லக்‌ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்
லக்‌ஷ்மி மணிவண்ணன்

by olaichuvadi

 

குழந்தையை அழைத்து
கடைவீதிக்கு வந்த அப்பன்
முதலில் இல்லாததை கேட்டான்
ஆனால் என்னிடம்
அது இருந்தது
இருக்கிறது என்றேன்

இருந்ததில் இல்லாததைக் கேட்டான்
ஒவ்வொன்றாக எடுத்து
முன் வைத்தேன்
எல்லாமே இருந்தது

இருப்பதில் இல்லாதது ஒன்றுண்டா
என்றான் மீண்டும்
உண்டு என்றேன்

இருப்பதில் இல்லாத ஒன்று
வைத்துக் கொள்ளச் சொல்லி
குழந்தையைத் திருப்பித் தந்தேன்
பேரம் பேசும் போது
என் தோளின் மீதேறி நின்று
தந்தையைக்
கவனித்துக் கொண்டிருந்த
குழந்தையை

முதலாளியைக் கவிழ்த்து
வேலைக்கு வந்தவன்
உரிமையாளராக நின்று கொண்டிருக்கிறான்
அவன் தரப்பு சரியாகக் கூட
இருக்கலாம்
என்றாலும்
பட்டறையில் அவனைக் காண்பதில்
சங்கடம் உண்டு

*

அண்ணனின் அகால மரணம்
அண்ணிக்கு அடைக்கலம் செய்தவன்
பெரிய முற்போக்குதான் சந்தேகமில்லை
மாபெரும் தயாளனே மாறுபாடில்லை
என்றாலும்
பஜாரில் ஜோடி கலகலத்துச் செல்கையில்
எங்கோ மறைவிலிருந்து பார்க்கும் அண்ணன்
திடுக்கிடுவது போல
காண்போர் உள்ளம்
திடுக்கிடுகிறது

அவன் சொந்த தம்பியாக அல்லாமல்
வேறொருவனாக
இருந்திருக்கக் கூடாதா?
என்பதே
அந்த
திடுக்கிடல்
வேறொன்றுமில்லை

*

ஒரு காலத்தில் உன்னைப் போலவே
இருந்திருக்கிறேன்
முதலமைச்சருக்கு ஆலோசனை
சொல்லியிருக்கிறேன்
ப்ரதான் மந்த்ரியை எதிர்த்திருக்கிறேன்
சாதுக்களிடம் சண்டையிட்டிருக்கிறேன்
தெய்வங்களையெல்லாம்
நிந்தித்திருக்கிறேன்
போவோர் வருவோரையெல்லாம்
தாக்கியிருக்கிறேன்
அடியாரை அடித்திருக்கிறேன்
உடன் ஒருவன் இருந்தால் போதும்
சாமியைத் தோள் எட்டி
மிதித்திருக்கிறேன்
எதற்கும் முயற்சித்ததில்லை
எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டிருக்கிறேன்
ஒரு காலத்திய
கலகக்கடவுள் நானிருந்த இடத்தில்
நீ வந்து முளைத்திருக்கிறாய்

அப்படியே உனக்கு என் வாலிப முகம்
அதே ஆற்றல்
அதனால்தான் எனக்கு பயமாக இருக்கிறது

முற்போக்கு கலகமுகம் கழுவி
வீட்டு நெல்லி மரத்திற்கு
தண்ணீர் விடுவதிலிருந்தே தொடங்கி
முதலில் இருந்து
புறப்பட்டு களத்திற்கு வந்து சேர
நான்கு கடல் தூரம் இருக்கிறது
தாங்குவாயா தம்பி?

*

எட்டு மரப்பலகைகள் கொண்ட
கடை நீலவேணி அக்காவுடையது
வெற்றிலை பாக்கு ,சர்பத் ,தேன்குழல் மிட்டாய்கள்
குளிர்ந்த பானை மோர்
சுற்றுப் பீடிகள்
சுருட்டு வெம்மை

சாலை சிறுக சிறுக உயர்ந்ததில்
திண்ணை இரண்டடி பள்ளத்தில்
மாட்டிக் கொண்டது
நீலவேணி அக்கா
பாதி உயரத்தில்
நின்று தெரிகிறாள்

அவள் காலடிகள்
மூன்று தலைமுறைகளுக்கு
முந்தைய காலத்தில்
புதையுண்டிருக்கிறது

கடைக்குள் உள்ள காலம்
வெளியில் இல்லை
வெளியில் உள்ள காலத்தை
உள்ளே அனுப்ப
வழிகள் ஏதுமில்லை

நீலவேணி அக்காவாக இருக்கும் போது
அந்த கடைக்குள்
நுழைந்தாள்
அவள் முழு உயரம் அறிந்திருந்த
காலம் அது

இந்த பக்கம் இருந்தால்
அந்த பக்கத்திற்குள் நுழைய முடியாது
அந்தப் பக்கமிருந்தாலோ
இந்த பக்கத்திற்கு
வாசல்கள் இல்லை
இருவேறு காலங்களுக்கு மத்தியில்
வெறுமனே
எட்டு பலகைகள்

*

நானொரு கடை நடத்திக் கொண்டிருக்கிறேன்
காலையில் பொருட்களையெல்லாம்
எடுத்து திண்ணையில்
வைப்பேன்
வருவதற்கு முன்பாக
சில மூப்புகள்
அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்
வம்பு
பால்யம்
நேற்று இன்று
எல்லாம்

மாலையில் விற்றதுபோக
விற்காததுபோக
அனைத்தையும்
உள்ளே
எடுத்து வைத்துவிடுவேன்

அதன்பின்னர்
நான்கைந்து நாய்கள்
அந்த திண்ணையை
எடுத்துக் கொள்வார்கள்
அந்த கடை அவர்களுடையது
என்றுதான்
அவர்கள் நினைக்கிறார்கள்

நாய்கள் வராதவொரு நாளில்
ஒரு குரங்கு
வந்திருந்தது என கேள்விப்பட்டேன்
விருந்தினராக
வந்தது அது

எல்லாவற்றுக்கும் சேர்த்துத்தான்
நான் வாடகை
செலுத்திக் கொண்டிருக்கிறேன்
இரவில் சில பறவைகள்
கூரையில் வந்தமர்ந்து செல்லுமாயின்
நான் தருகிற வாடகைக்கு
கணக்கு சரியாக 
இருக்கும்

*

இருபது வருடங்களுக்குப் பிறகு
நண்பனை
சந்தித்தேன்
ஹலோ என்றேன்
ஹலோ என்றான்
அடையாளம் தெரியாமல்
நகர்ந்தான்

அடையாளம் தெரியாமல் நகர்வது எவ்வளவு சுகமாயிருக்கிறது?

நகர்ந்தவன் பின் திரும்பி
உங்கள் குரலை எங்கோ
கேட்டிருக்கிறேன்
என்றான்

உலகில் ஏழுபேரின் குரல்கள்
ஒன்று போலவே இருக்கும்
என பதில் கூறி
திரும்பிவிட்டேன்
எடுத்துக்கொண்ட சுகத்தை
திருப்பித் தரும்
மனம் இல்லாமல்

*

சொல்லிக் கொள்ளும் படியாக
ஒரு வேலையும் இல்லாமல்
வந்து திரும்புகிறவனிடம்
வேறொரு மொழியில் இந்த நகரம் உரையாடத்
தொடங்குகிறது
தனது ஒப்பனைகளில் ஏன் உனக்கு ஆர்வமில்லை என அது
கேட்பதில்லை

ஒளி ஆபரணங்களைப் பூட்டி
அவனை அந்தியில் வழியனுப்பும் போது
என்னைப் பரபரப்பில்லாமல் பார்த்துச்
செல்பவனே நீ வாழ்க என வாழ்த்துகிறது
வாழ்த்தொலி கேட்கையில் கொண்டு
வந்திருந்த கத்தியை எடுத்து ஒளித்து
வைத்துக் கொண்டேன்

எனினும் சபையில் கவனிக்கப்படாத பேரரசியை ஒப்ப
எனது முதல்பார்வையில் நகரத்தின் உடல் நடுங்கியதை
நகரமும் பார்த்தது
நானும் பார்த்தேன்

பிற படைப்புகள்

Leave a Comment