பெருந்தேவி கவிதைகள்
பெருந்தேவி

by olaichuvadi

எப்படிக் கவிதை
எழுதுகிறீர்கள்?

சந்தைக்குப் புதிதாக வந்திருக்கிற
வசீகரமான டில்டோக்களைப் போல
பார்த்துத் தேர்ந்தெடுத்த சொற்கள்
வழுக்கிக் கொண்டு செல்ல வேண்டும்
திட்டமென்னவோ உங்களுக்கு உதவியாக இருப்பதுதான்
ஆனால் சொற்களுக்கு நடுவில்
சில பாம்புகள் புகுந்துவிட்டன
வாயை வேறு திறந்து வைத்திருக்கின்றன
நீங்கள் விழுந்து விடுகிறீர்கள் அவற்றுள்
ஆனால் இந்தப் பாம்புகளை நான் விடவில்லை
நம்புங்கள் நான் அத்தனை மோசமில்லை
ஆனால் உங்களுக்கு என்னால் உதவ முடியவில்லை
இந்தப் பாம்புகளுக்கு வாழ்க்கைப் பட்டிருக்கிறேன்
விழுங்கித் துப்பி விழுங்குகின்றன
மாணிக்கமாக முடியாத
சாதாரணத்தை…

உலகின் ஒரே ஒரு
நிகனோர் பர்ராவுக்கு

பர்ராவுக்குப்
பேரக்குழந்தைகளென்றால்
கொள்ளை இஷ்டம்
ஒரு பேரக்குழந்தை பள்ளிக்கூடத்தில்
தன் பெயரை ஹேம்லட் என மாற்றிச் சொன்னானாம்
பார்க்க வருபவர்களிடமெல்லாம் பீத்திக்கொள்கிறார் பர்ரா
பேரக்குழந்தைகள் பேசுவதிலிருந்துதான்
கவிதையின் மொழியை
எடுத்துக்கொள்கிறாராம்
இப்படிச் சொல்கிறோமே என்ற
வெட்கம் துளியுமில்லை அவருக்கு
பேரக்குழந்தைகளைப் பெட்டை நாய்களின் பிள்ளைகளெனக் கவிதையில் திட்டியது
மறந்து விட்டதா என்ன
பர்ரா ஒரு பொய்யர்
பர்ரா ஒரு வேடதாரி
பர்ரா ஒரு கள்ள மறதிக்காரர்
பர்ராவுக்கு வயோதிகக்கிறுக்கு
பர்ராவுக்குக் கஞ்சா பழக்கம்
பர்ராவால் குழந்தைகளை எப்படி
இப்படியெல்லாம் திட்ட முடிகிறது
குழந்தையென்றால் ரோஜாப்பூ
மழலையென்றால் குழலினிது
டிட்டோ

ஒரு வேளை
பர்ரா சாத்தியங்களை எழுதுகிறார் போல
அனுபவத்தைத் தாண்டிய சாத்தியம்
வேறுமனோ இடங்களின் யதார்த்தம்
உணர்ச்சிப்பாடலுக்கு எட்டாத நிறம்
அவர் மூக்குக் கண்ணாடி மட்டுமே காட்டும் காட்சி

பர்ராவுக்குக் குழந்தைகளைப்பிடிக்காது
பேரக் குழந்தைகளையும்தான்
என்றான் ஒரு சிலே நாட்டு நண்பன்
உண்மையாகவே இருக்கட்டும்
அதனாலென்ன

பிற படைப்புகள்

Leave a Comment