பெரு. விஷ்ணுகுமார் கவிதைகள்
பெரு.விஷ்ணுகுமார்

by olaichuvadi

 

வருக்கு புகைக்க வேண்டும்போல
பாக்கெட்டைத் தடவுகிறார்
வெகுநேரமாய் தேடுகிறார்
எதுவும் சிக்குவதாயில்லை
எல்லா பாக்கெட்டின் மூலையும் அவரைக் கைவிட்டது
கடைசியில் வெறுங்கையின் இரு விரல்களை
வாயினருகே கொண்டு சென்று
பற்றவைப்பதைப்போல் பாவனை செய்தவர்
புகையூதுவதாய் இதழைக் குவித்து
நரம்புகள் குளிர்காய, ஆழ சுவாசிப்பதாய்
நான்தான் ஒருவேளை நம்பிக்கொண்டிருக்கிறேனா…?
அவரின் தோளைத் தட்டியழைத்த ஒரு பெண்
“கொஞ்சம் அந்த பக்கம் சென்று
பிடியுங்களேன்” என்கிறாள்

என்ன நடக்கிறது இங்கே

இவரும் மன்னிப்பு கேட்டபடி அதைக் காலடியில்போட்டு
மிதித்துவிட்டு
அருகில் வந்து கைகுலுக்கிவிட்டுச் சொன்னார்
” நன்றி நண்பா புகைவைத்ததற்கு”

 

முதல்தடவையாக எட்டிப்பார்த்தேன்
கரையிலிருந்து பார்க்கும் முகம் தெரிந்தது
இரண்டாம் முறையாக எட்டிப்பார்த்தேன்
கூட்டிலிருந்து பார்க்கும் என்முகம் தெரிந்தது
இன்னொருமுறை எட்டிப்பார்த்தேன்
தெரிந்தவையெல்லாம் அப்படியே இருந்தது
மீண்டும் மீண்டும் பார்த்தபடியே இருந்தேன்
எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த நான்
எழுந்துபோன பின்பும்

 

ல ஆண்டுகளுக்கு பிறகு தொலையப்போகுமொன்றை
தேடிக்கொண்டிருந்தாள்
என்னவென்று யாரையும் கேளாது
யாரிடமும் கூறாது
எடுத்த எடுப்பிலேயே எல்லாம் கிட்டிடுமோ
அடுத்த வருடத்தில் திருமணம் நடந்தது
அன்றுமுதல் கணவனோடு சேர்ந்து
தேட ஆரம்பித்தாள்
சில வருடத்தில்
இரண்டு குழந்தைகளும் உடன் சேர்ந்துகொண்டனர்
மூப்பேறியது
அடுத்தடுத்து மூன்று தலைமுறையானது
குடும்பமே ஒன்றிணைந்து தேடியும்
எதைத் தொலைத்தோமென்று
யாரும் அறிகிலர்
பிறகு பார்வை மங்கி
படுத்த படுக்கையாகிவிட்டவள்
இறுதி கணத்தில்
அனைவரையும் அழைத்து
இன்னும் எத்தகு காலமானாலும் சரி
நீங்கள்தான் எப்படியாவது
கண்டறியவேண்டுமென
மகனிடம் சத்தியம் வாங்கிக்கொண்டாள்

அப்போது அருகிலிருந்த அவன் மனைவி
‘அது என்ன நிறத்திலிருக்குமென்றாவது
கேளுங்களேன்’ என்க,

எப்படியும் தேடத்தானே போகிறோம்
நிறத்தையும் சேர்த்தே தேடிவிட்டால் ஆனது

பிற படைப்புகள்

Leave a Comment