சந்திரா தங்கராஜ் கவிதைகள்

by olaichuvadi

குடும்பப் புகைப்படம்

குடும்பப் புகைப்படத்தில்
அம்மா வெளிர் நீலப் புடவையில்
அழகாக இருப்பாள்
பூத்தோடும், வெள்ளைக்கல் இரட்டை மூக்குத்திகளும் எடுப்பாக இருக்கும்
அப்பா மாலையானதும்
சுடுதண்ணீரில் குளித்து வெகுநேரம்
கண்ணாடி முன் நின்று தலைவாருவார்
என்னோடு மூன்று குழந்தைகள்
அவர்கள் நன்றாகத்தான் வாழ்ந்தார்கள்
அதற்காக அப்பா வாழ்நாள் முழுதும்
மூன்று குழிகளை வெட்டினார்
அதில் முப்பதாயிரம் முறை விழுந்தெழுந்தார்
278 தடவை அவருடைய
கழுத்துவரை மண் மூடியது
7063 முறை மேற்கு மலையில் சுமையுடன் ஏறினார்
மாடுபூட்டாமல் நிலம் உழுதார்
ஒற்றைத் தலைவலியோடு
நெற்கட்டுகளை சுமக்கும் அம்மா ஒருத்தியாய்
மூனு ஏக்கர்நிலத்தில் களையெடுப்பாள்
ஒரு மத்தியானம் நாங்கள் தட்டாமாலை சுற்றியதற்கு
அவள் பருத்திக் காட்டில் கிறுகிறுத்து விழுந்தாள்.

மலையந்தி

காப்பிச்செடி பூக்கும் பருவத்தில்
புதிர்க்கட்டங்களுக்குள் நுழைந்து நுழைந்து வெளியேறுவதைப்போல
நானும் ஜான்சனும் மரங்களுக்குள் விளையாடினோம்
காடடர்ந்த நிலத்தில் வெயிலும் பனியும்
மாறி மாறி விளையாடுமே அதுபோல.
மண்ணோடு சேர்ந்த காட்டுப் பூக்களின் வாசம்
முறிந்த கிளைகளின் பச்சை வாசமென காடு கமழ்ந்தது.
பிறகு நானும் அவனும்
சிவந்த மிளகுகள் தொங்கும் கொடிகளுக்கிடையே நகர்ந்தோம்
பட்டுபோல ஊர்ந்து நகர்ந்தது வசந்தகால அணில்
அது தின்று மிச்சம்வைத்த காட்டுக்குள்
“குட்டியை எனிக்கி வளர இஷ்டமானு”
என்றபடி கைகளைபிடித்தான் ஜான்சன்.
அப்போது மஞ்சள் புற்களில்
மானும் மயிலும் அருகருகே படுத்துறங்க
மலைஏற்றத்தில் சமவெளி ஏறியது.
அன்று பிணைந்திருந்த எங்கள் கைகளில்
பட்டொளித்த வெயில்த் துளிகள்
கரிசலாங்கண்ணி பூக்களைப் போலிருந்தன.

திமிங்கிலம்

நேராக நிற்க முடியவில்லை
எப்போதும் நீர்நிரம்பியிருக்கும்
வயிற்றுக்குள் மிதப்பது
அசௌகர்யமாக இருக்கிறது
அதிலிருந்து வெளியேற
பழைய பள்ளிகூடத்திற்குச் செல்கிறேன்
முன்பொருநாள் நான்காம் வகுப்பறை
உணவைத் தூக்கிக்கொண்டு
மரவிட்டத்தில் ஊர்ந்துசெல்லும் எறும்புகளை
கதைகேட்கும் விரிந்த கண்களுடன்
உற்றுநோக்கியபடி இருந்தேன்
“பாடத்தைக் கவனிக்காமல் அங்கே என்ன வேடிக்கை” என்று
விளார் தெறிக்க என் முதுகில் பலமாக அடித்தார் நாகராஜ் வாத்தியார்
வலி பொறுக்காத என் கண்களுக்கு அவர்
திமிங்கிலமானார்
”திமிங்கிலம் திமிங்கிலம்” என்று கூவியபடி கைத்தட்டிச் சிரித்தேன்
பிள்ளைகளும் சிரித்தார்கள்
அவர் திமிங்கிலத்தைப்போல அசைந்தபடி அருகில் வந்து
என்னை அலாக்காகத் தூக்கி விழுங்கினார்
அன்றிலிருந்து
திமிங்கிலத்தின் வயிற்றில்தான் வாழ்கிறேன்

கொத்தாக உதிர்ந்தன காலம் 

சதா மலைகளின் மீது நடந்துகொண்டே இருக்கிறேன்
மலை நகர்ந்துகொண்டே இருக்கிறது
பாறைகளின் மேல் என் ஆடுகள் படுத்துறங்குகின்றன
மஞ்சி மூடி கிடக்கிறது என் வீடு
நானோ தூரத்திலேயே நிற்கிறேன்.
தனிமையின் நீண்ட பாதத்தின்மேல்
என் கனவுகள் முணுமுணுத்தபடி அலைகின்றன
எல்லாவற்றிற்கும் உன் தலைவிதியே காரணம் என்கிறார்கள்
அதை மாற்றும் முயற்சியாக
என் வலது கை ரேகைகளை இடதுகையாலும்
என் இடது கை ரேகைகளை வலதுகையாலும்
அழித்துக்கொண்டே இருக்கிறேன்.

போகம்

1
தேக்கிலையின் சொரசொரப்பாய்
வெடவெடக்கும் இரவு
எப்போதோ மூடிவைத்த உடலைத் திறக்க
பேரலையோடு வருகிறான்
கடலிருந்து உப்பை அள்ளி வீச
முத்தென பூக்கிறது உடல்
கட்டிப்போட்ட கிடாயாய் முண்டும் சரீரத்தில்
எப்பொழுதும் நிகழாத போகம் முடிந்தது
இறங்க மறுக்கும் என் இரு மலைகளை
கையோடு எடுத்துச் செல்கிறான்.

2
பால்கனியில் வந்தமர்கிறது கிளி
கண்களில் நீண்ட தாகம்
சுறுசுறுவென நரம்புகள் நொடிய
பச்சை மரமாகிறது என் உடல்
கிளைகளில் தொங்கும் சிவந்த பூக்களில்
மகரந்தக்குரல் தாப ஸ்ருதியாய் ஒலிக்க
ருசிதேடி மரத்தைப் புரட்டுகிறது கிளி
அதன் நாக்கில் இனிக்கிறது
நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே
காய்க்கக்கூடிய ருசிமிக்க இரு கனிகள்

3
அவனின் பெருங்கடல் கசப்பில்
என் ஒரு துளி உப்புநீர் விழ
உயரப் பறந்தன மீன்கள்

எனது பெருமலைக் கசப்பில்
அவனது ஒரு துளி உப்புநீர் விழ
உயரப் பறந்தன மரங்கள்.

4
எவ்வளவு நேரம் நின்று பார்த்துக்கொண்டே இருப்பாய்
மலையைப் புரட்டு
அங்கே ஓடிக்கொண்டிருக்கிறது யாரும் பருகாத நீர்

5
மலைக்கடியில்
கடலுக்கடியில்
மறைந்திருந்த பெருங்காமம்
நடுச்சாலையில் வாகனத்திற்கிடையே நிகழந்த
ஒரு நொடி நேர முத்தத்தில் தீருமா?
அண்டத்தைப் புரட்டும் ஆலிங்கனம் செய்
தின்னத் தின்ன தீராது பெருகும் ஊற்றைத் திற
நீ என் பறக்கும் குதிரை
சேனை கட்டாத குதிரை
நான் உன் மீது படரும் நதி
தோணி மிதக்காத நதி
அதிரும் அச்சத்தோடு ஆழத்தில் இறங்குகிறாய்
எதுவும் முடியப்போவதில்லை
நாளைக்கும்
நாளைக்குமாய் தொடரத்தான்போகிறது

பிற படைப்புகள்

Leave a Comment