க்ளாட் மாக்கேய் கவிதைகள்
தமிழாக்கம்: அனுராதா ஆனந்த்

by olaichuvadi

ஹார்லெம் நிழல்கள்

அச்சிறுப்பெண்ணின் தயங்கிய அடிச்சுவட்டை கேட்கிறேன்.
இரவு தன் திரையை கீழிறக்கும் எங்கள் கருப்பின ஹார்லெமில்
செறுப்பணிந்த அக்கால்களையும், உடல்களையும் பார்க்கிறேன்
இரைத்தேடி அவர்கள் தெருத்தெருவாய் திரிகையில்..
நெடு இரவு முழுதும் வெள்ளி முளைக்கும் வரை
அச்சாம்பல் கால்கள் ஓய்வறியா.
தனித்த இரவுகளில் கடைசி பனித்திவலை
பூமியின் வெள்ளை மார்புகளில் வீழும் வரை
மங்கிய நிறமுள்ள உடலை சரிபாதி மட்டுமே மறைக்கும் உடை தரித்து
சோர்வுற்ற கால்களால்
களைப்புற்று திரிகிறார்கள்.
மெல்லிய உடையணிந்து தெருத்தெருவாய் திரிகிறார்கள்
ஏ… கடுமையான, கண்டிப்பான உலகமே
உன் கேடுகெட்ட இழிவான
வறுமையால்
வெட்கப்படும் சிறு கால்களை
மாசற்ற புனிதமான சிறு கால்களை
வேறு குற்றமற்ற சிறு கால்களை
வீழ்த்தப்பட்ட எம் கருப்பின கால்களை
ஹார்லெமில்
இப்படித்தெருத்தெருவாய் அலைய விட்டாயே!

நம் மரணம் உறுதியெனில்…

அது காட்டுப்பன்றிகளைப்போல வேட்டையாடப்பட்டு
ஓர் அவமானகரமான இடத்தில் சுற்றி வளைக்கப்பட்டு
வெறியும், பசியுமான நாய்கள் சூழ்ந்து குரைத்தவாறு 
நம் இழிநிலையை பரிகசித்திருக்க வேண்டியதில்லை .
நம் மரணம் உறுதியெனில்
மானத்தோடு உன்னதமாக இறப்போம்.
சிந்தும் குருதிச் செல்வம் வீண்போகாவண்ணம்
நாம் எதிர்க்கும் கோர சாத்தான்களே வேறு வழியற்று
நமக்கிறுதி மரியாதை செய்யும்வண்ணம்
அருமைத்தோழர்களே … பொதுவான எதிரியை
சந்தித்தேயாக வேண்டும் 
எண்ணிக்கையில் குறைவானவர்களாயினும்
வீரத்தில் நிறைவானவர்களாயிருப்போம்.
அவர்களின் ஆயிரம் அடிகளுக்கு
ஒரு மரண அடியை விடையாகக் கொடுப்போம்
நாம் திறந்த கல்லறைகள் முன் இருப்பினும்
ஆண்மையுடன் இந்த கொலைகார 
கோழையான கூட்டத்தை எதிர்கொள்வோம்.
வழிகளனைத்தும் அடைப்பட்டுப்போக
மரணித்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் எதிர்த்து சண்டையிட்டவாரே…

பிற படைப்புகள்

Leave a Comment