பூவிதழ் உமேஷ் கவிதைகள்

by olaichuvadi

 

அமைதியின் மீது சாய்ந்துகொள்ளுதல் 

என் அம்மாவுக்குக் கடினமான இரண்டு இலக்க கூட்டல் கணக்கு ஒன்றைக் கொடுத்தேன்
நம்மில் பெரும்பாலோர் அழகாய் இருக்கிறோம்
என்று கூறி ஈசல் இறகு போல சிரித்தாள்
உண்மையில் மழைக்காலத்தில் நாங்கள் பிடித்த
ஈசல்களை வறுத்த போது
அரிசி வறுக்கும்  வாசனையும் வருவதாக 
அண்டைவீட்டார்கள் அடிக்கடி சொல்வதுண்டு
ஆனால் மழைக் காலங்களில் ஈசலோடு சேர்த்து சாப்பிட எங்களிடம்  அரிசி இருந்ததில்லை
ஈரச்சாமையை வறுத்து குத்தும் காலம் அது.
தன்னிடம் விடை இல்லை என்றாலும்
அழகாக சிரிப்பதன் மூலம்
சரியான விடைக்கு மிக அருகில் வந்துவிடும்
கலையைக் கற்றுவைத்திருந்தாள்  அம்மா.

எங்களிடம் ஈசல் பிடிக்கும்
இரண்டு கருவிகள் இருந்தன
இரவில் தெருவிளக்கு அடியில் வைக்கும் பாதி
தண்ணீர் நிரப்பிய பாத்திரம்
பகலில் ஈசல் புற்று மீது போர்த்தும்
அம்மாவின் பழைய சேலை.
அதன் கிழிசலில் பறக்கும் ஈசல்களை பிடிக்க சட்டையைக் கழற்றி ஓடி  ஒவ்வொரு வினாடியும்
ஓர் ஓவிய சட்டகத்தில் இருப்பேன்.

திண்பண்டங்களைக் குழந்தைகளுக்குப்
பிரித்துத் தரும் போது மீதி வராத
ஒரே ஒரு வகுத்தல் கணக்கு மட்டும்
அம்மாவுக்குத் தெரியும் மழைநாள்களில்
ஈசல்களைக்  காயவைக்கும்  வெயிலை
கண்ணாடி வெயிலென்று  சொல்லுவாள் 

அம்மாவின் கணக்குகளில்
பெரிய தவறுகள் நேர்ந்ததில்லை
அமைதியின் மீது சாய்ந்து கொள்வதாக நினைத்து
அன்றொரு நாள் அப்பாவின் மீது சாய்ந்த 
அந்த  ஒரே ஒரு முறை தவிர
மற்றபடி
ஈசல் தின்ற வாய்களை நினைத்து நதிகள் ஏங்கிய கதைகளைப் பிறகு பார்க்கலாம்.

வரகந்தாளுக்கு அடியில் இரண்டு காடை முட்டை

முழு நிலா நாளில் தற்காலிகமாக பூமியோடு சேர்த்து கட்டப்பட்டது போல தூங்கும் 
மணமாகாத அத்தை தன்னிடம் இதுவரை
யாரும் பயன்படுத்தாத ஒரு வாய்
இருப்பதாகச் சொல்லுவாள்
அதை அடிக்கடி கேட்டு  ‘வரகந்தாளுக்கு அடியில் இரண்டு காடை முட்டை’ யென
அவள் சிறிய மார்புகளைக் கேலி செய்யும் மாமன் உட்பட
யாரையும் ஏச நாதாளி பழ முள் போல ஒரு
புதிய பாலியல் வசை அவளிடம் இருக்கும்
யாருக்கும் சொல்ல எல்லா விதமான
யோசனைகளும் அவளிடம் இருக்கும்
கிணறு வெட்டும்போது
பாறைகளைத் தவிர்க்கும் யோசனை  உட்பட
தூரத்திலிருந்து தன்னையே தள்ளிவிடுவதற்கு
இருக்கும் இடத்திலிருந்தே முயற்சி செய்யும் அவளுக்கு
பெரிய வெயிலுக்கு அடியில் எல்லாமே புளிச்ச கள்ளு.

காது மடல்கள் உதிர்ந்த நாய்

பூமியின் கேவலுக்குச் செவிகொடுக்க
காதுமடல்கள் உதிர்ந்த ஒரு நாய் வருகிறது
அதனோடு அதன் நிழலும்,
மலையைத் தகர்த்தபோதும்
ஆற்றுமணலைச் சுரண்டிய போதும்
கடலைத் துரப்பணம் செய்தபோதும்
இரைச்சலால் நாய் தன் காதுகளை உதிர்த்தது.
நாயின் நிழல் வேகமாக ஓடி யாரோ ஒருவரின்
கெண்டைக்காலைக் கவ்வுகிறது
அங்கே யாருடைய கால் இருக்க  வேண்டும் ?
அவர் சரிந்ததும் அவருடைய
தொண்டையைக் கவ்வுகிறது நாய்
அங்கே யாருடைய தொண்டை இருக்க வேண்டும்?

கூம்பழத் தயிர்க்காரி

புழுதி பறக்கும் பொட்டலில்
மரங்கள் போல வெயிலெ நிற்கும்
அங்கு உயரத்தில் கள்ளு ததும்பும் பனைமரம் சிறிய நீர்நிலை அதன் நிழலில் ஓடு உறிச்ச
புளியங்கூம்பழத்தின் மீது வெள்ளாட்டின் பால்
பீச்சுகிறாள் உடனடி தயிர்க்காரி
எப்போதும் தூங்காத அவளின் உதடுகளுக்கு
உனி கொத்தாம் பழங்களின் சுவை
நாக்கில் எச்சில் ஊறும் எல்லோரும்
அவளின் காதலர்கள்.

பிற படைப்புகள்

Leave a Comment