தேவதேவன் கவிதைகள்

by olaichuvadi

 

அவன் என்ன செய்கிறான்?

அவன் என்ன செய்கிறான்?
கண்டதே காட்சி
கொண்டதே கோலம் எனக்
கவிதை எழுதிக்கொண்டிருக்கிறான்.
இலட்சியம்?
வாழ்க்கையின் இலட்சியம்தான்
தனது இலட்சியம் என்கிறான்.
வாழ்க்கையின் இலட்சியம்
வாழ்வது தம்பி.
இப்படி கண்டதே காட்சி
கொண்டதே கோலம் என்பதல்ல
கவிதை எழுதுவதுமல்ல
வாழ்வு என்பது கவிதை எழுதுவதல்ல
பின்னே?
கவிதையாயிருப்பது அது.
கவிதை?
துக்கம்
மானுடம் இன்னும் கண்டடையாத
விடுதலை குறித்த வேட்கைவெறி.
அறம், பார்வை,
அரைகுறையான
சின்னச்சின்ன நெகிழ்ச்சிகளல்ல
இன்பதுன்பங்களல்ல
அபூர்வ தருணங்களல்ல.
காலமற்ற வெளியில்
எத்தகைய மனிதனுக்கும்
இயற்கை ஈயும் பேரின்பம் மற்றும்
கவிதையின் கருணைச்சுட்டலைக்
கண்டுகொள்ளும் பேரறிவு.
பின்தொடரும் நிழல்களைப்
பின்தள்ளி முன்னேறும் பேரொளி.
வம்சத்தை ஒதுக்கி வையகத்தை நோக்கிப்
பாய்ந்து பரவும் பெருவெள்ளம்.
ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றிப்
புவியை ஆட்கொண்டுவிடும் பெரும்தயை.

பறவைகளின் குரல்

தனிமையிலிருக்கும்
பறவைகளின் ஒலிகளெல்லாமே
ஒரு பதில் குரல்தான்.
“நான் உன்னைக் கண்டுகொண்டேன்.”
“நான் உன்னைக் காதலிக்கிறேன்.”
பிறரோடு பேசும்போதும்
பெரும்பாலும் இதே மொழிதான்.

பாதையற்ற நீரில்

பாதையற்ற நீரில்
நீந்தும் வழிஅறியும் மீன்
அது தனக்குள்ளேதான் இருக்கிறதென்பதையும்
அறியும்
வாழ்வும் வழியும் அதுவே என்பதறியும்.
ஒன்றே என்பதையும் அறியும்.
நீந்துவது என்பது
நீரில் திளைப்பதுதான் என்பதறியும்,
அது அடைந்த உச்சம் மோட்சம்
வீடுபேறு என்பதெல்லாம்
நீரில் திளைத்துத் திளைத்து
நீரில்லாது உயிர் நிலைக்கா
நீச்சத்தை அடைந்திருப்பதுதான்
என்பதறியும்.

மழைநீரோடையில்

மழைநீரோடையில்
குழந்தைகள்விடும்
காகிதக்கப்பல் செல்லுமிடம்
குழந்தைகளுக்குத் தெரியும்.

கானகத்து ஓடையில்
இலைப்படகுகள் செல்லுமிடம்
மரங்களுக்குத் தெரியும்.

எண்ணங்களின் பேராற்றில்
போராயுதங்களுடன்
துறைகள்தோறும் துயர்வணிகம் செய்தபடி
மானுடக்கப்பல் செல்லுமிடம்
நமக்குத் தானே தெரியவேண்டும்?

கருக்கல்

எவற்றின் முடிவும் பிறப்புமானது
இந்த உயிர்?

துயர்முடிந்த நிலையில்
அவன் கண்டுகொண்ட பேரெழில்!

காலத்துயர் வடிக்கும் கண்ணீரைத்
துடைத்து அணைத்து
ஆறுதலளிக்கும் தெய்வம்!

துயர்ப்பகல்கள் முடிந்தன
துடிப்பற்ற துயிலிரவுகள் முடிந்தன
விழித்திருக்கும் பகல்களையும்
விழித்திருக்கும் இரவுகளையும் நோக்கி
ஒரு பயணம், ஒரு பார்வை, ஒரு கண்டடைதல்.

இரவும் பகலும் சந்தித்துக்கொண்டு
இணைபிரியாதிருக்கக் கனலும்
இவ்வேளை பூத்திருப்பது
இரவு பகல்களற்ற
இன்ப துன்பங்களற்ற
பெருவாழ்வுப் பெருவெளியின்
தீபஒளி
அந்திமலர்
ஆகாசத்தாமரை.

என்னமாய்ப் பாய்ந்து செல்கிறது
அந்திக்கருக்கலில்
திசை கண்டுகொண்ட தாய்ப்பறவை
தன் மாளிகையையும் மக்களையும் நோக்கி
எங்கும் தன் பாஷையினை உதிர்த்தபடி.

வானவில்

வட்டக்கொண்டையிலொரு
அலங்காரம்.
வைத்துக்கொண்ட
கைவிரல்களையும் காணோம்.
சூடிக்கொண்ட
முகத்தையும் காணோம்.

எதையுமே தேடாத விழிகளுக்கென்றே
விண்ணிற்பூத்த ஒரு மலர்ச்சரம்!

ஒரு பெருமழையின் கீழ்

ஒரு பெருமழையின் கீழ்
பல்லாயிரம் குடைகள்.

யாராலும் கவனிக்கப்படாமல்
மழையோடு போகிறது,
மழைக்குள் வழியும்
மழையின் கண்ணீர்.

பிற படைப்புகள்

Leave a Comment