வே.நி.சூர்யா கவிதைகள்
வே.நி.சூர்யா

by olaichuvadi

நளிர்த்துளி போல் ஒர் இரவு

ஏதோ இருளே சிறகசைத்து பறந்து செல்வது போல
ஒரு காகம் புறப்படுகிறது.
ஒட்டுமொத்த உலகையும்
உலுக்கவேண்டுமென்று எதிர்பார்த்து நிற்கும் அசைவின்மை.
கருநீல விசும்பில் விமானம் இட்டுச்சென்ற புகைநெடுஞ்சாலை.
அச்சாலையின் இருமருங்கிலும் நட்சத்திர மரங்கள்.
சற்றே உற்றுப்பார்க்கிறேன்,
ஆ! அங்கே யாரோயொருவர் தன் மகளுடன் நடந்துகொண்டிருக்கிறார்
தான்தான் இப்பிரபஞ்சத்துக்கு வைத்தியம் பார்த்தவர் என்ற மிடுக்குடன்.
அவருக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு
படுக்கைக்குத் திரும்பினேன்.
தம் பாடல்களை சாளரத்தினூடே
அனுப்பி ஆர்ப்பரித்தன பூச்சிகள்.
நானொன்றும் தீவு இல்லை அல்லவா?

வெறுமையின் பேரெழில்

தான் தனித்திருப்பதாக காலி அலமாரிக்குத் தோன்றுகிறது.
தனக்குள் ஒரு சிறுவன் ஒளிந்திருப்பதாய் கற்பனை செய்ய
மறைந்திருப்பவனை தேடுகிறார்கள் மற்ற சிறுவர்கள்.
சிறுவர்கள் மகிழ்ச்சியில் இருப்பதால் இது விடுமுறைநாளாக
அலைச்சலுக்கு வழியற்ற ஒருவன் வெறுமையில்
தலை கொதிப்படைந்து போய்நிற்கிறான்.
மூலை இருட்டில் ஒரு மூடிய வாய் போல இருக்கும் காலி அலமாரியைப் பார்க்கிறான்.
அதைத்திறந்து உள்ளே போய் சுருண்டு கொள்கிறான்.
அலமாரியை வெளிப்புறமாக எவரோ பூட்டுகிறார்.

சுந்தர இன்மை

வீதியில் சில நாட்களாக இன்மையை வேட்டையாடுபவனைப் போல திரிகிறது ஒரு பூனை. ஆங்காரத்தில் உள்ளபோது பூனையை நீங்கள் முருங்கை மரத்தில் காணலாம். தனிமையும் வெறுமையுமான மனநிலையில் நீங்கள் இருந்தால் ஒரே சமயத்தில் இங்கேயும் அங்கேயும் உட்கார்ந்து அழுதவாறும் காற்றின் சுழற்பாதைகளை உற்றுபார்த்தபடியும் இருப்பதை காணலாம். தன்னைத்தானே வரைந்துகொண்டு உங்களையும் உலகையும் வரையும் மகத்தான தூரிகை அதன் வால். (அதனால் வரையப்பட்டதுதான் எல்லாமே) தருணங்களில் ஒரு வாள். வெறுமைக்கெதிராக தெய்வங்கள் அற்ப மனிதர்களுக்காக அனுப்பி வைத்த நெளியும் வாள். மின்மினிகள் சிறுசிறு மின்விளக்குகளென தாவரங்களை புதர்களை பைத்தியநிலையோடு அலங்கரிக்கும் நள்ளிரவு.. உங்கள் கதவு தட்டப்படுவது போல இருக்கிறது. திறக்கிறீர்கள் . கனவை கைப்பிடியாக கொண்ட மியாவ் மியாவ் என ஒலியெழுப்பும் ஒரு வாள் கிடக்கிறது.

பிற படைப்புகள்

Leave a Comment