பூவன்னா சந்திரசேகர் கவிதைகள்

by olaichuvadi

1

வழி தப்பிய நாய்க்குட்டிக்கு
எறும்புகள் புற்றுக்கு திரும்புவது
வேடிக்கையாயிருக்கிறது
வாலைக் கவ்வத் துடித்து
தோற்கும் நீட்டல் நக
பஞ்சு பாதங்களால்
புற்றைக் கலைத்துப்
பொழுது போக்குகிறது
குரைப்பிழந்த வீடு
குறையுறக்கத்தில்
சாலை நோக்கி ஊளையிடுகையில்
ஒன்றோடொன்று சந்திக்கும்
விளக்கற்ற முனையிலிருந்து
திரும்புதல் சாத்தியமிலா
பாதை நீளத் தொடங்குகிறது

2

வெளி மொத்தமும்
மேய்ச்சல் நிலமாய்
பனிநீர் கனக்கும் புல்லை
அதக்கி கடவாயில் ஒடுக்கும்
எருமையின் திமிலேறி
அமர்கிறது ஒரு காகம்
சிலுப்பலொன்றுக்கு மேலெழுந்து
மீண்டமர்ந்து
மேலெழுந்து மீண்டமர்கிறது
நீர் விட்டு எவ்வி
நீரையே தொடும்
தவளைக் கல்லில்
ஒரு காகத்தின் எச்சம்
கரையாது படிந்தேயிருக்கிறது

3

குருடான நகரத்தின் சாலையோரம்
விரல் பிள்ளையை
கைமாற்றிக் கை மாற்றிப்
பிடிக்கிறாள்
ஒரு பந்து விளையாட்டு போல்
கொதிப்படங்கிய பாதை
மூச்சடைக்கும் நேரம்
விளக்குப் பரிமாற்றத்தினூடே
கொலை
நடந்தேறுகிறதைப் பாருங்கள்

4

ஒளியைத் தொலைத்த
கம்பத்தடியில்
கிளறித் தேடும் நாய்
திடுக்கென ஒழுகும்
வெளிச்சத்தினால் அருள்கிறது
கிளறி
மீண்டும் கிளறி
மேலும் கிளறி
மூடுகிறது
இடைவிட்டு வழிந்த
ஒளியின் கண்ணுக்கு
அப்பகலில்
நாயும் காணோம்
இருளும் காணோம்

5

பாதி பழுத்த ஆப்பிளை
நறுக்கும் கத்தி
நரம்புகளை விட்டு
கரிசனமாய்
விரலைக் கீறுகிறது
கூரற்ற பின்புறம்
வழியும் திரவத் துளி
நன்கு பழுத்த
மாதுளை போல
மதுரமாயிருக்கு
தொண்டைக் குழி தாண்டிய
ஒன்றின் ருசியை
மீட்டெடுக்க தோற்ற நாளில்
எல்லாம் சுவையிழந்து போகிறது
பாதி பழுத்த ஆப்பிள் போல
பாதி பழுத்த பொழுது
அரை குறையாய்
சாணை பிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது

பிற படைப்புகள்

Leave a Comment