ஓசைகள்
சிறிதுநேரத்துக்குப் பிறகு
ஒலிக்கத் தொடங்கும் ஓசைகள்.
முதலில் பக்கத்திலிருந்து நாயொன்று குரைக்கத் தொடங்கும்
சிறிது நேரம் கழித்து ஒரு குதிரை கனைக்கும்
குடியிருப்புக்கு வெளியிலிருந்து நரிகள் ஊளையிடும்
இடையிடையே எங்கிருந்தோ சில்வண்டுகளின் சத்தம்
இலைகளின் அசைவுகள்
நடுவில் எங்கோ
பாதையில் யாரோ தனியாக நடந்து செல்லும் ஓசை
இவை அனைத்துக்கும் அப்பால்
புலியொன்று உறுமும் ஓசை
ஒலித்திருக்கும் என் கிராமத்தில்.
கண்ணீரின் கவிதை
அந்தக் காலத்தில் கண்ணீருக்கும் மிகுந்த மதிப்பிருந்தது. முத்துக்களுக்கு சமமாகக் கருதப்பட்ட கண்ணீர் பெருகுவதைக் கண்டு அனைவரின் உள்ளமும் நடுங்கிற்று. ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஏற்ப அது குறைந்த அளவிலோ அல்லது மிகுதியாகவோ முன்கூட்டி காலத்தைக் கணித்திருக்கக் கூடும். ஏழுக்கும் அதிகமான வண்ணங்களில் ஒளியைச் சிதறடிக்கச் செய்ய முடியும்.
கண்களுக்கு சிரமம் தரக்கூடாது என்பதற்காக சிலர் முத்துக்களை பணம்கொடுத்து வாங்கி விலைமதிப்பற்ற நிலைத்த கண்ணீராக காட்சிப்படுத்தலாயினர். இப்படியாக கண்ணீரில் பிரிவினை உண்டாயிற்று. அசலான கண்ணீர் மெல்ல மெல்ல பின்தங்கிப் போனது. இன்னொரு பக்கம் முத்துக்களை உருவாக்கும் தொழிற்கூடங்கள் பெருகின.
இருட்டுக்குள் தனியாக நெற்றியை சுவர்களில் சாய்த்தபடி உண்மையில் அழுபவர்களின் கண்களிலிருந்து வெகு நேரத்துக்குப் பிறகு மிகுந்த சிரமத்துடன் கண்ணீர் என்ற பெயரில் ஒன்று வெளிப்பட்டு வழிந்தது. பின்பு அப்படியே உலர்ந்தும் போனது.
இந்த குளிர்நாட்களில்
மிகவும் கடினமாயிருந்தது கடந்த குளிர்காலம்
அதைப்பற்றி நினைக்கும்போது
இப்போது இந்த குளிர்காலத்திலும் நடுங்குகிறேன்
இம்முறை நாட்கள் அத்தனை கடினமாக இல்லாதபோதும்
கடந்த குளிர்காலத்தில்தான் அம்மா செத்துப்போனாள்
அன்பின் தாளொன்றை இழந்திருந்தேன் நான்
வெளியேறியிருந்தாள் ஒரு வேலைக்காரி
எங்கே சுற்றி அலைந்தேனென்று இரவுகளுக்குத் தெரியவில்லை
எங்கெல்லாம் தொலைபேசியில் அழைக்க முயன்றேன் என்றும்
என்னுடைய பொருட்களே என்மீது விழுந்திருந்தன
கடந்துபோன குளிர்காலத்தில்
இப்போதைய குளிர்நாட்களில்
கழற்றிப்போடுகிறேன்
கடந்த குளிர்காலத்தின் உடுப்புகளை
கம்பளி தொப்பி காலுறைகள் மப்ளர்
கவனத்துடன் கூர்ந்து பார்க்கிறேன் அவற்றை
கடந்தகாலம் முடிந்துபோனதென யோசிக்கிறேன்
எனக்கென இந்த குளிர்நாட்கள் முன்பைப் போல ஏன் கடினமாகின்றன?
நம்பிக்கை
கண்ணுக்கு வைத்தியம் பார்க்கச் செல்லும்
அப்பாவுக்கு பத்தடி முன்னால் நடக்கிறேன் நான்
கண்ணின் ஒளியைத் திரும்பப் பெறும் நம்பிக்கையில்
அப்பாவின் கண்கள் ஒளிர்கின்றன எதிர்பார்ப்புடன்
அந்த ஒளியில் அவரை நான் காண்கிறேன்
பத்தடிக்கும் முன்னால் அவர் நடந்துபோவதை.
ஒரு ஜீவனுக்காக
ஒருவேளை கொஞ்சமாக ஈரம் இருந்திருக்கக்கூடும்
அல்லது சிறிதளவில் ஏதேனும் ஒரு நிறம்
தலையணையோ நம்பிக்கையோ
ஒருவேளை அங்கே ஒரு கண்ணீர் இருந்திருக்கக்கூடும்
அல்லது ஒரு முத்தம்
நினைவில் வைத்திருக்கவென
ஒருவேளை அங்கே பனி பொழிந்திருக்கலாம்
அல்லது சின்னஞ்சிறிய ஒரு கரம்
அல்லது தொடுவதற்கான சிறு முயற்சி
ஒருவேளை இருட்டாக இருக்கலாம்
அல்லது ஆளற்ற ஒரு மைதானம்
அல்லது நிற்பதற்கு அளவானதோர் இடம்
ஒருவேளை அங்கே ஓர் மனிதன் இருந்திருக்கக்கூடும்
தனக்குத் தெரிந்தவிதத்தில் போராடியபடி.
எங்கேயோ நான் போகவேண்டியிருந்தது
எங்கோ நான் போகவேண்டியிருந்தது, போகவில்லை
என்னவோ செய்யவேண்டியிருந்தது, செய்யவில்லை
யாரையோ நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன், அவர் இங்கே வரவில்லை
மகிழ்ச்சியான ஒரு பாடலை பாடவிருந்தேன், பாடவில்லை
இவையெல்லாம் நடக்காதபோது வெகுநேரம் தூங்கவிருந்தேன், தூங்கவில்லை
இதைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்கும்போது அத்தனை ஆனந்தம்
அந்த இடம் எங்கும் இல்லை அப்படியொரு வேலையும் இல்லை
எதிர்பார்ப்புமில்லை பாடலுமில்லை தூக்கமும் எங்கும் இல்லை.
உனக்கு உள்ளே
ஒரு பெண் காரணமாக உனக்குக் கிடைத்தது ஒரு மூலை
உனக்காகவும்கூட உண்டானது எதிர்பார்ப்பு
ஒரு பெண்ணின் காரணமாக நீ காணமுடிந்தது ஆகாயம்
அதில் பறந்திடும் பறவைகளின் உலகம்
ஒரு பெண்ணின் காரணமாக அடிக்கடி நீ வியப்படைந்தாய்
உன்னுடல் பயனற்றுப் போகவில்லை
ஒரு பெண்ணின் காரணமாக உனது பாதை இருட்டில் மூழ்கவில்லை
இங்கும் அங்குமாய் வெளிச்சம் தென்பட்டது
ஒரு பெண்ணின் காரணமாக
உனக்குள் காப்பாற்றப்பட்டிருக்கிறாள் ஒரு பெண்.
மூன்று நிகழ்வுகள்
ஒன்று
என்னிடம் நீங்கள் எதைக்குறித்து மனத்தாங்கல் கொள்ளமுடியும் என்று அவர் கேட்டார்
‘ஒன்றும் இல்லை’
அவர் சொன்னார் என்றால் உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது?
இரண்டு
பொய் சொல்வதால் என்னென்ன பயன்கள் என்று அவர் கேட்டார்
‘ஒன்றும் இல்லை’.
அவர் சொன்னார் அப்படியென்றால் பொய் சொல்லி என்ன பிரயோசனம்?
மூன்று
அவர் இதை உடைத்தார்
அவர் அதை உடைத்தார்
அவர் அனைத்தையும் உடைத்தார்
அவர் சொன்னார் இப்போது எல்லாவற்றையும் உடைத்தாயிற்று
‘இனி என்ன ஆகும்?’
அவர் சொன்னார் புதிதாக ஏதேனும் இருக்குமென்றால் சொல்.
அப்பாவின் நினைவில்
மருந்துப் புட்டிகள் காலியாகிவிட்டன காகித உறைகளும் கிழிக்கப்பட்டுள்ளன கடிதங்கள் படித்து முடிக்கப்பட்டுவிட்டன இப்போது நீங்கள் வாசல்படியில் அமர்ந்து எதிர்பார்த்திருப்பதில்லை படுக்கையில் சுருண்டு படுத்திருப்பதில்லை விடிகாலையில் எழுந்து கதவைத் திறப்பதில்லை காற்று நீர் புழுதியின் கண்ணுக்குப்படாத கதவைத் திறந்துகொண்டு நீங்கள் ஏதோவொரு மலை நதி நட்சத்திரங்களை நோக்கி சென்றுவிட்டீர்கள் நீங்களும் ஒரு மலையாக ஒரு நதியாக ஒரு நட்சத்திரமாக ஆகிவிடவென்று.
எத்தனை சுலபமாக சொற்களுக்குள்ளே நீங்கள் வந்துவிடுகிறீர்கள். மெலிந்து வறண்ட உங்கள் தேகத்தில் வேதனைக்கு முடிவேயில்லை. கடைசிவரைக்கும் நம்பிக்கை மட்டும் எஞ்சியிருந்தது. மெல்ல மெல்ல சரியும் சுவர்களுக்கிடையே நீங்கள் கற்களின் சாவின்மையை தேடி எடுத்துக் கொண்டீர்கள். காலிப் பெட்டிகள் கிழிக்கப்பட்ட புத்தகங்கள் பூச்சியரித்த பொருட்களிடையே உயிர் இன்னும் ஒட்டியிருக்கும் என்பதில் உங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. நான் திரும்பி வரும்போதெல்லாம் நீங்கள் உங்கள் துக்கத்தை அவற்றில் ஒளித்து வைத்தீர்கள். யுத்தம் முழுவதிலும் போரிட்டு நின்றது நீங்கள். வென்றவன் நான் மட்டும்.
குழந்தைகளுக்கு ஒரு கடிதம்
அன்புமிக்க குழந்தைகளே, நாங்கள் உங்களுக்கு சரிவரமாட்டோம். எங்களது விலைமதிப்பற்ற நேரத்தை உங்களது விளையாட்டில் செலவிடவேண்டுமென நீங்கள் விரும்பினீர்கள். நாங்கள் எங்களது விளையாட்டில் உங்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும் என ஆசைப்பட்டீர்கள். உங்களைப்போலவே நாங்களும் களங்கமற்றிருக்கவேண்டும் என்று விரும்பினீர்கள்.
அன்புக் குழந்தைகளே, வாழ்க்கை ஒரு போராட்டம் அதில் நாம் போராடிக்கொண்டேதான் இருக்கவேண்டும் என்று நாங்கள்தான் உங்களுக்குச் சொன்னோம். ஆயுதங்களை கையிலேந்தியவர்களும் நாங்கள்தான். நாங்களேதான் போரையும் தொடங்கினோம். நாங்களேதான் சினத்துடனும் வெறுப்புடனும் சன்னதம்கொண்டோம். அன்புக் குழந்தைகளே, உங்களிடம் நாங்கள் பொய் சொல்லிவிட்டோம்.
இதுவொரு நீண்ட ராத்திரி. ஒரு சுரங்கத்தைப்போல. வெளியிலிருக்கும் தெளிவற்ற காட்சியை இங்கிருந்து எங்களால் பார்க்கமுடிகிறது. சண்டைகளையும் அழுகையையும் பார்க்கிறோம். குழந்தைகளே உங்களை அங்கே அனுப்பிவைத்தது நாங்கள்தான். எங்களை மன்னித்துவிடுங்கள். வாழ்க்கை ஒரு போர்க்களம் என்று நாங்கள் பொய் சொல்லிவிட்டோம்.
அன்புக் குழந்தைகளே, வாழ்க்கை ஒரு கொண்டாட்டம். அதில் சிரிப்பைப்போல நீங்கள் பரவியிருங்கள். வாழ்க்கை ஒரு செழிப்பான மரம். அதில் நீங்கள் பறவைகளைப்போல சிறகடித்திருங்கள். சில கவிஞர்கள் சொன்னதுபோல வாழ்க்கை குதித்தோடும் ஒரு பந்தைப் போன்றது. நாலாபக்கமும் அதைத் துரத்தியோடும் கால்களைப்போல் நீங்கள் இருங்கள்.
அன்புக் குழந்தைகளே, அப்படி இல்லையென்றால், இருக்க வேண்டும்.
அம்மாவின் படம்
வீட்டில் அம்மாவின் படம் எதுவுமில்லை
படமெடுக்கும் சந்தர்ப்பம் வந்தபோது
வீட்டில் தொலைந்துபோன ஒரு பொருளைத் தேடிக்கொண்டிருந்தாள் அம்மா
அல்லது விறகையோ புல்லையோ நீரையோ சுமந்துவரப் போயிருப்பாள்
காட்டில் ஒருமுறை அவள் புலியைக் கண்டாள்
ஆனால் அவள் அஞ்சவில்லை
புலியைத் துரத்திவிட்டு புல் அறுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து
நெருப்பை மூட்டி எல்லோருக்கும் உணவு சமைத்தாள்.
விறகு பொறுக்கவோ புல் அறுக்கவோ ஒருபோதும் காட்டுக்குச் சென்றதில்லை நான்
ஒருபோதும் நெருப்பு மூட்டியதில்லை
பலகாலமாக இருந்துவரும் நகாசுவேலைக்காரரின் பழைய நாற்காலியில்
அடிக்கடி உட்கார்ந்திருப்பேன் நான்
அதில் உட்காரவைத்துதான் படங்கள் எடுக்கப்படுகின்றன
அம்மாவின் முகத்தில் எனக்குத் தென்படுகின்றன
ஒரு காட்டின் படம் விறகு புல் தண்ணீரின் படம்
தொலைந்துபோன ஏதோவொரு பொருளின் படம்
நினைவு – ஒன்று
ஜன்னலின் துளைகள் வழியே லாந்தரின் வெளிச்சம்
பரவுகிறது மஞ்சள் பூக்களைப்போல
ஆர்மோனியத்திலிருந்து காற்றில் எழுகிறது புராதன ஸ்வரம்
சின்னஞ்சிறிய லேசான மேகங்களைப்போல மினுமினுக்கிற அந்திப்பொழுது
ஒரு சாதுவான குழந்தையைப்போல பால்கனியில் வந்தமர்திருக்கிறது
காட்டிலிருந்து விறகையும் புல்லையும் சுமந்து வரும் பெண்கள்
முற்றத்தின் வழியே நடந்து கால்தடங்களை விட்டுச்செல்கிறார்கள்
இதற்கிடையில் வெகுநேரம் கடந்து போய்விட்டது
நிறைய மழை பெய்து பின் வற்றியும் போனது
அடிக்கடி பனியும் பெய்து உருகியும் முடிந்தது
இருந்த இடத்திலிருந்து கல் நழுவி வேறொங்கோ சென்றுவிட்டது
முற்றத்தில் நின்று கனிதரும் மரம் இன்னும் வளர்ந்தோங்கியது
ஆட்களும் தம் வீட்டின் கதவுகளை அடைத்துவிட்டு
புதிய அடைக்கலவான்களை நோக்கி மாண்டுபோனார்கள்
மறைந்துபோன காட்சிக்குள்ளிருந்து அப்போதும் வந்துகொண்டிருக்கிறது
மஞ்சள் பூக்களைப்போன்று லாந்தரின் வெளிச்சம்
ஆர்மோனியத்தின் மேகங்களிலிருந்து எழுகின்றது ஸ்வரம்
முற்றத்தில் தெரிகின்றன
காட்டிலிருந்து விறகையும் புல்லையும் சுமந்துவரும் பெண்களின் கால்தடங்கள்.
ஆர்மோனியம்
சங்கீதமற்ற இறுக்கமான உலகில்
பெருக்கெடுக்கும் நீர்போல
மின்னும் விண்மீன்கள்போல
சிறிது காலம் அதுவும் இசைத்துக் கொண்டிருந்தது
அறை நடுவில் வெளிச்சத்தில் அது வைக்கப்பட்டிருந்தது
அதன் காரணமாகவே அந்த இடம் அறியப்பட்டது
எல்லோரும் வந்து அதைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள்
இப்போது அது கிடக்கிறது மற்றப் பொருட்களுக்கு நடுவில்
பித்தளை இரும்பு மரச் சாமான்களோடு
அதை இப்போது இசைத்தால்
துர்கா ராகமோ மலையின் ஸ்வரமோ வெளிப்படுவதில்லை
பெருமூச்சை மட்டுமே கேட்கமுடிகிறது
அவ்வப்போது
நலம்விசாரிக்கவென வரும் ஆட்களிடமிருந்து
காப்பாற்றுவதற்கென்றே
உள்ளே வைத்துப் பூட்டப்படுகிறது அது
பழையப் பெட்டியொன்றில்.
தாத்தாவின் புகைப்படம்
தாத்தாவுக்கு புகைப்படம் எடுத்துக்கொள்வதில் ஆர்வம் இருக்கவில்லை
அல்லது
அதற்கு நேரம் கிடைக்கவில்லை.
அவரது ஒரேயொரு புகைப்படம்
அழுக்கான பழைய சுவரில் தொங்கிக்கொண்டிருக்கிறது.
நீர்சுமந்த மேகத்தைப்போல
அமைதியாகவும் கம்பீரத்துடனும் அவர் உட்கார்ந்திருக்கிறார்.
தாத்தாவைப் பற்றி எனக்குத் தெரிந்ததெல்லாம்
இரப்போர்க்கு பிச்சை இடுபவர்
இரவில் தூக்கத்தின் நடுவில் அமைதியின்றி புரண்டிருப்பவர்
விடிகாலையில் எழுந்து படுக்கையை நேர்த்தியாக மடித்துவைப்பவர்
அப்போது நான் சிறுவன்
அவர் கோபப்பட்டதை பார்த்ததில்லை நான்
சாதாரணமாக இருந்தும் கண்டதில்லை நான்
புகைப்படங்கள் மனிதர்களின் மனச் சங்கடங்களை வெளிப்படுத்துவதில்லை
இரவின் விசித்திர ஜந்துக்களால் சூழப்பட்டு நாங்கள் தூங்கும்போது
தாத்தா புகைப்படத்தில் விழித்திருப்பதாய் அம்மா சொல்வாள்
தாத்தாவைப் போல் உயரமாக வளரவில்லை நான்
அமைதியையும் கம்பீரத்தையும் அடையவில்லை நான்
ஆனால் அவரைப்போலவே எனக்கும் வாய்த்திருக்கின்றன
அவரைப்போலவே கோபமும்
அவரைப்போலவே சாதாரணமாக இருப்பதும்
தலையைக் குனிந்தபடியே நானும் நடக்கிறேன்
புகைப்படத்தின் காலிச்சட்டமொன்றில் இருப்பதை நான்
உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
தொடுகை
உனக்கு முன்னாலிருக்கும் மேசையின் மீதிருக்கும் பொருட்களைத் தொடு
கடிகாரம் பேனாத்தாங்கி ஒரு பழைய கடிதம்
புத்தர் சிலை பெட்ரோல்ட் பிரெக்ட் சே குவேராவின் படங்கள்
இழுப்பறையைத் திறந்து அதன் பழம் துக்கத்தைத் தீண்டு
சொற்களின் விரல்களைக்கொண்டு காலியாகவுள்ள காகிதத்தைத் தொடு
வான்காவின் ஓவியத்தில் சலனமற்ற நீர்ப்பரப்பில்
உயிர்ப்பின் சலசலப்பை உண்டாக்கும் கூழாங்கல்லைப்போலத் தீண்டு
உன் நெற்றியைத் தொட்டு வெகுநேரம் இறுகப் பற்றியிருக்க நீ கூச்சப்படவேண்டாம்
தொடுவதற்கென யாரும் அருகில் அமர்ந்திருக்கவேண்டும் என்று அவசியமில்லை
தொலைவிலிருந்தும் தொட்டுவிடமுடியும்
தூரத்திலிருந்தே தன் முட்டைகளின்மேல் கண்வைத்துப் பார்த்திருக்கும்
அந்தப் பறவையைப் போல
தயவுசெய்து தொடவேண்டாம், தொடக்கூடாது போன்ற
எச்சரிக்கை வாக்கியங்களை நம்பாதீர்கள்
வெகுகாலமாகவே கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு சடங்கு இது
கொடியும் கோட்டையும் மகுடமும் வஸ்திரமுமாக விளங்கும் மாபெரும் மதகுருமார்களும்
வெடிகுண்டுகளை எறிவோரும் போர்விரும்பிகளும்
ஒருவரையொருவர் பிரித்து வைக்கும் தரப்பைச் சேர்ந்தவர்கள்
அவர்கள் உமிழும் அழுக்குகளையும் குப்பைகளையும்
தொடுவதன் வழியாகத்தான் சுத்தப்படுத்தமுடியும்
தொடுவதனால் எவையும் தலைகீழாக மாறிவிடும் என்றபோதும் தீண்டு
கடவுள் குரு மடாதிபதி பக்தர்கள் சீடர்கள் இவர்களைப்போல
ஒருவர் பிறரது தலையையும் பாதங்களையும் தொடுவதைப்போலத் தீண்டாதே
நெடிய புற்கள் நிலவையும் நட்சத்திரங்களையும் அசைந்து தீண்டுவதைப்போலத் தொடு
உனக்குள் புகுந்து உள்ளிருக்கும் ஈரத்தைத் தீண்டு
இரக்கமற்ற இக்காலத்தில் அது எஞ்சியிருக்கிறதா இல்லையா என்று பார்.
துயில்வதற்கு முன்பு
உறங்குவதற்கு முன்பு நான் அன்றைய நாளிதழ்களை ஒன்று சேர்க்கிறேன்
நாள் முழுவதுமான செய்திகளின் தலைப்புகளை ஒதுக்கித் தள்ளுகிறேன்
கொடூரங்களின் தேதிகளையோ கொலைகளின் நாட்களையோ
நினைவில் கொள்ள விரும்பவில்லை நான்
இந்தத் தேசத்தில் சிந்திய குருதிப்பெருக்கை அறிந்துகொள்ள விரும்பவில்லை நான்
படங்களின் மீது என் பார்வையை ஓட்டுகிறேன்
பாலம் ஒன்று உடைந்திருக்க சமாளிப்புகள் முளைத்தெழுகின்றன
ஒரு முகம் உயிர்ப்பிச்சை கேட்டு கையேந்தி நிற்கிறது
ஒரு மனிதன் நாற்காலியில் அதிகாரச் சிரிப்புடன் அமர்ந்திருக்கிறான்.
இரவு முழுக்க என்னை முறைத்துப் பார்த்திருப்பானா ஒரு சர்வாதிகாரி
இரவு முழுக்க வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு
அறியாத திசையை நோக்கி நடக்கும் குடும்பங்களைக் காட்டுவானா
அதிகரித்துக்கொண்டேயிருக்கும் பூமியின் வெப்பத்தினால்
இரவு முழுவதும் என் மூச்சுத் திணறித் தவிக்குமா
என் மூளையை தன் ஓசைகளால் தட்டிக்கொண்டிருக்குமா கடைத்தெரு
உறங்குவதற்கு முன்பு
மரங்கள் பறவைகள் கட்டடங்கள் மனிதர்கள் என அனைத்தும்
கருப்பு வெள்ளை துயரத்தில் மூழ்கிக் கிடக்க
அன்பு ஒரு சிதைந்த கூட்டைப்போலக் காட்டப்பட்டிருக்கும்
புத்தகங்களை மூடிவைக்கிறேன்
உறங்குவதற்கு முன்பு மிக பயங்கரமான காட்சிகளை நான் வெளியே தள்ளுகிறேன்
ஜன்னல்களை மூடிவிடுகிறேன்
சிகரெட்டை அணைத்துப்போடுகிறேன் தொலைபேசியை துண்டித்துவைக்கிறேன்
காலணிகளை படுக்கைக்கு கீழே தள்ளிவிடுகிறேன்
தூங்குவதற்கு முன்பு ஒரு தம்ளர் தண்ணீர் பருகுகிறேன்
நீரே நீ எஞ்சியிருப்பாயாக எனச் சொல்கிறேன்
ஆழ்ந்த மூச்சை உள்ளிழுக்கிறேன்
காற்றே நீ என் நுரையீரலுக்கும் சுவர்களுக்கும் இடையே நின்றிருப்பாயாக
துயிலுவதற்கு முன்பு நான் கூறுகிறேன்
தூக்கமே நீ எனக்கு நல்லதொரு கனவைக் கொடு.
இந்த எண் உபயோகத்தில் இல்லை
திஸ் நம்பர் ஈஸ் நாட் எக்ஸிஸ்ட்
எங்கே சென்றாலும் எந்த தொலைபேசியில் அழைத்தபோதும்
விநோதமான இந்தக் குரலே ஒலித்திருக்கிறது எப்போதும்
திஸ் நம்பர் ஈஸ் நாட் எக்ஸிஸ்ட், இந்த எண் உபயோகத்தில் இல்லை
சில காலத்துக்கு முன்பு இந்த எண்ணில் பேசமுடிந்திருந்தது பலருடனும்
வாருங்கள் உங்களை எமக்குத் தெரியும்
இந்த உலகில் உங்களுக்கென ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது
என்று அவர்கள் அழைப்பார்கள்.
ஆனால் இப்போது அந்த எண் உபயோகத்தில் இல்லை
அது முன்பிருந்த எண்ணாகிப் போனது
பழைய அந்த விலாசத்தில் மிகச் சிலரே எஞ்சியிருக்கின்றனர்
காலடியோசைக் கேட்டதும் கதவுகள் திறந்துகொள்ளும்
அந்த முகவரியில்
இப்போது அழைப்புமணியை அழுத்திவிட்டு
கொஞ்சநேரம் காத்திருக்கவேண்டியுள்ளது.
கடைசியாக யாரேனும் வெளியில் தென்படும்போது
அந்த நபரின் அடையாளங்கள் மாறியிருக்க வாய்ப்புண்டு
அல்லது அவர் சொல்லக்கூடும்
நீங்கள் சொல்கிற அந்த நபர் நானல்ல என்றோ
நீங்கள் உங்கள் துயரங்களைச் சொன்ன அந்த எண் இதுவல்ல என்றோ
எங்கே சென்றாலும் யாரைப் பார்த்தாலும் மாறிப்போய்விட்டன
எண்களும் முகங்களும் தோற்றங்களும்
சாக்கடைகளில் கிடக்கின்றன பழைய நாட்குறிப்புகள்
அவற்றிலுள்ள பெயர்கள் மெல்ல மெல்ல நீரில் கரைகின்றன
இப்போது புதிய எண்கள் அங்குள்ளன
முன்பிருந்தவற்றைவிட அதிகமாக கம்பிகளுடனும் கம்பிகள் இன்றியும்
அவற்றில் இப்போது வேறுவிதமான உரையாடல்கள்
வியாபாரம், கொடுக்கல் வாங்கல், விற்பதும் வாங்குவதுமான
முகமற்றவர்களுக்கான தொடர்ந்த குரல்கள்
எங்கேனுமொரு இடத்துக்கு சென்று
ஏதேனுமொரு எண்ணைத் தொடர்புகொண்டு
நான் சோர்வுடன் கேட்கிறேன்
திறந்துதான் இருக்கிறது கதவு, உள்ளே வாருங்கள்
நீங்கள் இங்கே தங்கியிருக்கலாம்
விரும்பும் எந்த வேளையிலும்
நீங்கள் வரலாம் இந்த உலகுக்கு
என்றழைக்கும் அந்தக் குரலைக் குறித்து.
மங்களேஷ் டபரால்
உத்தர்கண்டிலுள்ள காபல்பானி என்ற ஊரில் 1948ல் பிறந்தவர். கவிதை, உரைநடை, பயணக்கட்டுரை, மொழிபெயர்ப்பு, பத்திரிக்கையாளர், திரைப்பட கதாசிரியர் என பல்துறை பங்களிப்பாளர். இவரது எழுத்தில் ஆறு கவிதைத் தொகுப்புகள், இரண்டு உரைநடைத் தொகுப்புகள், ஒரு பயண நூல் வெளிவந்துள்ளன. 2000ம் ஆண்டு ஹிந்தி மொழிக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றார். ஹிந்தியில் எழுதப்பட்ட இக்கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து வழங்கியிருக்கிறார் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன்.