பல்லி
முத்துராசா குமார்

by olaichuvadi

 

எங்களின் பிரதிதான் காம்பஸ்

அப்பனும் நானும்
கட்டைக்கால் ஆட்டக்கலைஞர்கள்.
செங்குத்து மதில்களில் நடப்பதால்
அப்பனின் கட்டைக்கால்
பல்லியின் வாலைத் துண்டித்தது.
பிசாசாய் வளர்ந்த மருதமரமாக
தரையில் எம்பித் துள்ளியது வால்.
மதிலில் காட்டுப்புதர்களை
கற்பனை செய்திடும் பல்லி
தனது இரைக்காக பொட்டலில்
பதுங்கலை நிகழ்த்துகிறது.
நீண்ட பொறுமைக்குப்பின் 
பசைநாவு பூச்சியைத் தொடப்போகையில்
குட்டிக் கட்டைகளால்
மதிலதிர ஆடியிறங்கினேன்.
கருப்பு உடம்பும் 
வெள்ளைத் தலையுங்கொண்ட விட்டையை
இரைப் பறந்த கோபத்தில்
என் தலையிலிட்டது பல்லி.
விட்டையின் நிறம் 
என்னைக் கடந்தகாலத்திற்கு
இழுத்துச் சென்றது.
அங்கு பல்லியின் உள்ளுறுப்பாக 
துலங்கினான் என்னப்பன்.

சித்திரம்

காலியான முட்டைக்கூடுகளை
மதிலுக்குத் தூக்கிவரும் பூச்சிகள்
அதில் மனிதனின் முகங்களை வரைந்து
பல்லிகளின் வேட்டைத் தடங்களில்
நிறுத்துகின்றன.

சூழ்ச்சி

வெகுளிமனப் பூச்சியே
மயக்கப் பாவலாயிடும் பல்லியினருகே
போகாதே.

அருவம்

நற்சகுனத்தைப் பல்லியின் குரலில்
பேசுகிறான் மாய்ந்த நண்பன்.

பிற படைப்புகள்

Leave a Comment