குறுவை
அடுத்தக் குண்டிலிருந்து உன் நடவுப்பாட்டு
சார்முட்டியாய் எனை மொய்க்கின்றன
வெள்ளாங் குருகுகள் சூழ உம்பளாச்சேரிக் கொண்டு உழுகிறேன்.
நத்தைக்குத்தியோடும் ஆண்டையின் வேவுக் கண்களோடும் போட்டியிட்டு
நீ பிடித்த வயல் நண்டுகள் ராச் சாப்பாட்டில் மணக்குது புள்ளே
அப்புறம் வெற்றிலை நடுவே ஒரு சுண்ணாம்புத் தீற்றல்
தணிந்தது மூலச்சூடு மட்டுமல்லத்தான்
அதற்காகக் கொல்லைக்கு வரும்போது அலறாதே ஆட்காட்டியே
சம்பா
சேப்புச்சம்பாவுக்குக் காலால் மடைத்திறந்து நீர்ப்பாயவிட்டு
சேமை இலை பறித்து வருகிறேன்
மருதமரத் தூளியை ஆட்டிவந்து மண்மல்லாவிலிருந்த
மட்டக்குறுவை பழையதும் கருவாட்டுக் குழம்பும் போட குனிகிறாய்
நாவல் பழுக்கும் ஐப்பசியில் எப்படிப் பனம்பழங்கள்
ஏய் நழுவியோடாதே கார்த்திகை வாளையே
உன் அடிவயிற்று வெண்வரிகளை அம் மடையான்
தன் கழுத்தில் கடத்திக்கொண்டு பறக்குது பார்
தாளடி
காலையில் எழும்பச் செய்யும் என் கருவாட்டு வாலியே
வாலின் ஒரு நுனி எனக்கு, மறு நுனி குழந்தைக்கா
பதனிப் பொங்கலுக்குப் பின் எருமையும் நெட்டியும் தனித்தனித்தான்
ஆனாலும் தைப்பனி தரையெல்லாம் குளிருதே
நரிப்பயறு தெளிப்புக்கு இன்னும் ஆரால் நெளியும் ஈரமிருப்பது
எனக்குத் தெரியுமடி கள்ளக்கோழியே!
என்ன மீன்கொத்தியே! நழுவிய உளுவை உனக்கும் கிடைத்துவிட்டதா?
512
முந்தைய படைப்பு