பா.ராஜா கவிதைகள்
பா.ராஜா

by olaichuvadi

 

பயணம்

 

ஏறும் வழியிலிருந்து
இறங்கும் படியிடம் நெருங்குவதற்குள்
சக்கரங்கள் தின்றிருப்பது
அறுபது வருடங்களையா
தலை நரைத்துத் தள்ளாடி
உடல் சிறுத்து
உயரப்பிடிக்கும் கை தளர்ந்து
இருக்கை கம்பியைப் பற்றிக்கொண்டு
சரியான சில்லரையை நீட்டியபடி
என் பெயர் மூப்பு
என் ஸ்டாப்பின் பெயரும் அதுவே
தனிமை
மூக்குக்கண்ணாடி
பாரகான் செருப்பு
பதற்றம்
மிகுந்த முன்னெச்சரிக்கை
அடிக்கடி பாக்கெட்டை தொட்டுப்பார்த்துக்கொள்ளும்
ஜாக்கிரதை உணர்ச்சி
அனைத்தும் மூப்பு அருளியது
என்ற இரைஞ்சுதலுக்கிடையில்
நிறுத்தத்தில் இறங்க
சற்றே சகாயம் பண்டுங்கள்
எனும் கூற்று
தள்ளிவிடச் சொன்னதாய்
நம் செவியில்
விழுந்தது எப்படி

 

எதிரி

 

மேலோட்டமாய் பழகுதலுக்கு
இருவருமே
நன்கு பயின்றிருந்தனர்
நீரினில் விழும்
பந்தோ கனியோ
ஓரடி உயரவே காற்றில் மிதக்க வைக்க
முடிவதென்பது
அந்தரத்தில் இருவராலும்
நிகழ்த்தப்பெரும்
ஆச்சர்யங்களில் ஒன்று
அருகருகே அமர்ந்திருந்தும்
திரைப்படத்தின் முதல் ரீலில் அவனும்
ஆறாம் ரீலில் இவனும் இருந்து
ஒட்டுமொத்த திரைக்கதையையும்
குழப்பியடித்தாலும்
வில்லன் என்றொருவர்
வெளியில் இல்லை
இருவருக்கும்

 

நாற்பது கிலோ மீட்டர் வேகம்

 

நெடுங்காலமுமற்ற
வெகு அருகாமையுமற்ற
மையத்தில் இருந்தது
நீ
உறுதிப்படுத்தியிருந்த தினம்
என்னை நோக்கிய
அதன் நகர்வானதும்
அவ்வாறே
துரிதமற்றும்
நிதானமற்றும்
நடு நிலையில்
நெருங்குகிறது
அந்த நாள் உண்டு பண்ணும்
அற்புதத்தின் மீதான
அதி ஆர்வமோ
காத்திருப்பின் மீது தத்தளிக்கின்றது

 

முன்னொரு காலத்தில்

 

நாம் காதலர்கள்
ஊர் மெச்சும் சிறந்த ஜோடி
இன்று
சூழல் அப்படியா இருக்கின்றது
அந்த மேடையிலிருந்து
இடது புறமாய் நீயும்
வலது புறமாய் நானும்
ஒரு சேர கீழிறங்கினோம்
சரி பரவாயில்லை காலத்தின் போக்கு
தற்போது
திடுமென கழுத்தில் கத்தி வைத்த
ஒரு முகத்திற்குள்
நீயிருப்பாய் என
சிறிதும் நினைக்கவில்லை

 

பென்சிலை சீவுகிறாய்

 

சீவிக்கொண்டேயிருக்கிறாய்
கத்தரிக்கோலின் துவாரத்தில்
சிக்கிக்கொண்ட என் கட்டைவிரல் பற்றி
உச்சபட்ச வலியைப்பற்றி
அப்போது வழிந்த குருதி பற்றி
விவரிக்க
விவரிக்க
மேலும் சீவுகின்றாய்
ஒரு தருணத்தை
திறம்பட கையாளும் கூர்மையின் முன்
செய்வதற்கேதுமில்லை
இருந்தும் மண்டியிடுவது
அது எழுதும்
ஒற்றை ஆறுதல் சொல்லிற்குத்தான்

பிற படைப்புகள்

Leave a Comment