் திரும்பிவிடும்
உடைந்த பொருள் திரும்பிவந்தால்
மீண்டுமது
உடையும்

12

தன்னைத்தானே உடைக்கும்போது
தரணியெல்லாம்
தெரிகிறது

13

அனைத்தும் அறிந்தவன்
மீண்டும்
முதலில் இருந்தே
வரவேண்டியவன்

பிற படைப்புகள்

Leave a Comment