எனது திசைகாட்டி
மிகையாக உரைக்கவில்லை
தனது பணியைச் செவ்வனே புரிவதில்
இந்த துருப்பிடித்த திசைகாட்டிதான்
எனக்கு முன்னோடி
விடுப்பு கேட்டதில்லை
அயர்ந்திருந்ததில்லை
இரண்டாயிரம் வருடங்கள் கழிந்துவிட்டன
இன்னும் கடமை தவறாது
பிறந்ததிலிருந்தே
வடக்கை நோக்கி
தனது விரலை
நீட்டிக்கொண்டேயிருக்கிறது
அந்தப் பக்கம் பார்
எவரோ வருகிறார்கள்
அதுவும்
கையில் கத்தியோடு என்பது போல.
அதனால்
பெரும்பாலும்
வழித்துணையாக
அது கூடவே செல்கிறேன்
சமயங்களில்
சந்தோசப்பட்டுக் கொள்ளட்டுமே என
தூரத்தின் ஆழங்களில்
தொலைந்தும் போகிறேன்
பதிலுக்கு
நத்தைகள்
மலையுச்சியை அடைகிற நாட்களில்
மிகமிக ரகசியமாக
இரண்டே உலோக கைகளால்
பூமியின்
மொத்தக் காந்தப்புலத்தையும்
எனக்காகத் தோற்கடித்துக்காட்டும்
உடனே பாராட்டிவிடுவேன் நான்
எடை என்பது என்ன?
வழியனுப்பி வைக்க எவருமில்லாதவர்கள்
பிறரை வழியனுப்ப வந்தவர்களை
காணும்
மாலைப்பொழுதும் வந்துவிட்டது
அதன் கரங்களில்
ஓர் அலங்கரிக்கப்பட்ட பரிசென
ரத்தமும் சதையுமாக
நாட்களையும் பிரிவையும் கொண்ட உனது ஞாபகம்
தனிமையில் கூடடையும் பறவைகளுக்கு
அந்தப் பரிசை
அது வழங்க
பின் அவை நிலக்காட்சியில்
மெது மெதுவாகப் படரும் சோகத்திற்கு
பிரித்துக் காண்பிக்க
சட்டென அந்தி வானெங்கும் திட்டுத்திட்டாக இருள்
சற்றுநேரத்திற்கு
என்னால் ஞாபகப்படுத்திக்கொள்ள முடியவில்லை
கவிழ்ந்த எனது தலையை
எப்படி உயர்த்துவது என்று.
வெறுமையின் செழிப்பு
எனக்கு ஏன் தெரியாமல் போயிற்று
நீரினை அருந்த நீர் அவசியமில்லையாம்
ஊழி தேக்கிய வானுக்குக் கீழே
நூற்றுக்கணக்கான வியர்வைத்துளிகளுடன்
சற்றே நிற்கிறேன்
என் கரங்களைக் குவித்து
அள்ளியெடுக்கிறேன் வெங்காற்றில்
எங்கெல்லாம் அள்ளுகின்றேனோ
அங்கிருந்தெல்லாம் தண்ணீர்
இது போதாதா
இனிதான் நடப்பேனே