பா.ராஜா கவிதைகள்

by olaichuvadi

வீடு திரும்புதல்

அன்றெனப் பார்த்து சீற்றம் கொண்டது
கடல்
மரணித்த ஆமை ஒன்று கரையொதுங்க
அலைகளில்
புரண்டு படுக்கின்றன மலைப்பாம்புகள்
சேமித்த சிப்பிகள் சிதறும்படி
கைகளை உதறி சிறுமியை இழுத்துச் செல்கிறார்
தந்தை
பாதம் தொட விழையும் அலைகளில்
ஆளை விழுங்கும் ஆவேசம்
சிறுமி வெறுங்கையுடன்
திரும்ப நேர்ந்தது 
கடலலை சிறுமி தொட்ட சிப்பிகளுடன்

அந்த நாளின் குலோப் ஜாமூன்

அன்று
அந்த சினிமாவிற்கு சென்றிருக்கக்கூடாது
அன்று
அந்த நண்பனை சந்தித்திருக்கக்கூடாது
அன்று
அந்த நள்ளிரவில்
யானை போல் மிமிக்ரி செய்திருக்கக்கூடாது
அன்று
அந்த மர்ம நாவலின்
கடைசி அத்தியாயத்தை படித்திருக்கக்கூடாது
அன்று
அந்த மெழுகுவர்த்தியை
மின்சாரம் வந்த மறுநொடியே
ஊதி அணைத்திருக்கக்கூடாது
அன்று
அந்த அதுவை
அன்று
இந்த இதுவை செய்திருக்கக்கூடாது
நிகழ்வுகள்
கசந்துபோய் நமக்கு உண்டாக்கியுள்ளது
இது போன்ற நீண்ட பட்டியல்
அன்று
அந்த குலோப் ஜாமூனை நான் ருசித்திருக்கக்கூடாது

மேஜிக்மேன்

இடது உள்ளங்கையில் ஆணியடித்துக் கொள்கிறார்
ரத்தம் வடிகிறது
அழகாய்ச் சிரிக்கிறார்
மேஜிக் மீது ஆசை வந்து
அதைச் செய்ய பழகினால் வலியில் உயிர்போகிறது
வெளிப்படும் ரத்தத்திற்கு சிரிக்க முடியவில்லை
முதலில் சிரித்துப் பழக வேண்டியிருக்கிறது
தன் கையை பொத்தலாக்கி
தன் ரத்தத்திற்கு தானே சிரிக்கும் காட்சி
சீக்கிரம் பழமையாகிவிடும் எனத்தோன்றியது
சிரிப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்
அக்காட்சியின் மீது தூசிபடியாமல்
நீங்கள்தான் ரத்தம் சிந்துகிறீர்

பிற படைப்புகள்

Leave a Comment