காப்பி நிறச் சிறகு
மெதுவாக விசிறி
அசைந்து கொண்டிருந்தது
அடிபட்டக் கழுத்தை முதுகிற்குத் திருப்பி
சற்று முன்புதான்
வனாந்திரச் சாலையை
தத்திக்குதித்து இணையைத் தேடி
கடந்திருக்கக்கூடும்
குழம்பாய்த் தகிக்கும்
செக்கச் சிவந்த கண்கள்
இரண்டு நிமிடம் அசையாமல் நின்றிருந்தேன்.
செம்ப்போத்து உரைத்தது;
“அத்தனைக் கண்களின் சிதையில்
இறப்புக்கு முன்வரைக் காணா நிர்வாணநிலை
மனிதர்களுக்கு மட்டுமே
இக்கொலை உன் சகோதரனின் பரிசு”
மாடு மேய்க்கும் துறை
ஒரு படையலில் ஆண்டுக்கும் வயிறு நிரப்பிக்கொள்ளும் கருப்பன்தான்
முட்டைக்கண்களை வீசி கண்மாய்க்கரை மந்தையைக் காவல் காக்கிறான்.
கருவேல மரத்தடியில் அவன் காலடியில் இளைப்பாறல்.
அலகில் ஏறுவெயிலை நிதானமாய் உறிஞ்சி பறக்கும் மைனாவின் ஒலி
காதில் புகுந்து வெளியேறி பனைமர வரிசைகளில் இசிவி மறைகிறது.
மாடுகளைக் கூட்டிக்கொண்டு வந்தவன் மேயவிட்ட பிறகு
ஊருக்கு இளைத்த ஆண்டியின் குறுகுறுக்கும் கண்களை நோட்டமிட்டு
அரிவாள் தூக்கி நிற்கும் கருப்பனை ஏறிட்டு விசாரித்தான்.
பிறகு வந்த பாதையில் தன் வீடுநோக்கி நடந்தான்.
சாட்டையை தூக்கும்படியான பரிணாம வளர்ச்சி மனிதனுக்கு.
அசட்டைகாட்டி வால்சடையைச் சுழற்றும் மாட்டிற்குப் பசும்புல்லே குறி.
நிலம் நோக்கும்படியான ஆதிக்குனிவு.
பிள்ளையின் கால்விரலைத் தாய் சொடுக்கிடுவதாய் எண்ணும் புற்கள்
பசுவின் சுரசுரப்பான நாக்கின் ஈரத்தில் நுரைக்கிறது.
மாட்டின் வியர்வை மேய்ப்பன் மீதும்
மேய்ப்பன் வியர்வை மாட்டின் மீதும் மணக்கும் பந்தம்.
சிறுமழைத் துளியும் கனத்துவிழத் துவங்குகையில்
அவனது தோள் மயிரனைத்தும் பச்சைப் புற்களாய் எழும்பி நிற்கும்.
மாட்டுப் பண்ணை வைக்கவேண்டுமென்று அந்தச் சிறுவயதில்
விருப்பத் துறையை சுற்றத்தாரிடம் சொல்லும்போது சிரித்தார்கள் அனைவரும்.
நேற்று கொசுவம் வைத்த சேலைகட்டிய அம்மாச்சி
“சீக்கு வந்தா பேதி வந்தா மின்னாடியா சொல்லுமா
மேய்க்கது பால் கறக்கது வித்துமுதல் ஆக்குதது
அம்புட்டு லேசுல ஏலுமா ராசா”
பொக்கைவாயால் குழந்தைச் சிணுங்கலில் சிரித்தவள்
அதாமீறி மாட்டு வயித்துக்குள்ள குடியிருந்தால்லா மிடியும்”
ஆட்காட்டி விரலால் கொக்கிபோட்டுச் சொன்னதை
கருவேலம் நிழலசைத்து வழிமொழிந்தது.
3
இதுவரை பணம் காய்க்கும் மரத்தினடியில் ஒதுங்கியதில்லை ததாகதன்.
ஞானக்கனிகள் கொழிக்கும் போதியினடியில் காத்திருந்தான்
அதுவாகவே உதிர்க்கும் கணத்திற்காக
மன்றாடி உந்தியினடி வைத்த கையை எடுக்காமல்.
வழியில் குதிரையில் சென்ற வன வேட்டைக்காரன்
எள்ளலாகக் கூறினான். “முட்டாள் முட்டாள்
ஆயிரம் வழியிருக்கு இக்கனிகளைப் பணமாக்க” வென்று.
எங்கிருந்தோ வந்த ஒரு பறவை. வெகுதூர தேசத்துப் பயணி
வழியில் சற்று இளைப்பாறிவிட்டு கிளையிலிருந்து விருட்டெனப் பறந்தது.
இதுவரை பார்த்திராத பருமன் பேரழகு
ஒய்யாரக் கொண்டை பொன்னலங்காரச் சிறகு.
ஞானத்தின் வேரைச் சடையெனப் பின்னிக்கொண்டிருந்தவன்
சட்டென எழுந்தான். எங்கே பணங்காய்க்கும் மரம்ஞ்
லாரியில் வெட்டியடுக்கி நிறைத்த
முண்ட பண்டங்களை ஏற்றிச்சென்றவனிடம்
“கடனாகக் கொஞ்சம் பணம் கொடேன்..
பணம் காய்க்கும் மரக்கன்று வாங்க” வென்றான்.
வாங்கிய மறுகணத்திலிருந்து கைநடுங்க அவயங்கள் ஒடுங்க
கவனம் முழுதும் லாயக்கில்லாத இருப்பில்.
“உனக்குப் பேண்ட்சட்டை ஒரு கேடு. அதிலொரு பேனா” மனைவி.
“இப்படித்தான் கடன்காரன் முன்பும் சிறு பாசாங்கு கலந்தவொரு
கற்பனா பணிவு வேண்டியிருந்தது செல்லமே
வானம்ஞ். வானமே தலைகுனிந்து நிற்பது போல.”
“இந்த ஓட்டப் பீத்தலுக்கொன்றும் குறைச்சலில்ல
மெய்யாம் பொய்யாம்ஞ் உப்புபுளி காரத்தில் மண்ணாங்கட்டி சேர்த்தியாஞ்”
பாத்திரங்கள் தரையில் உருண்டன. அவனது தலைகளாகவும்.
ஓங்காரச் சிரிப்பில் இயம்பினான் ததாகதன்
உருண்டாலும் புரண்டாலும் தலை தலைதான்.
4
ஒரு வீட்டில் ஒட்டடை
சுத்தப்படுத்தப்படும் பணி
வாசற்படியில் கூண்டுக்கிளி.
இறக்கை வெட்டி
சிறைவைத்தவர்கள் மீது
இந்தக் கிளிகளுக்கு
பெருங்கோபமும், சீற்றமும்
ஏன் வருவதில்லை.
அந்தக் கிளியியைக் காட்டி
தன் பிள்ளையிடம் அம்மா
அது பொய்க் கோபத்தில்
செல்லச் சடவில் இருக்கிறதென்கிறாள்.
அப்படி ரசிக்கச் சொல்லும்
இழைகளில் நெய்துகொண்டிருக்கிறாள்
தானறிந்தும் அறியாமல்
ஒரு செல்லக் கூண்டு.
பேவநத்தம் மலையாந்தம்
அ.
நறுமணத்தைலம் தயாரிக்கும் தொழிற்சாலை கூலியாக
இலையுதிர்கால மலைவிளிம்பில் புலிக்குத்திப்பட்டான்.
கடல் மட்டத்திற்கு மேல்1100 மீட்டர் உயரத்தின்
வழுக்குப் பாறையின் விளிம்பில் நின்று
நீளக்கம்பால் லாவகமாக
புலியின் பற்களைத் தட்டுகிறான்.
உதிர்கின்றன ப்ளுமெரியா ருப்ரா மலர்கள்.
எந்நேரமும் தலைவனுடன்
புலியின் வாய்க்கு இரையாகத் தயாரானதுபோல
உடன்போக்கில் அவன் தலைவி.
ஆ.
பாறையே மேனியாக அமர்ந்த நிலையில்
நரைத்த தாடியை நீவிக்கொண்டே
மொத்தக் காட்டையும்
வேவுபார்த்துக் கொண்டிருக்கிறான் முதுகிழவன்.
இடப்பக்கத் தோளில் குடியிருக்கும்
பெருந் தேன் கூட்டிலிருந்து
தேன்குடித்த மயக்கம் முகத்தில்.
இ.
சிற்பியின் கண்கள் எமக்கு.
உடும்பு ஓணான் ஆமை எங்கு நோக்கிலும் யானைகள் – ஆமாம் யானைகளையும் கண்டோம். பிளிறலைக் கேட்டோம்.
வனதேவதையின் தடந்தோள் போர்வீரர்கள்
பல்லாயிரம் மைல்கள் குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும்
வலசையில்தான் மிச்சமிருக்கின்றன காடும் நீரும்.
அவர்கள் தும்பிக்கை நீட்ட கைகுலுக்கிக் கொண்டோம்.
மத்தகங்களில் ஏறி விளையாடினோம்.
உச்சிக் குடும்பியாய் வான்தொட்டு நிற்கும்
செங்குத்து கற்கள் ஐந்தும் சுயம்புவான நடுகற்கள்.
மண்டியிட்டுத் தலை வணங்கித் தரையிறங்கினோம்.
6
யாருமற்ற தெருவில்
என்ன நடக்கிறது எல்லாம்.
நகுலா…
வெயில்தான் நடந்து செல்கிறது.
அதன் மேனியில்
வெள்ளி ஒளியும்
கரும்பச்சை நிழலுமாக
மாறிமாறி
இலைமீன்கள்
புரண்டபடி சலனிக்கின்றன.
வாகன ஹாரனுக்கு ஒத்திசைக்க
பறவைகள்
தனி ஆவர்த்தனம் பண்ணுகின்றன.
ஆம் தேவதச்சன்
புற்களுடன் மட்டுமா
வெயிலுடனும்
கூடவே நடக்கிறேன்.
தெருநாய்களுக்காக இரங்காதீர்கள்
எல்லோருக்கும் செல்லமான ஏரியா வாசிதான்.
இனம்புரியாத கிறுக்கு. யாரைக் கண்டாலும் கடித்தது.
அடிமைகளின் அடிமை வாலை ஆட்ட மறக்கலாமாஞ்
மாநகராட்சி ஊழியன் கழுத்தில் சுருக்கிட்டு
தரதரவென்று இழுத்துச் சென்று குப்பைகளோடு வீசி எறிந்தான்.
“வெள்ளை அங்கி இதயங்களை அழைத்திருக்கிறேன்
கனிவுபொங்க மருந்துகொண்டு வருகிறார்கள்” என்று
ஒருபகல் ஒரிரவாய் குற்றுயிரும் குலையுயிருமாக
மின்னிட்ட பற்களால் உறுமிக் கொண்டிருந்த உயிரிடம்
மாளாது சொல்லிக் கொண்டேயிருக்கிறான் அதன் காதலன்.
மாத்திரையுடன் கலந்த குளுக்கோஸ் நீரை
சிரிச்சிலிருந்து வாய்க்குள் பீய்ச்சியபடியே இருக்கிறான்.
அதன் மெளனக் கேவலுக்கு வானும் மண்ணும் விடையளிக்கவில்லை.
காத்திருந்த எறும்புகள் ஊறத் தொடங்கின வாயமுதில்.
துரத்தும் பணிச்சுமைகளுக்கிடையில் திகைத்து நிற்கின்றீர்
அற்பமாய் சாலையோரம் வீசப்பட்ட சடலம் நீங்களல்ல
உங்களால் கொல்லப்பட வில்லையென்றும் ஆறுதலடைகின்றீர்
பாவனைத் துக்கத்தில் கடந்து செல்கின்றீர்.
வழமைபோல் அனிச்சையாய் வாலை ஆட்டும்
காலைச் சுரண்டுகிறவைகளுக்குப் பிச்சையிடுங்கள்.
செல்லமாகத் தடவிக் கொடுங்கள்.
கண்ணை இமை காப்பதுபோல் உம்மைக் காக்கும்
‘விலை மதிப்பில்லாத’ நண்பனல்லவாஞ்
8
உனக்கு இளைப்பாறலைத் தருகிறேனென்று
ஏன் அழைத்துக் கொண்டேயிருக்கிறது அவ்விடம்.
தேர்ந்து அமரும் பறவை அறியுமா
எண்ணிறந்த இணைகளின் மனமொத்த நாட்டங்கள்
முரண் நாடகங்கள்
விட்டுச்சென்ற நினைவுகளாலான
பாதியில் கைவிடப்பட்டோ
இருகுழுக்களின் போரிலோ
காலத்தின் பூஞ்சையேறியோ
சிதிலத்தின் மாயபிம்பங்கள்
உருக்கொள்ளும் பலிபீடம் அதுவென்று.
செம்மையாகக் கட்டிமுடிக்கப்பட்ட நவீன மாளிகைகள்
தடமழியும் பயணத்தைத் தொடங்கிவிட்டன.
வானம் நோக்கி ஒரு மின்னல் வாளுக்காக
தவங்கிடக்கும் தடமழியா பலிபீடம் அது.
புராதனக் கட்டுமானங்களின் நிழல்களை நோக்கிப்
பறக்கும் திசைகளிலெல்லாம்
உலகியல் முரண்கள் வெந்துதணிய
நறுமணப் புகைத்தூபங்கள்.
குரங்குச் சாமியாரின் அருள்வாக்கு
கண்காணிக்கும் படைவீரர்களென
கடவுளை வணங்க நுழைவுச்சீட்டு கொடுக்கும் அலுவலர்களென
வீற்றிருக்கும் குரங்கு வம்சத்தாருக்கு
பத்திரம் எழுதப்படாது பாத்தியப்பட்ட கோவிலது.
கைப்பற்றிய மூட்டைகளிலிருந்து பணத்தைத் வீசியெறிந்து
புளியோதரை, வடைகளைக் காணிக்கையாகப் பெறுகின்றன
தூண்களும் கோபுரமும் அதன் ஆதிகாலப் பற்றுக்கொடிகள்.
தன் இணையைச் சேரும் தேர்வுக்குத் தடையில்லை.
காலநேர குறுக்கீடுகள் இல்லை.
இந்திரியத் துளிகளால் கோபுரச் சிற்பங்களுக்கு அபிசேகம் நடத்துகிறது
பக்தர்களின் நம்பிக்கைகளை வால்கொண்டு அளக்கிறது.
மஞ்சள் பையிலிருந்து ஒரு வாழைப்பழத்தை எடுத்துத்
தாய் மகனிடம் தருகிறாள். மகன் குரங்கிடம்.
ஈரக்காற்று மென்மயிர் மேனி தழுவ
எண்ணைய் தேய்க்காத செம்பட்டைத் தலைச்சுழியில்
ஒளிவட்டம் மின்னி மறைய
தியான ஒழுங்கில் வெள்ளை லிங்கத்தை
உரித்துத்தின்ற குரங்குச் சாமியார்
தோலை முன்னே வீசியெறிய
அதுவொரு மந்திரச் சொல்லென விழுகிறது.
எடுத்துப் படிக்குமுன்னே தோஷம் நிவர்த்தியுற்றதென
கசியும் கண்ணீரோடு கூட்டிச் செல்கிறாள் அம்மா.
மூக்கைப் பிடித்து பாபவிநாசப் படித்துறை நதியில் மூழ்கியெழுந்து
படியேறும் ஈரச்சேலை முதிர்கன்னியரை
அனிச்சையாய் தலைதிருப்பி நோக்கித் தேம்பிச் செல்பவனை
கல் ஆசனத்தில் அமர்ந்து உற்றுநோக்கும் குரங்குச் சாமியார்
மனித சூத்திரங்களின் புதிர்மை விளங்காமையால்
சற்று களைப்புற்றுத் தலையைச் சொறிகிறார்.