பி.ராமன் கவிதைகள்
மலையாளத்திலிருந்து தமிழில்: ராஜன் ஆத்தியப்பன்

by olaichuvadi

பி.ராமன்

 

பெருநகரின் குழந்தை

படுத்திருந்து
அங்குமிங்கும் வாலையசைத்து
குட்டிகளுக்கு விளையாட்டுக் காட்டும்
பூனையைப்போல்
இப்பெரு நகரம்
குறுக்கு வழிகளையும்
இடுங்கிய தெருக்களையும்
காட்டிச் செலுத்தியபடி
புதிய என்னை விளையாடுகிறது.

எதைத் தொடர்ந்தும்
எங்கும் சேர முடியவில்லை.

எப்போதும் வழி தவறுகிறது.

அதனால் என்ன
நானும்
இப்பெருநகரின்
குழந்தையாகிவிட்டேன்.

ஆறு காண் படலம்

அந்த முதுகைப்
பார்க்கச் சொல்கிறேன்
பாறையில் தவறுவதுபோல
தொப்பென வீழ்கிறது காட்டருவி.

அசையும் எனது முதுகில்
தனக்குத் தானே
ஆலவட்டங்களும்
வெண்சாமரங்களும் வீசிக்கொண்டு
ஆறொன்று
உலா புறப்படுகிறது
எனது
கிராமத்தை நோக்கி.

வெளியே
கடந்து செல்வது
ஒரே ஆறு.

விளைச்சல்

கொம்பில் பருத்துச் சரிந்திருக்கும்
முள்விரிந்த பலாவின் மீது
பகல் முழுதும்
பற்றிப் பிடித்து
உறங்குகிறது அணில் ஒன்று.

பயனுறுதலுக்கு முன்
மரித்துப்போன
விவசாயி ஒருவன்
தான் வளர்த்த
சேனைத் தண்டின் அடியில்
வட்டக் கிழங்கை அணைத்தவாறு
எல்லாப் பொழுதிலும்
அயர்ந்து உறங்குகிறான்.

பலாப் பழத்தை கீழிறக்கவும்
சேனைக்கிழங்கு அகழ்ந்தெடுக்கவும்
நேரம் கூடிவிட்டது
இருவரும் எழுந்து
இடம் மாறி படுத்துக் கொள்ளுங்கள்

படர்ந்த கொடியில்
தாழ்ந்திருக்கும்
கும்பளங்காயின் மீதோ
ஒரு பெரிய
காவுத்துக் கிழங்கின் மீதோ.

(காவுத்து- கொடி வகையைச் சேர்ந்தது.
வேரிலும் கொடியிலும் கிழங்கு பிடிக்கும். )

விசாரணை

நண்பர் ஒருவரை
அவரது ஊருக்குத்
தேடிச் சென்றபோது

“அவர் இப்போது இங்கில்லை.
எர்ணாகுளத்தில் ஏதோ ஓரிடத்தில்”
ஊரார் சொன்னார்கள்.
நான்கு மாதங்களுக்கு முன்
இடம் பெயர்ந்தவரைப் பற்றிச்
சொல்வதுபோல.

“அவரைப் பார்த்து பல காலமாயிற்று”
பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு
முன்பே
உறைவிடம் இழந்தவரைப் பற்றிச்
சொல்வதுபோல.

“பூர்வம் இங்குதான்
சொந்த மண் உண்டு.
எல்லாம் தொலைத்து
எங்கு சென்றாரோ”
இரண்டு தலைமுறைக்கு முன்
தேசம் விட்டவரைப் பற்றிச்
சொல்வதுபோல.

இனியும் இங்கு நின்றால்
அய்யாயிரம் வருடத்திற்கு முன்
சென்றவரைப் பற்றியும்
கேட்க வேண்டியிருக்கும்.

நேற்று
ஊர்விட்டுச் சென்றவர்
அய்யாயிரம் வருடத்திற்கு
முந்தய நதி.

அதில்
பெருகி எழுந்தது போலிருந்தது
அந்த ஊர்.

முதல் பெயர்

உலகின்
அனைத்து மொழிகளிலுமிருந்து
உருவான பழைய பெயரில்
அதிநவீன கார் ஒன்று
இன்று ஓடத் தொடங்கியது.

அப்படி ஒரு பெயரை
எனக்கு
எப்படித் தெரியும் என்பதுதானே
நீங்கள் வினவுவது?

ஆம்
காரைக் கண்டதுமே
நான் அதை முடிவு செய்துவிட்டேன்
அவ்வளவுதான்.

முன்னே சென்று நின்று
அந்தப் பெயரால்
அதனை அழைத்தேன்
அது
நீளமான
விலக்கொலியை முழக்குகிறது.

உலகின் எல்லா மொழிகளையும்
பிழிந்திறக்கி
முதல் பெயரைக் கொண்டிருக்கும்
காரே
நான் விலக மாட்டேன்.

பிற படைப்புகள்

Leave a Comment