சாதாரணமானவர்
கண்டராதித்தன்

by olaichuvadi

 

அவர் ஒரு சாதாரணமானவர்
ஒரு அரசு ஊழியராக
அல்லது
அகில இந்திய அளவில்
வளம்கொழிக்கும் அமைப்பின் உறுப்பினராக
அல்லது மத்திய மாநிலக் கட்சிகளின் உள்ளூர் கிளைப் பொறுப்பாளராக
வலதுசாரி அல்லது புரட்சிகர அமைப்பின் விசுவாசம் மிக்கத் தொண்டராக
மாநில அளவில் வளர்ந்த சாதிக்கட்சியின் தீக்குளிக்கும் போராளியாக
இருக்கும் வாய்ப்புள்ள அருமையான மனிதர்தான் அவர்

ஆனால் அவரது துரதிருஷ்டம்
தன்னை ஒரு சாதாரணமானவர் எனக் கருதிக்கொண்டார்
இச்சமுதாயத்தில் தனக்கு ஒரு பொறுப்புமிக்க
இடமிருப்பதை கண்டுகொள்ளாத அவர்
அரசிடம் லாபநோக்கமின்றி நஷ்டப்படும்
விவசாயியைப் போல
சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்

இளம்வயதில் பொறுப்பற்று திரிந்துவிட்டு தற்போது
மிகச்சாதாரணமான வாழ்க்கையொன்றில் வாழ்ந்துகொண்டிருப்பதாக
சில கேடுகெட்ட அரசு ஊழியர்கள் மற்றும் பணம் கொழித்தவர்கள்
சொல்லிப் பழிப்பதுண்டு, நான் சொல்லியதுபோல் அவர் மிகச்சாதாரணமானவர்
இதையெல்லாம் ஒரு சாதாரணமானச் சம்பவமாக
கருதிச் சென்றுவிடும் வழக்கம் அவருக்கு உண்டு

அவர் தற்போது தன் இளமையை மெல்ல இழக்கும் வயதிற்கு வந்திருக்கிறார்
தன்னுடைய போதாமையை, இயலாமையை, வறுமையை சாதாரணமாகக் கடந்த அவர்
ஒரு ஞாயிற்றுக்கிழமை அந்தியில் லாபியில் அமர்ந்து தேம்பித்தேம்பி அழுதுகொண்டிருந்தார்

ஒரு சாதாரணமான நண்பர் என்கிற முறையில் விசாரித்தபோது
பணத்தின் பொருட்டு தாம் எப்போதும் அவமானப்படுவதை
அழுது தீர்ப்பதாக சர்வசாதாரணமாகச் சொல்லி எழுந்துபோனார். 

பிற படைப்புகள்

Leave a Comment