தேவதேவன் கவிதைகள்

by olaichuvadi

 

மகாநதியில் மிதக்கும் தோணி

அடைந்துவிட்டான் அவன்
மானுடம் அடைய வேண்டிய
அந்தப் பொன்னுலகை!
துடுப்பு வலித்து துடுப்பு வலித்து
நதி கலக்குவதை நிறுத்திய வேளை,
அசைந்துகொண்டிருந்த தோணி
அசையாது நின்ற வேளை,
மின்னற்பொழுதே தூரமாய்க்
காலமும் இடமும் ஒழிந்த வேளை,
அடைந்துவிட்டான் அவன்!

மகாநதியில் மிதக்கும் தோணி
உயிர்பிழைக்கும் வேகத்தோடே
கரையிலிருந்த மக்கள்
பாய்ந்து பாய்ந்து நீந்திக்
கை நீட்டி நீட்டி ஏறி
அமர அமர அமர அமர
பூமியிலிருந்து பூமியை
உதறியெழுந்த மேகங்களாய்
மாற்றப்படாத வீடு
மாற்றம்பெற்று மக்களெல்லாம்
குளித்துக் கரையேறாத கோபியர்களாய்
நதியிலேயே திளைக்கத் திளைக்க

விண்ணளவு பூமியாய்
விரிந்துகொண்டேயிருக்கிறது காண்,
தோணியும்.

சன்னல் திரைச்சீலைகள்

அசையாத இந்தச் திரைச்சீலைகள்
எத்தகையப் பேரறிவுப் பேரமைதியை
அடைந்திருக்கின்றன,
சன்னலைத் திறந்தபின்
தம் அகம் விரித்துக்காட்டும் மரங்களின்
அசைவிலும் அமைதியிலும்தான்
எத்தனை எத்தனை நிருத்தியங்கள்
முத்திரைகள் அபிநயங்கள் பாடல்கள்!

அறைக்குள்ளிருந்துகொண்டு
வெளியையும் கண்ணாடி சன்னலையும்
மறைக்கும் திரைச்சீலைக்கும்
தேவரூபம் கொடுக்கும்
இந்தக் காலைக்கதிரொளிதான்
எத்தகைய பேரொளி!

சன்னலைத் திறந்தவுடன்
பளாரென
உள்நுழைந்த பெருவெளியையும்
ஒளிவெள்ளத்தையும் கண்டு
நொறுங்கியே விட்டதுகாண் அவன் நெஞ்சு
எத்துணை பொறுமையுடனும் கருணையுடனும்
இவ்வளவு காலம் காத்திருக்கிறார்கள் அவர்கள்!

தோள்பை

ஓடும் ரயிலில்
அவன்மடியில் தலைவைத்து
அமர்ந்திருந்தது
ஒரு தோள்பை.
அடக்கமான
அய்ந்து திறப்புவாய்கள் அதற்கு.
அவனுடையன
எல்லாவற்றையும் சுமந்துகொண்டு
தன்னையே அவனைச் சுமக்கச்செய்யும்
பேரறிவன்!

குழந்தையாய் வந்த பேரன்னை!

மடியில் அவன் கையடங்கலுக்குள்
அது சாய்ந்து படுத்திருப்பதைப் பாருங்கள்!
என்ன ஒரு உறவு அது!
தீண்டும், வருடும்,
அவன் விரல்களில் பூக்கும் மகரந்தங்களும்
விழிகளில் ததும்பும் கண்ணீருமாய்!
இத்துணை அமைதியும் அன்பும்
ஒழுக்கமும் உடைய உயிர்கள்
இருக்கத்தானே செய்கின்றன
இவ்வுலகில்.

அருகில் வந்து அமர்ந்தவன் இடித்து
இடைஞ்சலிக்காமல் இருக்கும்படி
அதனை மேலும் நெருக்கமாய்த் தனக்குள்
இழுத்து அணைத்துக்கொண்டான் அவன்.
தனக்குப் பாதுகாப்புத்தரும் உயிரை
தான் பாதுகாக்கும் முறையோ அது, அல்லது
அருகிலமர்ந்த அந்த மனிதனுக்காகவோ?
விளக்கிச் சொல்லத்தான்,
பிரித்துச் சொல்லத்தான்,
சொற்களாலே சொல்லிவிடத்தான்
முடியுமோ இந்த அன்பை!

பட்சி ஜோசியக்காரன்

என்ன பிழைப்பு இது,
தானும் வாழாமல்
கிளியையும் வாழவிடாமல்!

என்ன நம்பிக்கை இது,
ஓய்வாய் ஒரு உற்சாகக் குழு
பறவை ஜோசியம் கேட்க அமர்ந்து
நேரம் போக்குகிறது!

அனல் கசியும் குருதியுடன் ஒருவன்
வந்தமர்கிறான் அங்கே,
அனைத்தையும் பறிகொடுத்துவிட்ட
ஏழ்மையுடன்!

வானில் பறந்துசெல்கையில்
அவனை நோக்கி
ஒரு சொல்லில் உதிர்த்துப்போன
சேதியும் அல்ல அது.
கூண்டிலடைக்கப்பட்டிருக்கையில்
அது சொல்லவிரும்பிய சொற்களுமல்ல,
யார் யாரோ தீட்டிவைத்திருக்கிறார்கள்,
சீட்டெடுத்துத் தருகையில்
அவை வெளிப்படுத்துபவைகளை!

நமது வழியை
நாம்தானே கண்டாகவேண்டும், அன்பா!

ஒரு நொடியில்

அந்த ஒரு நொடி மவுனத்தில்தானா
காலத்தின் ஏடுகள் எல்லாம்
பறந்தோடிவிட்டன!
எழுபது ஆண்டுகள்
என்பது ஆண்டுகள்
தொன்னூறு ஆண்டுகள்
ஏழாயிரம் ஆண்டுகள்
எட்டாயிரம் ஆண்டுகள்
ஆயிரமாயிரம் ஆண்டுகள்
எட்டாதவைகளாய் இருந்த ஒன்றும்
எட்டிவிட்டது!

எப்போதும் ஒலிக்கும் இப்போதுகள்

அவன் இல்லம்சுற்றி இருக்கும்
மரங்களின் செறிவு
கூடிப் பெருகியிருந்ததாலோ
இப்போதெல்லாம்
அவன் நெஞ்சாழத்தைத் துழாவுவதாய்
எப்போதும் ஒலிக்கிறது,
காலத்திலிருந்தே
காலம் காலமாய்க்
காலம்நோக்கிய ஒரு குரலாகவோ,
இன்மைப்பெருவெளியிலிருந்து
காலம்நோக்கிய குரலாகவோ,
இன்மையிலிருந்தே
இன்மை நோக்கியதாகவோ,
மனிதனை அவன் உலகிலிருந்து
தன் உலகுக்கு ஈர்க்கும் அழைப்பாகவோ
ஏதாவது பறவை ஒன்றின் இதயஒலி.

பிற படைப்புகள்

Leave a Comment