சு.வெங்குட்டுவன் கவிதைகள்
சு.வெங்குட்டுவன்
சு.வெங்குட்டுவன்

by olaichuvadi

ந்நியாசிகளெல்லாம் வியபாரிகளாக
மாறிவிட்ட காலத்தில்
வியபாரியான நீ
ஒரு சந்நியாசியைப் போல அலைந்து திரிகிறாய்
கிளுவைகள் மருங்கமைந்த
வெயில்காயும் இத்தார்ச்சாலையில்
மேலும் சில மைல்கள் நடக்கவேண்டும் நீ
சிறுவர்கள் தெருவாடும் எங்கள் கிராமத்தை அடைய
பாஷை தெரியாத ஊரில்வந்து
பாஷையே தேவைப்படாத குழந்தைகளுக்கு
அவர்தம் விருப்பப்பண்டம் விற்பவனே
உன்தோள் சுமக்கும் மூங்கிற்கழியை
சிலுவையெனவும்
அதில் பொட்டலமாய்த்
தொங்கும் பஞ்சுமிட்டாய்களின் வண்ணத்தை
நீர்த்துவெளிறிய குருதியின் நிறமெனவும்
கற்பனைசெய்து
உழைத்துண்டு வாழும் உன் ஜீவிதத்தின்மேல்
பரிதாபத்தின் உமிழ்நீரை துப்ப விரும்பவில்லை
என்றாலும் தவிர்க்கவே முடியவில்லை
ஆடு திருடிகளின் உளவாளியாய் யாரேனும் உன்னை
பார்த்துவிடுவார்களோ எனும்
அச்சத்தின் இரக்கத்தை.

 

பால்யத்தின்
பொழுதொன்றில் தொலைந்துபோய்
அவ்விரவு முழுவதும்
அழவைத்த செம்பொன்வண்டு
இதோ இவ்வெலந்தைச்செடியில் மேய்கிறது
பிடித்துப்போ என்றது காலம்
அவன் மீண்டும் அழத்துவங்கினான்
வாழ்வின் பொழுதொன்றில்
தொலைந்திருந்தது பால்யம்

கொரங்காட்டு இட்டேறி
நெடுஞ்சாலையைத்தாண்டும்
இவ்விடத்தைக் கடக்கும் பொழுதெல்லாம்
நினைவுக்கு வந்துவிடுகிறது
தங்கம் பஸ் சர்வீஸில் அடிபட்டுச்செத்த
வெள்ளாட்டுக்குட்டியின் பொருட்டு
அழுதுபுரண்டு அப்பத்தா கதறியது
கூடவே அப்பத்தா போனநாளில்
எங்களில் யாரும் அவ்விதம்
கதறாததும்

 

ண்டு பூ பூத்து
காணாமல் காய் காய்க்கும்
அது என்ன? எனும் விடுகதைக்கு
நிலக்கடலை என விடை சொன்னாள்
சுற்றியமர்ந்திருந்த சிறுமிகளில் ஒருத்தி
ஆமாம் ஆமாம் என்ற துளசியக்கா
சற்றே மவுனித்து
பின் தனக்குள் முணுமுணுத்தாள்
வேறொன்றும் இருக்கிறது

 

ன்னைத்தானே சாட்டையால்
அடித்துக் கொண்டிருப்பவனின்
பெண் குழந்தை
சுற்றிச்சுற்றி வந்து
சுற்றிச்சுற்றி வந்து
கூட்டதை யாசிக்கிறாள்
அந்த பிஞ்சுக்கரங்களில்
மிட்டாய்களையும் நாணயங்களையும்
வைத்துவிட்டு வந்தவன்
ஒரேமூச்சில் ஒரு
குவாட்டரை குடித்துமுடித்து விட்டுக் கூறினான்
தவறு செய்துவிட்டேன்
இப்பாழுலகை அழித்து
அதன் சாம்பலை வைத்திருக்கவேண்டும்.

பிற படைப்புகள்

Leave a Comment