மிருது
பா.திருச்செந்தாழை

by olaichuvadi

மாலை நடைபயிற்சி செல்லும் முதிய தம்பதிகள் மிருதுவை விரும்புகின்றனர்
கனிந்த மாம்பழத்துண்டுகளைப் போல உடையத் துவங்கிவிட்ட சதைத்திரள்கள்
சீன பீங்கான்களின் தேவ பழுப்பில் மினுங்கும் பற்கள் கண்கள்
ஆடைகளின் வர்ணங்கள் சப்தமற்ற சொற்கள்
மிருதுவின் இலைகள் அவர்களிடம் காற்றசைக்கின்றன
உலர்ந்து விட்ட இந்த ஏரிக்கரையோர மாலை நடையில் அவர்கள் எல்லாவற்றையும் வியக்கின்றனர்
இன்னும் ஈரம் வழிந்து கொண்டிருக்கும் ஒரு கால்மிதியின் கண்களை
துர்வாடையின் இறுதி தினத்தில் சுவடாகிக்கிடக்கும் சிறு பிராணியின் உடலை
ஒவ்வொரு அழைப்புக்கும் ஒவ்வொரு குரல் மாற்றும் யுவதிகளின் பதட்டங்களை
மேலும் ஒரு மறு திரையிடலைப் போல மௌனித்தியங்கும் தூர நகர்காட்சியை
விதை நீக்கப்பட்ட பழங்களைப் போல அதீதம் வெளிறிய மிருது
கடவுளே, அதனை ருசிக்கப் பழக எவ்வளவு நாட்கள்
முதியப் பெண்ணின் முகம் தேக்கு மரத்தினைப் போல வெயிலை எதிரொளிக்கிறது
அவளது சுருங்கிய உதடுகள்… தவங்கிய முலைகள்… காலத்தில் நைந்து விட்ட அடிவயிற்றின் கோதுமை தானியம்
அவளது புன்னகை இப்பொழுது காதலுக்கு வெளியே
மலை முகட்டின் சிறு பூவைப் போல தெய்வமுகம் ப்ரகாசிக்கின்றன.
கிழிந்த ஷூவையே விரும்பி அணியும் இந்த வழுக்கை கிழவனை
அலுவலக நாட்கள் காயடிக்க முயன்ற போதெல்லாம் அவன்
தனது கள்ளக்காதலியை நாடிச்சென்று தனது நாட்களின் பதட்டத்தையும்
உடலில் விலங்கின் வியர்வையையும் நீட்டித்து கொண்டான்.
இப்பொழுது மாலை நடைபயிற்சி செய்யும் இந்த ஜோடிகளுக்கு இறந்த காலமென்பதே இல்லை
இன்னும் சற்று நேரங்கழித்து வீடு திரும்பும் அவர்கள் குழந்தைகளைப் போல
வினோத வடிவ மாத்திரைகளை வைத்து விளையாடி விழுங்குகின்றனர்
சுவை ஒழிக்கப்பட்ட மாவுக்கரைசலை ஓங்கரித்தபடி செரிக்கின்றனர்
மௌனமாக ப்ரார்த்தனை செய்கையில் ரகசியமாய் நோட்டம் விடுகின்றனர்
பின் மிருதுவாக முத்தமிட்டு, இளஞ்சூடான பாலைப் போன்ற உடலுறவுக்குப் பின் உறங்குகின்றனர்
அதிகாலையில் சிறுநீர் முட்ட விழித்தெழும் போதெல்லாம் தன் இணையின்
தாழ்ந்தெழும்பும் நெஞ்சுக் கூட்டை அவசர அவசரமாக சரி பார்க்கும்போது
அணைக்க மறந்து விட்ட தொலைக்காட்சியில் சில கழுதைப்புலிகள்
நிச்சலனமாய் இவர்களின் உடல்களைப் பார்த்தபடியிருக்கின்றன

பிற படைப்புகள்

Leave a Comment