சிட்டு
ஏரித் தண்ணீரை
கிண்ணத்தில் மொண்டுவைத்தேன்
சிட்டுக்குருவி தாகத்துக்கு.
பெரிய கிண்ணத்தில்
குடித்துக்கொள்கிறேன் என
ஏரிக்குப் பறந்தது சிட்டு.
இனி அது
எனை எப்படி நம்பவைக்கும்
தானொரு
சிட்டுக்குருவி என்று.
மலர் நீட்டம்
யதார்த்தத்தைவிட
சற்று நீட்டமாக வளர்ந்துவிட்ட
நெருஞ்சி மலர் நம்புகிறது
பூமியைத் தூக்கிக்கொண்டு
தான் பறப்பதாக.
சல்லிவேர்களும் நம்புகின்றன
அட்ச – தீர்க்க ரேகைகளுக்கு
தாங்கள் உயிரூட்டுவதாக.
சும்மா இருந்த பூமிமீது
ஒரு விதை விழ
சற்று நீட்டமாக
ஓர் அனுபவம் வளர்கிறது
அவ்வளவுதான்.
உயிரோட்டம்
ஆற்றின்
இக்கரையில் நிற்பவன்
அக்கரையில் நிற்கும் தன்னிடம்
யாருக்கும் கேட்காமல்
கத்திக் கத்திப் பேசிக்கொண்டிருந்தான்…
‘ஆறு ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்க
எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது
தெரியுமா?`
`ஆறு ஓடவில்லை நண்பா
நீர்தான் ஓடிக்கொண்டிருக்கிறது
ஆறு நின்றுகொண்டிருக்கிறது.`
`அப்படியா?`
`ஆம்
ஓடிக்கொண்டிருக்கிற எதுவும் வற்றாது
தவிர
ஈரமாக இருக்கும்.
நின்றுவிடுகிற எதுவும் வற்றிவிடும்
அதனால்தான்
ஆறு காய்ந்துபோகிறது.
சேர்ந்து ஓடாத
மீனும்
நானும்
நீயும்.
அமரம்
அடையாறு ஆலமரத்துக்கு ஞாபகமூட்டினார்கள்…
மரமே
உனக்கு 450 வயது ஆகிவிட்டது.
59 ஆயிரம் சதுர அடி பரந்திருக்கிறாய்.
அடையாறு கழிமுகத் தாதுக்களால்
செழித்து வளர்கிறாய்.
ஆயிரமாயிரம் புள்ளினங்கள் தினமும்
உனைத் தேடிவருகின்றன.
உலகம் முழுக்க விரிந்த புகழ் உனக்கு.
உன் மடியில்தான் தியோசஃபிக்கல் சொசைட்டி
பிறந்து தவழ்ந்து வளர்ந்தது.
காந்தியும் கஸ்தூர்பா அம்மையாரும்
உனைத் தொட்டுப் புளகாங்கிதம் எய்தினர்.
எல்லாப் புயல் மழைகளும்
உன் புஜ பலத்துக்குச் சேவகம் செய்கின்றன.
சென்னையின் ஒரு புராதனச் சின்னம் நீ.
ஒரு சீமாட்டியின் பெருவாழ்வு உனது.
நீ மரமே அல்ல
அமரம்.
……………….
……………….
அமரம்
சீராக மிகச் சீராக மூச்சுவிட்டது.
தனது உலகப் புகழ்பெற்ற விழுதுகளால்
துழாவியபடி சொன்னது…
`இவையா என் ஞாபகங்கள்,
இவையா நான்?
போதும்
போதும்
எனக்கு ஜே.கிருஷ்ணமூர்த்தியைத் தவிர
வேறு யாரும் ஞாபகத்தில் இல்லை.`
இடமும் ஊரும்
சென்னையில் இருக்கிறது திருச்சி.
குறிப்பாக
சென்னை பெருங்களத்தூரில்.
பேருந்து நடத்துனர்கள்
கூவிக் கூவி அழைக்கிறார்கள்
`திருச்சி… திருச்சி…`.
`திருச்சி`யைக் கொண்டுபோய்
திருச்சியில் விட்டுவிட்டு
அங்கு இருக்கும் `சென்னை`யைக்
கூவிக் கூவி ஏற்றிக்கொண்டு
சென்னையில் கொண்டுவந்து விடும்
சேவை செய்கிறார்கள்.
நன்றி ஓட்டுநரே
நன்றி நடத்துனரே
நீங்கள் மட்டும் இல்லையென்றால்
இடங்கள்
ஊர்களை ஏமாற்றிவிடும்.