மெய் பருவம் இசை
ஸ்ரீஷங்கர்

by olaichuvadi

 

1

சுரங்க ரயில் நிலைய இயந்திரத்தில் நிரப்பிக்கொண்ட காஃபி கோப்பையோடு, இருக்கைக்குத் திரும்புகையில் அதிர்ஷ்டம்போல் முன்கேசமலைய, இடுங்கிய பழுப்புக் கண்களுடன் முறுவலித்தபடி அவள் எதிர்ப்பட்டாள். அங்கே ஒரு திசையிலிருந்து மற்றொரு திசைநோக்கி ஒளித்துண்டொன்று ஊர்ந்து கடந்தது. நீலவண்ண உடையில் எடுப்பான, அந்த வசீகரத்  தோற்றத்தின் அர்த்தமே என் மனம்முழுதும் நிறைந்து ததும்ப, ஒருவித தடுமாற்றத்தைச் சந்தித்தேன். தன் அழகின்மேல் சிறிதேனும் கர்வம் கொண்டிருப்பதாகத் தோன்றவில்லை. நிச்சயமாக, செவ்வனே உடற்பயிற்சியை மேற்கொள்பவளாக இருக்கவேண்டும். மயக்கமூட்டும் தெளிவான வளைவுகளோடு, ஒயிலாக, உடலைப்  பராமரித்திருந்தாள். உறைந்துவிட்ட இருப்பிலிருந்து என்னை மீட்டு, அவளுக்கு முகமன் தெரிவிக்க சிறு காலதாமதம் ஆனதை உணர்ந்தேன். கவனித்தவள், தன் மென்தளிர் விரல்களைத் தந்தாள், ரித்து’ என்றபடி. இதுவரை எனக்குக் கிடைத்திராத வெகுமதிபோல் அந்த ஸ்பரிசத்தை உணர்ந்தேன். பனிச்சுனையின் படிவுகள், எங்கும் நறுமணச்சலனம். திருமொழியை மெல்கிறேன். அங்கிருந்த திறந்தவெளி இருக்கையில் அமர்ந்து எங்களைத் தொடங்க, வறண்ட குளிர்வீசும் அந்த மாலைக்காலம் தீட்டியிருந்த ஈயநிறமானது அடர்ந்துகொண்டிருந்தது.

2

வெளிச்சம் வெள்ளமெனப் பாயும்படி அகண்ட ஜன்னல், அதற்குவெளியே இருக்கும் வானம், தடையற்றுத் தீண்டுகிற குளிர் காற்று. மேலும் மரத்தளத்தைக் கொண்டிருந்த அந்த அறை, தொடரும் கனவொன்றை வரைந்துவிட வற்புறுத்தியது. நெடுநாட்களாக தள்ளிவைத்திருந்த பணி நிறைவேறக் கிடைத்த தருணம் என்று அதைச் சொல்லவேண்டும். நெற்றியைச் சுற்றி இரவின் போதைகனம். தொடங்கி முடித்திராத ஓவியத்தில், பொரிந்த கொங்கைமுனைகள் உரச, நாவை சுவைத்துக்கொண்டிருக்கும் கண்கள்மூடிய இருவர் எச்சில்நிறத்தில் விரிந்துகொண்டிருந்தனர். அழைப்பின் பறவைகள் கிசுகிசுக்க, ரித்து பிரவேசிக்கிறாள் அதிர்ஷ்டமென. உதடு சுவைத்து, மணந்ததிர்கிற அவள் தேகம் எனை ஆட்கொண்டது – பேலட்டிலிருந்து நழுவிய வர்ணங்கள் சணல் விரிப்பில் சிரிக்க. சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த ஓவியங்கள்குறித்தும் சிலமுறை வியப்புமேலிடும் பாவனையையும் அவள் பகர்வதை ஒத்துக்கொண்டபோது, வளப்பமான அவளது பிருஷ்டங்களை  தடவிக்கொண்டிருந்தேன். மேற்கின் நெற்றியில் நிலா மிதந்துகொண்டிருந்தது. ஓவியத்தில் பங்கெடுத்துக்கொள்ளும் ஒரு நிறம், தனக்குத் தேவையான துணைநிறத்தை அழைத்துக்கொண்டுவிடுகிறது, இல்லையா?’ என்று உச்சரித்தபடி, காதுகளை மறைத்திருந்த கூந்தலை விலக்கியவாறு மெல்ல பார்வையைத் திருப்பினாள். அந்த வசீகர இசை காதுகளில் சுழன்றுகொண்டிருக்க, அவளை எதிர்கொள்ளமுடியாமல் கிறங்கினேன். நிகழின் விருப்ப அசைவுகளை சித்திரப்படுத்திப் பார்த்தபோது, தோழி எஷிதாவின், Inmost desire spattering hops of two coral colored birds என்ற ஓவியம் நினைவிலாட, குனுகியது தாபம். மேசையிலிருந்த மதுக்கிண்ணங்களைப் பற்றுகையில், சிகரெட்டை விடுவித்த அவள் உதடுகளில் தவழ்ந்த புகை கலைந்து நடனித்தது. தாம் ஊர்ந்து மேய்வதற்கான வெளியைக் கண்டுகொண்ட உடல்கள், கசிந்து சொட்டத் தொடங்கியிருந்தன. 

3

உதிரப்பெருக்கு முன்காலையிலேயே தொடங்கிவிட்டது. இது, என்னால் தவிர்க்க  இயலாததும்தான். உறைபதனப் பெட்டியின் மாமிசம், வெண்ணெய்ப் பாளங்கள் மற்றும் ரொட்டிகள், பழங்கள் ஏதும் தேர்வில் இருந்திருக்கவில்லை. வேகவைத்த காய்கறிச் சாறும் உலர் பழங்களுமே. இந்தப் பொழுதுவரை அவளிடமிருந்து எனக்கு ஒரு செய்திகூட இல்லாததற்கான காரணம்குறித்த யூகிப்பானது சோர்வுற்றிருக்கவில்லை. அதிகம் தேவைப்படுவதெல்லாம் அவளின் வெதுவெதுக்கிற அண்மைதான். இவ்வுடல், வர்ணங்கள் முயங்காது கிடக்கும் வெளிர்ந்த கித்தான் என்பதாக அர்த்தப்படுத்திக்கொள்ள நேர்ந்து, இன்றானது விளிம்பில் வழிந்தபடியிருக்கிறது. அடிவயிற்றுச் சூட்டிலிருந்து ஓர் பூனையின் அழைப்பு. எங்கிருக்கிறாய்… மேலுடை அணிந்துகொள்ளுமாறு வெதுவெதுக்கும், தெளிவற்று நிலவுகிற மெல்லதிர்வொன்றின் வற்புறுத்தல் நீள்கிறது. இந்த அறையைப்பற்றி சொல்வதென்றால், என்னைச் சிதைத்துக்கொண்டிருக்கிற மோசமான மிருகம். குறிப்பாக, முசுமுசுக்கும் படுக்கைதான் அதன் இரக்கமற்ற நகங்கள். ஒரே பாய்ச்சலாக, இளஞ்சிவப்புநிற வளையில் என்னைத் தொலைத்துக்கொள்வதென்பது ஒருவேளை, நிறைவேறமுடியாத ஒரு கனவென நம்பவேண்டியிருப்பதை ஏற்கமுடியவில்லை. கொங்கைகள் தளர்ந்திருப்பதை உணர்கிறேன். ஓர்மையில்தோய்ந்த உடலின் விருப்புகள், துணையை இழக்கவியலாது என்று சொல்லவைக்கும்படியான தீவிர கிசுகிசுப்பு மேலெழும்பி ஒலிக்க, அதன்மேல் அக்கறையின்றி இந்த இரவின் விழிகள் திறந்துகிடக்கின்றனபோல. அன்பே, என் ஸ்தூல அற்புதமே

4

சட்டென எவரையும் அனுமதித்துவிடாத இயல்பு என்னைப் பொதுவிலிருந்து தூரவைத்திருக்கிறது. இரு வாழ்வுக்கிடையிலான ஒரே மீட்பர் எனக்கு அவள்தான். அடிச்சிறகுகளில் பழுப்புநிறம் சூடிய புறாவே, கட்டற்றதான உன் அதிகாரத்தை எதிர்நோக்கி காலங்கள் தீர்ந்துகொண்டிருக்கின்றன. நரையேறிய நதியில் தொல்நாயொன்று சப்தமெழும்படி விடாய் தணிக்க, உன் அடர்த்தி திணறலை உருவாக்கிவிட்டது. பட்டிழைகள் உராயும்படியான மென்நெசவுப் படுக்கையில் நீ நிஜம்தானா? வேட்டைத்தனிமை பெருக்கெடுக்க, பசுந்தேகத்தை முட்டித்தள்ளிச் சரிக்கிறாய். குளிர் மெதுமெதுக்கும் விரிப்பில், இதநீலம் சிந்திய உடலின் கிடப்பைத் திருத்தி, பூரித்த அவயங்களின் தாகம் கசிய சுற்றிவரத் தொடங்கிவிட்டோம். கவிழ்த்திய கலப்பைவடிவ வழுக்குமரக் காலில், அகலித்துப் பெருத்த புட்டங்கள் சறுக்க காலணிகலனின் தெறிக்கும் இன்னிசை. கலசங்களைப் பற்றி கொஞ்சுகிறேன். இனிய கணப்பே, ததும்புகிற பொங்குசுனையை இசைத்து ஓய்கையில் நீளும் ரீங்கரிப்பு உன் சுவையின் கீதமா? எதைத் தேடித்தேடி அயர்கிறோம். உன் விரல்களில் நம் ராஜ்ஜியம் மெல்ல அதிர்வதை உணர்ந்த பருவம் இப்போது, அதன் முற்றத்தில்  காற்றுமணிகளை மெலிதாக கிண்கிணிக்கச் செய்கிறது. துழாவித் திரி ஒய்யாரமே… என, என் திமில்களைப் பிடித்து வசக்குகிறாய். மூடுபனி கவிந்த மலையுச்சிக்கான ஒற்றையடிப்பாதை திறந்துகொண்டுவிட்டது.

பிற படைப்புகள்

1 comment

பாரதிநிவேதன் August 8, 2020 - 4:12 pm

ஸ்ரீ கித்தானுக்கும் இசைக்கும் தொடர்பினை உண்டாக்கியிருக்கிறாய். மேற்கத்திய வெளியில் இந்தக்காதலை உடலை அனுசரனையாக்கும் வாகு கொஞ்சமல்ல நிறைய பித்தம் எழுப்பி விடுகிறது. நுட்மான சொற்களை எளிமைக்குள் நீந்தவிட்ட காலத்திற்கும் சொந்தமாகிவிட்டாய் ஸ்ரீ வாழ்த்துகள்.

Reply

Leave a Comment