1)
பக்கத்து வீட்டிலிருக்கும்
நீச்சல் வீராங்கனை
தீராத மண்டைவலியோடு துன்புறுபவள்.
வலியைப் போக்க
வெத்தலையைக் கிள்ளி
நெற்றிப்பொட்டுகளில்
ஒட்டியபடியே இருப்பாள்.
தெருக்குழாயில் குடம் வைப்பதில்
வீராங்கனையோடு
நீண்டகால மனக்கசப்பு.
அவளது தலைக்குள் நிகழும் அதிர்வுகள்
வழக்கத்தை விட அதிகமாக கேட்கின்றன.
உலகின் அதிக வாசனையுடைய
எனது தைலப் பீங்கானை
வீராப்பை விடுத்து
அவள் வாசலில் திறந்து வைத்தேன்.
நடுநிசியாகியும்
அவள் கண்டுகொள்ளவில்லை.
தூங்குவதுப் போல நடித்தேன்.
வெத்தலைகளைக் கலைந்துவிட்டு
கெட்டித் தைலத்துக்குள்
முங்கு நீச்சல் போட்டாள்.
2)
நீர் மடைக்குள் விழும்
ரத்தச் சொட்டுகளை
துண்டிக்கப்பட்ட தலையும்
ஆயுதமும்
நிறுத்தவேயில்லை.
கொலை நிகழ்ந்த காலத்திலிருந்துதான்
தலைவெட்டியான் மடை என்ற பெயரானது.
நித்தமும் மடையின் மேல்
கம்ப்யூட்டர் சாம்பிராணி கரையும்.
வெளிகளில் பரவிய வாசனைப் புகை
சாம்பிராணிகளின்
சாம்பல் உடல்களுக்குள் திரும்பவும் குடிபோவதை
அரிதாகப் பார்க்கலாம்.
அப்போதெல்லாம்
வறட்சி மடைக்குள்
தண்ணீர் சுழல் சத்தம் கேட்கும்.
காவு வாங்கிய ஆளோ
காவான ஆளோ
இருவரில் ஒருவரது சேட்டைதான் அது.