க.மோகனரங்கன் கவிதைகள்

by olaichuvadi

 

மறு மலர்

உறக்கத்திலிருக்கும்
குழந்தை முன்
மிருதுவான ரோஜாவை
நீட்டுகிறார்
கடவுள்
கண் திறவாமலே
சிரிக்கிறது குழந்தை
மறு நிமிடம்
மலர் இருந்த கையை
மறைத்துக் கொள்கிறார் அவர்
கண் திறவாமலே
சிணுங்குகிறது குழந்தை
குமரி வடிவாயிருந்த
குழந்தையொருத்தி
சொன்ன கதையை
அகல விரிந்த விழிகளோடு
அதிசயம் என்பதாய் கேட்டிருந்தவனுக்கு
அப்போது தெரியாது
கடவுள் தன் முன்
காட்டி மறைக்கும்
இளஞ் சிவப்பு வண்ணப்
புதிர்
அதுவென.
இப்போதும்
முடிவிலே இன்பம் தொனிக்கும்
கதைகளைப் படிக்கும்போது
நினைவின் மடிப்பினின்றும்
வாடிய மலர் ஒன்றின்
வாசனையை நுகர்கிறான்
அவன்.

லோகோ பின்ன ருசி

யாரும் பார்க்காதபோது
இரகசியமாக வாயிலிட்டு
ஒரு கடி கடித்துவிட்டு
உமிழ் நீரோடதன் சுவை
உள்ளிறங்கும் முன்பே
தீர்ந்துவிடப் போகிறதென்ற பதட்டத்தில்
திரும்பவும்
பையிலிட்டு பதுக்கி வைத்த
சிறு வயது
இனிப்பு மிட்டாயின்
அதே தித்திப்பு
உரிமை கொண்டு நான்
ஒருபோதும் பிறர் முன்
உச்சரித்துவிடக் கூடாத
உன் பெயருக்கு

தெளிவு

நெஞ்சில் ஒளிர்ந்த
நினவு முகம்
மங்கி விட்டதென்ற
பதட்டத்தோடு
நண்பரின்
மனசிகிச்சை மையத்திற்கு
போனேன்
பல கேள்விகளுக்கும்
சில பரிசோதனைகளுக்கும்
பிறகு
எனக்கு கோளாறு
மனதில் இல்லை
கண்ணில்தான் என்றார்.
ஆதலால்
கண்மருத்துவரிடம்
காட்டி புதிதாக
கண்ணாடி மாற்றிக் கொண்டேன்.
எல்லாமுமிப்போது
இன்னமும்
துலக்கமாகத் தெரிகிறது
ஆனால் ,
இந்தக் கண்ணாடியைத்தான்
எங்காவது கைமறதியாய் வைத்துவிட்டு
அடிக்கடி தேடவேண்டியிருக்கிறது.

பிற படைப்புகள்

Leave a Comment