உன்னை எனக்கு
நெம்பப் புடிக்கும் றங்கனாயகி
ஒயர் கூடைப் புஸ்த்தகப் பையும் ஓட்டைச் சட்டி வாயுமாக
உடன் வரும் உன்னை
போஸ்ட்டாப்பீஸ் டவுசரும் மஞ்சப் பைக்கட்டுமாக வரும் எனக்கு
நெம்பப் புடிக்கும் றங்கனாயகி
உனக்காக நவ்வாப் பழ மரமேறி அங்கராக்கில் கறைபட்டு
ங்கம்மாவிடம் இடும்பன் பூசை வாங்குவேன்
பெருமுள் குத்த நாகதாளிப் பழம் பறித்து
கெளைய முடியாத பொடிமுள் எனக்கேறுனாலும் போச்சாதுன்னு
சிறுமுள் தொண்டைமுள் உனக்கு நீக்கிக் கொடுப்பேன்
செவந்திருக்குதா பாருன்னு
கல்கத்தாக் காளியாட்டம் நாக்கு நீட்டி
நீ காட்டும் அழகை ரசிப்பேன்
வேலி வேலியா ஒடக்காய்களை மொக்கையடி அடித்து
குற்றுயிராகக் கிடக்கும் அவற்றின் வாய் பிளந்து
ஒண்ணுக்கு ஊத்திவிடும் தெய்வீகச் சடங்கைக் கூட
நீ பாவம் என்றதால் விட்டுவிட்டேன்
நாலாம்ப்பில் நம்மைப் பார்த்து
‘ஜோடிக்கு ஜோடி ஜோடா மூடி’ பாடிய
குளிங்காட்டு சின்ராசோடு பாயும் புலி சண்டை போட்டு
நீ காணப் பகுடு பேக்கப்பட்டேன்
உங்கம்மா சத்தம் போட்டாலும் நானிருக்கும்போது மட்டும்
பசங்களோடு தெள்ளு விளையாட வருவாய்ஆட்டம் கலைந்ததும் ஜெயித்த தீப்பெட்டிப் பக்குகளையெல்லாம்
நீயே வெச்சுக்கத் தருவேன்
சோட்டாளிகள் பார்க்காத நேரம் பார்த்து
உன்னோடு பன்னாங்கல்லும் பாண்டியும் ஆடி
வேணும்னே தோப்பேன்
வேப்பமுத்து தப்புக் கள்ளை பொறுக்கவும்
கேளான் புடுங்கவும் பண்ணை ரக்கிரி பொறிக்கவும்
காடு காடா உங்கூட
திருவாத்தானாட்டத் திரிவனே நாவகமிருக்குதா றங்கனாயகி
எட்டாம்ப்பில் பத்து நாள் விடுப்பில்
ஊட்ல ஒலக்கையப் போட்டு உளுந்தங்களி தின்னுட்டிருந்துட்டு
தாவணியோடு நீ திரும்பிய அன்னைக்கு
ங்கம்மா மூணாம்ப்பில் சொன்னபடி
காக்கா தலையில கல்லப் போட்டு
புள்ளைகளை வயசுக்கு வரவைக்கும் வித்தையைக்
கேட்கும் ஆவலில் வந்தேன்
வெடுக்குனு மூஞ்சியத் திலுப்பீட்டுப் போயிட்டியே றங்கனாயகி
532
முந்தைய படைப்பு