Maison de Miroir
இளங்கோ கிருஷ்ணன்

by olaichuvadi

காணும்போதெல்லாம்
நான் அதற்குள் ஒரு தனித்துவமான உலகம்
உண்டென்று நம்புகிறேன்
அது எல்லாவற்றையும்
பிரதிபலிக்கக் காரணம்
எதையும்
தனக்குள் அனுமதிக்க விரும்பாததே
எதையும் தனக்குள் அனுமதிக்க விரும்பாத
இதயம் நான்
தனிமையின் வீச்சமும்
புழக்கமின்மையின் நிசப்தமும்
அடர்ந்த என் இதயத்தின் சுவர்கள்
நிறமற்றவை
முகமற்றவை
எல்லாவற்றையும் பிரதிபலிப்பவை
உள்ளே நுழையவிடாமல்
வெளிப்படுத்திக்கொண்டே இருப்பவை
வெளியேற்றுதலின் கடும் உழைவில்
எங்கெங்கோ அலைந்துகொண்டிருந்தேன்
கனவென்றும் நிஜமென்றும் தோன்றும் விநோதங்களில்
ஆட்டத்தின் விதியறியாது பங்குபெறும்
டேரட் அட்டைகள் போல் இயங்கினேன்
அப்படி
பாண்டிச்சேரியின் புறநகர் பகுதியில் அலைந்துகொண்டிருந்தபோதுதான் அந்த வீட்டைக் கவனித்தேன். பழங்கால பிரெஞ்சு கட்டடக் கலை வடிவில் அமைந்திருந்த புதிய வீடு. அதற்கு முன் அங்கு ஒரு குளம் இருந்தது. சற்றே பெரிய குளம்தான். சிறு வயதில் நாங்கள் –- என் தம்பி, நண்பன் சிபு மற்றும் நான் – அந்தக் குளக்கரையில்தான் மலஜலம் கழிப்போம். மழை வந்தால் குளத்தில் நீர் இருக்கும். இங்கொன்றும் அங்கொன்றுமாய் நிற்கும் கருவேல மரங்களில் கொக்குகள்கூட அமர்ந்திருக்கும். கோடையில் பாளமாய் வெடித்த கருநிலம் தெரியும். நாங்கள் அதில் கிரிக்கெட் விளையாடுவோம். குளத்தின் மறுபக்கம் ஆளுயர நாணலும் எருக்கஞ்செடிகளும் அடர்ந்திருக்கும். அங்குதான் சாராயம் காய்ச்சுவார் மூப்புராயன். பால்யத்தின் தைல வண்ண நினைவுகள் அலையடிக்க பெருமூச்சுடன் Maison de Miroir என்று எழுதப்பட்டிருக்கும் வீட்டை கண்டபோது மனம் ஏனோ பரபரத்தது. பழைய கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தில் பார்ப்பதைப் போன்ற ஒரு காட்சி. அது ஒரு பின்நவீனத்துவ பாணியிலான கட்டடம். வெளித்தோற்றதுக்குப் பார்க்க எந்தச் சிறப்பும் இல்லாத சென்ற நூற்றாண்டின் பழைய கட்டடங்களின் வடிவில் இருக்கும். வெளிப்புறம் உள்ள நுழைவாயிலுக்குள் சென்றால் கட்டடத்தின் முக்கிய பகுதிக்குச் செல்ல மாட்டோம். அதாவது, வீடு என்றால் வரவேற்பறைக்குச் செல்லாது. உட்புறம் பிரதிபலிப்பு அதிகமாக பாவிக்கப்பட்டிருக்கும். இந்த Maison de Miroir வாசலில் ஒரு வேப்பமரம் நின்றிருந்தது. பாதுகாவலர்கள் யாருமே இல்லை. காம்பவுண்ட் சுவர்கள்கூட இல்லை. முள்வேலிதான் அமைத்திருந்தார்கள். சாலையில் இருந்து சற்று விலகி இருந்தது வீடு. பராமரிக்கப்படாத ஆஸ்திரேலிய புல்வெளிகள் காய்ந்துபோய், ஆங்காங்கே சிறு நெருஞ்சிகள் தலைகாட்டிக்கொண்டிருந்தன. இடையே நீளும் ஒற்றையடிப்பாதையில் போனால் வீட்டு வாசல். சி.டி வட்டு போன்ற வடிவில் ஆளுயரம் இருந்தது கதவு. கையை வைத்துத் தள்ளவும் திறந்துகொண்டது. ஒரு கணம் தயங்கிவிட்டு உள்ளே நுழைந்தேன். அது ஒரு பெரிய அறை. எதிரில் யாரோ நிற்பதைப் பார்த்தேன். யாருமில்லை நானேதான். சுவர்களின் அனைத்துப்பக்கமும் மேற்புறமும் பிரதிபலிப்பு. தரை முழுதும் தண்ணீர். அறையின் இடது மூலையில் ஒரு படிக்கட்டு இருந்தது. சில்லிடும் நீரில் கால்வைத்து நடக்கத் தொடங்கினேன். எந்த இடத்தில் எவ்வளவு ஆழம் தெரியவில்லை. தண்ணீரில் விழும் என் உருவம் நடையால் சலனமுற்று நெளிந்தது. மேலே பார்த்தேன். தண்ணீரில் நெளியும் பிம்பமும் நிஜ பிம்பமும் குழைந்துகொண்டிருந்தன. பக்கவாட்டு சுவர்களின் முடிவிலியான பிம்பங்கள் அனைத்திலும் நிறைந்திருந்தேன். நீரில் நடந்து படிக்கட்டை நெருங்கினேன். படிக்கட்டும் பிரதிபலித்தது. படிக்கட்டில் ஏற ஏற மேற்புறம் இருந்த பிரதிபலிப்பில் தண்ணீரின் படிக்கட்டுக்குள் இறங்கிக்கொண்டிருப்பவனைப் பார்த்தேன். ஒரு கணம் நான் நடப்பதை நிறுத்திய பிறகும் அவன் இறங்கிக்கொண்டிருப்பதாக தோன்றியது. அச்சத்துடன் படிக்கட்டிகளில் இருந்து இறங்கி கதவை நோக்கி நடந்தேன். தண்ணீர் சலசலக்க ஓடினேன். சுவரில் கதவு இருப்பதன் தடயமே இல்லை. பிரதிபலிப்பு மட்டுமே இருந்தது
நார்சிஸ் பூக்கள் நிறைந்த குளம் ஒன்று
என் கனவில் வரும்
அறுபட இயலா காமத்தில்
நான் என்னையே அந்தக் குளத்தில்
பார்த்துக்கொண்டிருப்பேன்
நீர்வானத்தைப்பிரதிபலித்துக்
கொண்டிருக்கவில்லை
அது வானத்தை தனக்குள் உருவாக்கிக் கொள்கிறது

பிற படைப்புகள்

Leave a Comment