செல்வசங்கரன் கவிதைகள்

by olaichuvadi

 

சாக மனதில்லாதவர்

விளையாட்டுத் துப்பாக்கி எடுத்து
எல்லாரையும் சகட்டுமேனிக்குச் சுட்டான் பொடிப்பயல்
சாக உடன்பட்டவர்கள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே சாய்ந்தனர்
சாக மனதில்லாதவர்கள் நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு
போங்கடா நீங்களும் உங்க சின்னப்புள்ளத்தனமும் என
போர்க்களத்திலிருந்து ஆயுதங்களைத் தூக்கியெறிந்துவிட்டு
வெளியேறுவது போல வெளியேறினர்
செத்து விழுந்த ஒருவர் எழுந்து வேகவேகமாக ஓடிவந்து
நிராயுதபாணியாகச் சென்ற சாக மனதில்லாத ஒருவரை இடைமறித்து
எங்கே போகப் பார்க்கின்றீர்
இந்தாருங்கள் உங்கள் ஆயுதங்கள் என்றிருக்கிறார்
ஏற்கனவே வீசியெறிந்துவிட்டேனே இல்லாத ஆயுதத்தை
எத்தனைமுறைதான் வீசுவது என்று சலித்துக்கொண்ட அவரை
போர்க்களத்தில் இந்த தடவை நெற்றிப்பொட்டில் சுட்டான் பொடிப்பயல்
அவர்தான் சாகவில்லை

யூகங்கள் பற்றிய சில யூகங்கள்

வரவா வேண்டாமா என எண்ணிக்கொண்டேயிருக்கும் தயக்கம்
ஒரு தண்ணீர்த் தவளை
தலையை வெளியே காட்டாமல் தண்ணீருக்குள்ளே கிடக்கும்
வெளியில் நின்று கொண்டு தண்ணீர்த் தவளை என்பவர்களை
வெளியிலிருந்து பார்க்க நாங்களென்ன தெரியவா செய்கிறோம்
தண்ணீர்த் தவளை என்கிறீர்கள்
உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்களென
தண்ணீருக்குள்ளேயே இருந்து கத்தும்
பொதுவாக தயக்கம் சொல்வது எதுவும் கேட்காதென்பதால்
இதுவுமே கேட்காது
ஆனால் அதற்கு காதுகள் உண்டு வெளியில் தெரியாது
வாயுமே உண்டு பேசுவது கேட்காது
அதனால்தான் தயக்க உலகத்தில் எந்நேரமும் ஒரே ஜாலி
என மார்தட்டுகிறது
காலம் காலமாகவே அதை யாராலும் பார்க்க முடியாது
அதைப் பற்றிச் சொல்வதெல்லாமே ஒரு யூகம் தான்
ஆனால் யூகங்களை அது அறவே வெறுக்கின்றது
அதனைச் சந்திக்கப் போனவர்களெல்லாம் ஏமாற்றத்துடன் தான்
திரும்புகிறார்கள்
ஒரு மாவீரன் மாற்றுரு கொண்டு உண்ணாமல் உறங்காமல்
வெகுகாலம் பயணித்து தயக்க லோகத்தை நெருங்கிவிட்ட சமயத்தில்
எப்படியோ தெரிந்து கொண்ட அதன் பிரஜைகள் தங்கள் உலகத்தை
வெடிவைத்து தகர்த்துக் கொண்டார்கள்
உயிருடன் தப்பியவர்கள் புதிய உலகத்தை நிர்மானித்துவிட்டதாகச்
சொல்கிறார்கள்
காலத்திற்கும் தயக்கம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்று தான்
அதெப்படி இவர்கள் சொல்கிறார்கள்

திலோன் பென்ஹரை அந்தக் கழுதை கன்னத்தில் கடித்தது

பாதியில் கைவிடப்பட்ட கவிதை அதிகம் வருத்துகிறதா
அதற்குத் துரோகம் இழைத்துவிட்டதாக குமைகிறீர்களா
இயலாமைத்தனம் வந்து கழுத்தை நெரிக்கிறதா
தங்கமாரியப்பனைப் போய்ப் பார்க்கலாம்
மனைவி மக்களை கூட்டிவரவில்லையா என அவன் கடுப்படிப்பான்
வைகுண்ட ஏதாதசியன்று விடியற்காலையில் நடந்தே வந்து
அவர்களா மலையேறினார்கள்
சொடக்குத் தக்காளி பறிக்க அவர்களா கூட்டிப் போனார்கள்
சிங்கார வேலன் படத்தைச் சிரிக்கச் சிரிக்க அவர்களா சொன்னார்கள்
சிறிய வயதில் அவர்களா நம்மோடு சிறியவர்களாக வாழ்ந்தார்கள்
பொய்க் கோபம் காட்டினால் சிரித்துக் கொள்வான்
பஸ் ஸ்டாப் அருகே சேகர் டீ கடை இருக்கும்
அங்கு திலோன் பென்ஹரை அப்பொழுது கடித்த கழுதையை
இப்பொழுது விரட்டிவிடலாம்
அசுரன் பட போஸ்டருக்குப் பின்னால் வானமே எல்லை போஸ்டர்
நிச்சயம் இருக்காது
கிழித்துப் பார்க்கலாம் கொலைப் பாதகச் செயல் ஒன்றுமில்லை
5.30 க்கு ஆர் எஸ் ஆர் வரும் அதில் ஏற வேண்டாம்
ஸ்ரீநிவாசா செந்தில் ஆண்டவர் எல்லாம் போகட்டும்
ரெண்டு பேர் பஸ் ஏறுவார்கள் புதிய ரெண்டு பேர் வந்து காத்திருப்பார்கள்
பார்க்க அது தானே மகிழ்ச்சி
செந்தில் ஆண்டவர் இன்னுமும் அதே ஸ்டைலில்
ட்ரைவர் கூட அதே முகச் சாடையில் தான் இருக்கிறார்
சேகர் டீ கடையிலிருந்து அவனோடு கிளம்பி
வேலாயுத ரஸ்தாவில் அப்படியே ஒன்பது வரைக்கும் நடந்தால்
பாதியில் கைவிடப்பட்ட கவிதையே மீதியை முடித்துக் கொள்ளும்
உங்களுக்கு என்னமோ அதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்
 

   

பிற படைப்புகள்

Leave a Comment