முத்துராசா குமார் கவிதைகள்
முத்துராசா குமார்

by olaichuvadi

 

அரசாணை

 

செல்லப்பிராணிகளின்
ஒரேயொரு உறுப்பை மட்டும் தான்
வளர்க்க அனுமதியுண்டு என்ற
அரசாணை வந்தது.
வயிறை மட்டும் விடச்சொல்லி
எல்லாமும் அறுக்கப்பட்ட எனது யானைதான்
வைக்கோல் படப்பு.
நண்பனது யானைக்கு வாயை
விட்டுச் சென்றனர்.
தரையில் துள்ளும் அந்த வாய்
மங்கம்மா கண்மாயின் மடை.
திருப்பூருக்கு
பஞ்சம் பிழைக்கப் போயாவது
சிறுமலை வாழைத் தார்களை ஊட்டுவோம்.

 

குறிப்பு •

ஒரேயொரு முன்னங்கால் தான்
எனது குட்டி யானை.
அறுத்த கத்திரிக்காயில்
மை தடவி
மூன்று கால்களின்
தடங்கள் பதிக்கிறேன்.

ழுங்கற்று செழித்த
சுருட்டைத் தலையையும்
கூர் கண்ணங்களையும்
வாழ்நாளில்
இப்போதுதான் மழித்தேன்.
போகும் இடமெல்லாம்
உயிரிழந்த மயிர்களை
உள்ளங்கைகளில்
பதுக்கி அலைகிறேன்.
அடையாளம் தெரிந்தும் தெரியாதது போல
பாவனை செய்யும்
நடிகர்களைக் கண்டால்
சுருள் பறவைகளாக
சிலுப்பியெழும்பும்
உள்ளங்கை மயிர்கள்
வெளிர் வான் போய்
அடையாள காலத்தைப்
பறந்து காட்டுகின்றன.

 

பிற படைப்புகள்

Leave a Comment