கார்த்திக் நேத்தா கவிதைகள்

by olaichuvadi

ஓவியம்: அ.சண்முகம்

 

அக் கனி

பகுபடாத ஒருமையின் கனி
கணத்தில் முழுமையாகக்
கனிந்திருக்கிறது
கணத்துக்குச்
சற்றே சற்று அருகில் தான்
நிற்கிறேன்
கைக்கொள்ள முடியவில்லை
அருகிலிருப்பதனாலேயே
அகப்பட்டு விடுமா என்ன
அக் கனி .

சுவாங்ட்சுவின் வண்ணத்துப் பூச்சு

இப்போது அவன்
கண்ணீரிலிருந்து மூலிகை
பெறலாம்
இப்போது அவன்
அங்கு மலர்ந்துகொண்டிருக்கும்
மலரை
இங்கிருந்துகொண்டு உணரலாம்
இப்போது அவன்
கண்களை மூடி
நடந்துகொண்டிருப்பனவற்றை
மட்டும் கவனிக்கலாம்
இப்போது அவன்
சூக்கும விழிப்பில் தூங்கலாம்
இப்போது அவன்
மூச்சின் சீர்மையைக் குழைக்காத
எண்ணங்களுடன் இயங்கலாம்
இப்போது அவன்
கஞ்சா பிடிப்பதிலிருந்து
முழு விடுதலை அடையலாம்
இப்போது அவன்
எந்த எண்ணம் உதிக்க வேண்டுமெனக் கட்டளையிடலாம்
இப்போது அவனது
மலரிதழ்களுக்குத் தண்ணீர்
ஊற்ற வேண்டியதில்லை
இப்போது அவன்
கூப்பிட
எந்தப் பெயரும் தேவையில்லை
இப்போது அவன்
அமர்ந்து இடத்திலேயே பயணம் போகலாம்
இப்போது அவன்
அறிவுஜீவிகளுக்குக் கருணை
காட்டலாம்
இப்போது அவன்
முரண்களின் இயற்கையைப் பற்றி
எடுத்தியம்பலாம்
இப்போது அவன்
இப்போதின் அவனாக இருக்கலாம்
இப்போது அவன்
இப்போதும் அவனும்
இல்லாமல் இருக்கலாம்.

Fruits of tears

எவ்வளவு வலி
இந்த அறியாமை
எவ்வளவு பாரம்
இந்த அகந்தை
எவ்வளவு சல்லித்தனம்
இந்தப் பற்று
எவ்வளவு அசிங்கம்
எண்ணங்களுக்கேற்ப
நடனமிடுதல்
எவ்வளவு நகைப்புக்குரியது
அறிவின் தூமைக்கு அலைவது
எவ்வளவு பிற்போக்கு
உணர்தலின் வெகுதொலைவில்
குழம்பிக் கொண்டு
“இல்லை” என்று ஆணித்தரம் பேசுவது
எவ்வளவு முட்டாள்தனம்
மேல்நோக்கி மட்டுமே
ஆகாயத்தைப் பார்ப்பது
எவ்வளவு பொறுமையில்லாப் போக்கு
ஆத்மனின் நாதம் பெற
வாத்தியங்களை உருட்டிக் கொண்டிருப்பது
எவ்வளவு உண்மையானது
நான் என்பது
எவ்வளவு பொய்யானது
நானை அழிக்கமுடியும் என்பது
எவ்வளவு நேர்முகமானது
பசிக்கும் எண்ணமாவது
எவ்வளவு குழப்பமானது
வயிற்றுப் பசிக்கு உணவிடுவது
எவ்வளவு இயற்கையானது
இன்பத்திற்கு நான் அடிமை என்பது
எவ்வளவு செயற்கையானது
அதை ” நான்” எழுதிக் கொண்டிருப்பது.

பிற படைப்புகள்

Leave a Comment