நினைவு பொல்லாதது
மிக நீண்ட தொலைவு சென்றுவிட்டேன்
ஆனாலும் இங்குதான் இருக்கிறேன்
நிலத்தின் ஆழ அமைதியில் செல்லும் வழி உண்டு
நம்மில் அந்த வழக்கமில்லை
உலர்ந்த மரக்கட்டைகள் அடுக்கி
அதன்மேல் என்னைக் கிடத்தி
உலர் சாணத் துண்டுகளை அடுக்கி
வைக்கோலும் செம்மண்ணையும் நீரில் குழைத்துப் பூசி
விழிகளுக்கருகிலும் வயிறு கால் பகுதியிலும் துளையிட்டு
எரிகிற கற்பூரத்தை உள்ளிட்டு
கொழுந்துவிட்டு எரியத் தொடங்குகிறேன்
அவ்வளவுதான்
மிக நீண்ட தொலைவு சென்றுவிட்டேன்
பற்றிக்கொள்ள முடியாத என் கைகளைப் பற்றிக் கவலையுறாதே
கரைந்த சாம்பலாய்க் கடலில்
தழுவ முடியாத காற்றில் நான் இருக்கிறேன்
சென்று திரும்பி, திரும்பிச் சென்ற காலங்கள் இனி இல்லை
எதிர்காலத்தைக் குறித்த எந்தத் திட்டமும் இல்லை
நினைவுகளின் சான்றடையாளமாக
என்னைக் குறித்த பேச்சுகள் இருக்கும்
எல்லாமே மறக்க வேண்டியவைதான்
காலத்தின் கால்கள் மிதித்துக் கடக்கச் செய்துவிடும்
நீளும் அதன் நினைவுகளில் நீயிரு
முடியும்போது ஒரு புன்னகை செய்.
எண்ட ‘நீ’க்கு
கோவிலில் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்
உதவிக்கு ஒரு பெண்ணிருப்பதால்
பெரிதாய் ஒன்றும் வேலை இல்லை
செடிகளுக்கு ஒரு மணி நேரம்
தண்ணீர் விட்டதோடு சரி
தன்னந்தனியே வேலையும் எதுவும் இல்லாமல்
என்னவோ கஷ்டமாக இருக்கிறது
அடிக்கடி கேட்கும் பாடலொன்றை
கேட்டுக்கொண்டிருக்கிறேன்
எப்போவாவது ஒரு நாள்
எங்கேயாவது கல் கல்லாய் சிதிலமாயிருக்கும்,
எங்கொ இறங்கிச்செல்லும் படிக்கட்டு்களில்
மேல் படியில் நீங்களும்
நான் அடுத்ததிலுமாய்
உங்கள் முழங்கால்களை கட்டிக்கொண்டு
அதிலேயே தலை சாய்த்துக்கொண்டு
இந்தப் பாடலை கேட்க வேண்டுமென்று
இப்போது நினைக்கிறேன்
அன்புள்ளவரை நினைத்து,
“காத்திருந்து காத்திருந்து
புழைகள் வற்றிப்போய்
காலமும் கடந்து போய்
ஓர்த்திருந்து ஓர்த்திருந்து
கை வளைகள் கழன்று
சிரி மறந்து நூல் போல மெலிந்து போய்விட்டேன்”
என்று
ஒரு பெண்
நல்ல மழை பெய்யும் ஒரு மாலையில்
ஜன்னல் திரைச்சீலையெல்லாம்
நனைந்து காற்றில் படபடக்க
அறைக்குள்ளிருந்து கொண்டு பாடும் பாடல் இது
நீ
என்னும் எண்ட ‘நீ’க்கு.
குருட்டுப் பூனையின் அறை
திசை நுகர்ந்து முன்னகரும்
குருட்டுப்பூனை
அதன் வெண்ணிறம் அது அறியாது
இருளில் மினுங்கி ஒளிரும் வெளிச்சம்
நாம் காண மட்டுமே
முன்னங்கால்களால் காற்றை வெட்டி
சளைக்காமல் திரியும்
இறைந்த சோற்றுப் பருக்கை
சிதறிய மீன் துணுக்குகள்
முகர்ந்து துழாவினால் தட்டுப்பட்டு விடும்
விசும்புதல்களற்ற பொழுதுகள்
ஏக்கங்களில்லை
ஊடுருவிப் பார்க்கத் தேவையில்லை
உச்சஸ்தாயியில் அலறிப் பதறி ஓட வேண்டியதில்லை
அதிகாலை ஒளிச்சரடு
நடுப்பகல் துளைக்கும் பூரணக்கதிர்
அந்தியில் பூசிய இருள்
எல்லாம் ஒன்றுதான்
குருட்டுப்பூனைக்கு.
எல்லோரும் எல்லாம்
நிசப்தத்தில் ஒளிர்ந்த சுடரொன்று
தன்னைப் பொத்திப்பொத்தி முடியாமல்போய்
இருளுக்குள் மங்கிப் புகைகிறது
காற்றின் கோணங்களுக்கேற்ப
முகம் திருப்புகிறது செடி
இந்த வரிகளிலிருந்து செல்லலாம் வா
கால் தாவிச் சிதறும் காற்று
தலைகீழாய் வளைந்து வலுவிழக்கும் செடி
காற்றின் அலைக்கழிப்பில்
விடுபட்ட பற்றைத் தேடியலைகிறது ஒரு சிறு கொடி
அதோ தடுமாற்றமின்றி நின்று
தன் கிளைகளையும் இலைகளையும்
மட்டும் அசைக்கிறது மரம்
அதனதன் வலுவில்
ஒவ்வொன்றும் எதிர்கொள்கிறது காற்றை
வேறு யாருமில்லை
நீ
நான்
எல்லோரும் காற்று
எல்லோரும் செடி
எல்லோரும் கொடி
எல்லோரும் மரம்.
468
முந்தைய படைப்பு